Monday, January 9, 2017

மாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்

2 கருத்துக்கள்
அடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அரங்கேறிவருகிறது. 

தரம் 5 பரீட்சையில் சித்தியெய்திய மாணவனிடம் உனது எதிர்கால இலட்சிம் என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதே கேள்வியை கேட்கும் ஊடகவியலாளர்கள் தரம் 5 இல் தாங்கள் படிக்கும் போது எப்படியான பதிலை கொடுத்திருந்தார்கள் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. 

( நான் தரம் 5 இல் படிக்கும் போது, இன்ஜினியர் என்றால் இன்ஜின் திருத்துபவர் என்றுதான் சொல்லுவேனாம். இன்ஜினியர் என்றால் என்ஜின் திருத்துபவர் என்ற எண்ணம் இருந்ததே போதுமென்று நினைக்கிறேன்)

தென்னிலங்கை கல்விச் சூழலிலோ அல்லது வேறெந்த கல்விச் சூழலிலுமோ இல்லாத திணிப்பும் கட்டியெழுப்பப்படும் விபரீதமான மாயைகளும் தமிழ்ச் சூழலில் அதிகம். 

தேசிய பரீட்சைகளில் சித்தியெய்தும் மாணவர்கள், வெறுமனே பரீட்சைக்கு பட்டை தீட்டப்படும் கல்விச் சூழலில் இருந்து வெளியே வருபவர்கள். சமூகம் மற்றும் ஊடகங்களை கையாளும் முறைபற்றிய முதிர்ச்சியற்றவர்கள். இப்படியான முதிர்ச்சி அற்றவர்களை உசுப்பேற்றி, அவர்களின் உணர்ச்சிகளை விளம்பரப்படுத்தி இன்பம் காணும் ஊடகவியலாளர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் அடிப்படை ஊடக கல்வியைக் கூட முடித்திராதவர்களாய் இருப்பார்கள். 

ஒருவன் தான் நினைப்பதை அப்படியே மக்களிடம் சொல்வதற்கு ஊடகம் தேவையில்லை. ஒரு முச்சக்கர வண்டியில் லவுட்ஸ் பீக்கரை கட்டிக் கொண்டு ஊர் ஊராக சென்று ஒப்பாரி வைக்க முடியும். 

ஆனால் ஊடகம் என்பது, எதை எப்படி சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நெறிமுறை (ethics) கொண்ட துறை. இந்த அடிப்படை நெறிமுறை தெரியாத தறிகெட்டவர்களால்தான் இன்று ஏராளமான சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன

அண்மையில் வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில், சித்தியெய்திய மாணவர்களை பேட்டிகண்டு வெளியிட்டது தமிழ்வின் மற்றும் DAN TV என்கிற ஊடகங்கள். ஆரம்பத்தில் செய்திக் களமாகவும் கட்டுரைகளின் களமாகவும் இருந்த தமிழ்வின் இன்று விளம்பர ஊடகமாக மாறியிருக்கிறது. DAN TV பற்றி சொல்லவே தேவையில்லை. இவர்கள் யார் என்பது ஊரறிந்த உண்மை. இப்படியான விளம்பர ஊடகங்களிற்கு பரபரப்பு முக்கியம். 

இப்படியான பரபரப்பிற்கு, உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்களை பேட்டி கண்டு வெளியிடுவது புது றென்ட் (trend). 

இந்த வகையில், உயிரியல் தொழினுட்பப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது இடத்தைப் பிடித்த உருத்திரபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் தார்த்திக்கரன் என்ற மாணவனின் பேட்டியை வெளியிட்டு அதி உச்ச லாபம் அடைந்தது தமிழ்வின் மாத்திரமல்ல முகநூல் போராளிகளும்தான். 

தரம் 11 வரைக்கும் தரமான கல்வியைக் கொடுத்து, உயர்தரம் செல்வதற்கான பாதையை அமைத்துக் கொடுத்த பாடசாலை சமூகம் மீது மகேந்திரன் தார்த்திக்கரன் பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்றதான கானொலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அந்த பாடசாலை சமூகம் மீதும் முகநூல் புரட்சியாளர்கள் வசைபாடும் நிலையை ஏற்படுத்தியது. 

உருத்திரபுரம் என்பது மிக நெருக்கமான நட்பு வட்டத்தை கொண்ட, எல்லோரையும் உறவுகளாக மதிக்கும் பண்பு கொண்ட பாரம்பரிய கிராமம். எல்லோருடனும் உரிமையுடன் நட்பு கொண்டாடவும் கோபித்துக் கொள்ளவும் முடியுமான கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான நட்பும் உறவு நிலைகளும் வெறும் மாணவர் ஆசிரியர் என்ற நிலைக்கு அப்பாலானது. 

நான் கூட அடிவாங்காத ஆசிரியர்களோ திட்டுவாங்காத ஆசிரியர்களோ கிடையாது. வீட்டில் எப்படி தமது பிள்ளைகளை, தமது சகோததர்களை அதட்டுவார்களோ, திட்டுவார்களோ அதே போல்தான் பாடசாலையிலும் திட்டுவார்கள் அடிப்பார்கள். அதற்காக அவற்றையெல்லாம் மனதில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இன்றைக்கு செமையாக அடித்துவிட்டு அடுத்தநாள் எதுவுமே நடக்காதது போல் உறவாடக்கூடிய சொந்தங்கள் நிறைந்த சமூகம்தான் உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலைச் சமூகங்கள்.

தவிர உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலைச் சமூகங்களானது மிக அர்ப்பணிப்புடன் செயற்படும் சமூகங்கள். ஊடகங்கள் தகவல்களை வெளியிட முன்னர் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

தமது பரபரப்பிற்காக மகேந்திரன் தார்த்திக்கரனின் பேட்டியை வெளியிட்ட ஊடகங்கள், மகேந்திரன் தார்த்திக்கரன் குற்றம் சாட்டியிருக்கும் பாடசாலையில் இருந்து அறிக்கை பெற்று அந்த மறுப்பையும் வெளியிடுமா?

இந்த வீரகேசரி நிருபர் எஸ்.என்.நிபோஜனுக்கு உருத்திரபுரத்தைப் பற்றி என்ன தெரியும் என்று தெரியவில்லை. 
(" 'நீ உருப்பிட மாட்டாய்' என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி" இப்படி போட்டிருக்கினம். தார்த்திக்கரன் தான் பதிலடி கொடுப்பதாக எங்காவது சொல்லியிருக்கிறானா? இந்த ஊடகவியலாளர் அடைமொழியை சேர்த்திருக்கிறாரா? )


விடையத்திற்கு வருகிறேன்!

மகேந்திரன் தார்த்திக்கரன், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மதனளவில் பாதிக்கப்ட்டிருக்கலாம் அதற்காக பழி போடும் விதமான பேச்சுக்கள் வரவேற்கத்தக்கவை அல்ல. இது இந்த வயதில் எழக் கூடிய உணர்ச்சிகர சம்பவம் என்றாலும், தனக்கான அடிப்படைக் கல்வியை ஊட்டி உயர்தரத்திற்கு அனுப்பிவைத்த பாடசாலைச் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில்தான் தான் கல்வி கற்றேன் என்பது போன்றதான முதுர்ச்சியற்ற பேச்சுக்களை ஊடகம் வெளியிடுகவை தவிர்த்திருக்க வேண்டும்.

தனது முதிர்ச்சியற்ற கருத்தை நினைத்து மகேந்திரன் தார்த்திக்கரன் பின்னர் வருந்தக் கூடும் ஆனால் தனது கருத்தை பரபரப்பாக்கி அறுவடை செய்த ஊடகத்தின் மீதோ, ஊடக கல்வியற்ற ஊடகவியலாளர் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது போகும். 

தரம் 5 பரீட்சை, தரம் 11 பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் சித்தியெய்தும் மாணவர்கள் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் அவற்றை அனுமதிக்கக் கூடாது. 

ஊடகம் என்பது மிக நுட்பமான, நேர்மையாக மிக முதிர்ச்சியுடன் செய்ய வேண்டிய கலை. 

விபத்துகளில் இரத்தம் வழிய சிதைந்து கிடக்கும் உடலங்களின் புகைப்படங்களை பிரசுரிக்கும் போது "இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்" என்று போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லா மடையர்கள்தான் தமிழ் ஊடகப்பரப்பில் அதிகம். எனவே மாணவர்கள் தமது உணர்ச்சிகளை ஊடகங்களில் கொட்டக் கூடாது. 


அறிவும் முதிர்ச்சியும் தான் சரியான பதிலை கொடுக்கும். அவசரமும் சிறுபிள்ளைத் தனமான ஆதங்கங்களும் அறிவை மறைக்கும். 


மா.குருபரன்
09-01-2017

தகவல் தொடர்ச்சி

இது தொடர்பான முகநூல் விவாதங்கள்:  https://www.facebook.com/mkuru21/posts/10154361148962998

குறிப்பு: தமிழ்ச்செல்வன் என்ற ஊடகவியலாளர், //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது இது நன்கு திட்டமிடப்பட்டடே தார்த்திகரனை குறிவைத்திருக்கிறார்களா என்றே சந்தேகம் எழுகின்றனது. 

ஆசிரியர்கள் மற்றும் மக்களின் கருத்தை வெளிப்படையாக வெளியிடாமல், ஒரு மாணவனை குறிவைத்து இந்த ஊடக வியாபாரம் நகர்ந்திருக்கிறது. எனவே எதிர்வரும்காலங்களில் பெற்றோர்கள், பெரியவர்கள் இந்த குறைகுடங்களாக இருக்கும் ஊடகவியலாளர்களிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும். 

தவிர:

11-01-2017 அன்று முகநூல் பக்கங்களில் இடம்பெற்ற முக்கிய கருத்துப்பரிமாற்றங்களை கீழே இணைத்துள்ளேன்.

சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் முகநூல் விளக்கங்களும் அதற்கான எனது பதில்களும் கீழே உள்ளன.










Kuruparan M Kuru: மேலே குறிப்பிட்டிருக்கும் பதிவுகளுக்கு உருத்திரபுரம் கிளிநொச்சி என்ற முகநூல் பக்கத்தில் நான் இட்ட பின்னூட்டம்:
...............................................................................................................

SN Nibojan www.kuruparanm.com என்பது முகவரியற்ற இணையம் அல்ல. இது என்னுடைய வலைத்தளம்.

உருத்திரபுரத்தின் மூலைமுடுக்குகளின் உணர்வுகளைத் தெரிந்த, இந்த நிலத்தின் பிள்ளை என்ற ரீதியில் உங்களின் நெறிமுறையற்ற ஊடகத் தன்மை குறித்து கேள்வி எழுப்ப அத்தனை உரிமையும் எனக்கு உண்டு.

தனிப்பட்ட ஒரு சிலரின் கருத்தை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையே கேள்விக்குப்படுத்துவது போன்றதான செய்திகளை புனையும் அற்பத்தனமான ஊடகவியலை உங்களுக்கு கற்பித்த நிறுவனம் எது என்று கூட கேள்வி எழுப்பும் உரிமை ஒவ்வொரு சராசரி மனிதனுக்கு இருக்கிறது என்ற தார்பரியத்தை உணர்ந்து கொண்டு கீழே வாசிக்கவும்.

1. இலங்கையின் பல பாகங்களிலும், பலதரப்பட்ட மக்களுடனும் பழகியவன் என்ற ரீதியில், இலங்கையின் பல தெருக்கள் பற்றிய கதைகள் கூட என்னிடம் இருக்கிறது. வாரம் ஒருமுறை பேட்டியெடுத்து அதை அப்படியே, சில அடைமொழிகளையும் சேர்த்து உங்களின் பத்திரிகையில் பிரசுரிப்பீர்களா? அல்லது அதுபற்றி ஆய்வு செய்து அதன் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கங்களை புரிந்து கொண்டு, ஊடகவியலாளராக அதை கையாண்டு பிரசுரிப்பீர்களா? எது முறை?

("நீ உருப்பட மாட்டாய்' என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி" என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள்.. தார்த்திக்கரன் இது தனது பதிலடி என்று உங்களிடம் சொன்னான? அல்லது நீங்கள் அடித்துவிட்ட அடைமொழியா?

கடந்தகாலங்களில் வீரகேசரி ஊடகம் இப்படியான அற்பத்தனமான செய்திகளை வெளியிட்டமை மிக அரிதென்றே நம்புகிறேன்)

2. எல்லாக் கிராமங்களிலும், எல்லா மக்களும் 100 வீதம் திருப்திகரமாக வாழ்வது கிடையாது. தனிப்பட்ட ரீதியில் யாரிலாவது ஆதங்கத்துடன் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஏன் உங்கள் மீது, உங்கள் ஊடக நெறிமுறை மீது கூட விமர்சனங்கள் இருக்கின்றன. Murukaiya Thamilselvan தமிழ்ச்செல்வண்ணை மீது கூட ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. தமிழ்ச்செல்வண்ணையின் செய்தி எழுதும் முறை, அதன் நம்பகத்தன்மை மற்றும் தொடர்ச்சித் தன்மை மீது கூட பலரிடம் ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக உங்கள் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளும் உண்மை என்றோ அல்லது உங்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் காணொளிகளை தயாரித்து பிற ஊடகங்களில் அவற்றை நேரடியாக வெளியிடுவதோ ஊடக தர்மம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

3. கிளிநொச்சி மீதான உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது. அக்கறை என்பது, ஆய்வுகளற்றவிதத்தில் தனிப்பட்ட கருத்துக்களை குழப்பகரமாக வெளியிடுவதல்ல. அக்கறையை வெளிப்படுத்துவதற்கென்று ஒரு அறம் இருக்கிறது. அதை ஊடகங்கள் செய்யும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதே ஊடக கல்வியின் நெறிமுறை.
தனிப்பட்டவர்கின் குற்றச்சாட்டுகளை பதிவுபண்ணி, அடைமொழிகள் சேர்த்து அதை அப்படியே வெளியிடுவதற்கு பெயர் ஊடகவியல் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.

4. முகத்திரையை கிழிப்போம், திரைச்சீலையை கிழிப்போம் என்று உணர்ச்சிவசப்படாமல், நீண்டகாலம் எழுத்து ஊடகத்துறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களை அணுகி, தனிப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை எப்படி ஊடகப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை பெறுங்கள். அதுதான் இந்த சமூகத்திற்கு சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும்.

நன்றி. .

Murukaiya Thamilselvan: Kuruparan M Kuru என் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எப் போதும் நிராகரித்தது கிடையாது. அதேவேளை எனது செய்திகளின் நம்பகத் தன்மையில் நான் எப்பொழுதும் கவனமாகவே இருக்கிறேன். முக்கியமாக சமூக ஏற்றத்தாழவுகளுக்கு எதிராக சமூக நீதிக்காக எழுவதற்காக நான் யாருடைய முகத்தையும் பாா்ப்பது இ்ல்லை. என்னுடைய செய்தியில் நம்பகத்தன்னை இல்லை என்றால் அதனை ஆதாரத்துடன் குறிப்பிடவேண்டுமே தவிர மேலோட்டமாக அல்ல. இதனை தவிர மகேந்திரன் தார்த்திகரனின் சம்பவத்தை இல்லை என்று வாதிடுவதில் அா்த்தமில்லை என்றே கருதுகிறேன். உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.


Kuruparan M Kuru: //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.//

அப்படியாயின் அந்த கருத்தை முதலே வெளியிடாமல் தார்த்திகரன் என்ற சிறுவன் மூலமாக ஊடக வியாபாராம் செய்யப்பட்டதை எப்படி பார்ப்பது?தார்த்திகரன் அதிபருக்கு "பதிலடி" கொடுத்தாக எழுதியுள்ளார்கள். தார்த்திகரன் தான் பதிலடி கொடுத்ததாக சொன்னானா? அல்லது அந்த ஊடகவியலாளரின் அளவுக்கு மிஞ்சிய கற்பனையா? (தமிழ்நாட்டு ஊடகங்களைப் போலான அடைமொழிகள்)

Murukaiya Thamilselvan: தார்த்திகரன் சொன்னதன் பின்புதான் சில ஆசிரியர்களுடனும், சில மக்களுடனும் ஊடகவியலாளா்கள் தொடா்பு கொண்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதா என்பதனை ஆராய்ந்தாா்கள் அவா்களின் ஆய்வின் படி தார்த்திகரனின் சம்வம் உறுதிப்படுத்தப்பட்டது

Kuruparan M Kuru அப்படி சம்பவங்கள் நடைபெற்றிருப்பின் அதை பொறுப்புவாய்ந்த சக்திகள் மூலம் வெளிக்கொண்டிருந்திருக்க வேண்டும். உறுதிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் மக்களை ஆதாரங்காட்டி செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆசிரியரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிடுவதைவிடுத்து, சிறுவனை ஆதாரம் காட்டி செய்தி வெளியிடுவது அற்பத்தனமான செயல் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Murukaiya Thamilselvan : ஒரு ஊடகவியலாளனின் செய்தியை ஆராய்ந்து பிரசுரிப்பதா இல்லையா என்று தீா்மானிப்பது ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியரின் பொறுப்பு. சரி உங்களின் கருத்துப்படி நாங்கள் முதிர்சியற்று செய்தி எழுது அனுப்பியிருந்தாலும் கூட அதனை பிரசுரித்த பல தசாப்த கால அனுப்வம் கொண்ட தேசிய ஊடகங்களின் ஆசிரியா்களும் முதிர்ச்சியற்றவா்கள்? குறித்த தார்த்திகாரனின் செய்தியை அனைத்து அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்கள் வெளியிட்டன. எனவே உங்கள் ஒரு சிலரை தவிர அனைத்து சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்களின் ஆசிரியா்களும் செய்தியாசிரியா்களும் முதிர்ச்சியற்றவா்களா? சமூக பொறுப்பற்றவா்களா?

Kuruparan M Kuru : "முந்திக் கொண்டு செய்தி வெளியிடுதல்" என்ற அற்பத்தனமான விளம்பரத்திற்காக செய்தியின் உள்ளார்ந்தம் மற்றும் சமூகப் பொறுப்புக் குறித்து குறிப்பிட்ட செய்தி நிறுவனம் அக்கறை செலுத்தவில்லை என்றே கருகிறேன்.

Murukaiya Thamilselvan : உங்களின் கருத்துப்படி இது முந்திக்கொண்டு வெளியிடும் ஒரு செய்தி அல்ல. இதனை தவிர பிரபல ஆங்கில ஊடகம், பிரசித்திப்பெற்ற சிங்கள ஊடகம் எல்லாம் இந்தச் செய்தியை பிரசுரித்துள்ளன. இதில் பணியாற்றுகின்ற பிரதம மற்றும் செய்தியாசிரியா்கள் அனுபவம் வாய்ந்த பிரபல்யமானவா்கள் எனவே உங்களின் பார்வையில் அவா்களும்....?

Kuruparan M Kuru : அந்த பிரசித்திபெற்ற சிங்கள மற்றும் ஆங்கில ஆசிரியர்களிடம் உருத்திரபுரம் மற்றும் எள்ளுக்காடு பற்றி என்ன தெரியும் என்று விசாரியுங்கள். இந்த கிராமத்தில் வாழும் மொத்த சனத்தொகையே தெரிந்திராதவர்களாகத்தான் இருப்பார்கள்.

பொதுவாக மேலதிகாரிகள் தமக்கு கீழுள்ளவர்களை அதிகம் நம்பும்போது இப்படியான தவறுகள் இடம்பெறுவது வழமை. உங்களுக்கும் தெரியும்.

Murukaiya Thamilselvan:  ஒலி மற்றும் ஒளி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் இல்லை என நிரூபிக்க முயற்சி செய்கின்றீா்கள் அது உங்கள் ஊா் மீதான சுயநலமாக இருக்கலாம் சில ஆசிரியா்களும் சம்பவத்தை ஊடகவியலாளா்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனா். எனவே ஊடகவியலாளா்களின் தங்களது கடமையின் பொருட்டு சம்பவத்தை உறுதிப்படுத்தினாா்கள். அதனை அவா்களது பிரதம ஆசிரியர்களும் நம்பினாா்கள். செய்தி வெளிவந்தது. ஊடகம் ஒரு செய்தியை வெளியிடும்போது குறித்த செய்திக்குரியவா் நீதி மன்றம் சென்றால் என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தன்னை ஒரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் செய்தியை வெளியிடும் அந்தவகையில் அந்ததந்த ஊடக நிறுவனங்களில் அதாரங்கள் போதுமானதாக உள்ளது

Kuruparan M Kuru உறுதிப்படுத்திய ஆசிரியர்களின் காணொளியை வெளியிடாமல் சிறுவனின் காணொளியை வெளியிட்டதன் பின்னணி என்ன?

Kuruparan M Kuru //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.//

இப்படி மேலே சொல்லியிருக்கிறீர்கள், அப்படியாயின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஆசிரியரின் காணொளியையை அல்லவா முதலில் வெயியிட்டிருக்க வேண்டும்.?

Murukaiya Thamilselvan ஊடகவியலாளா்கள் எப்பொழுதும் செய்தி மூலத்தை காட்டிக்கொடுக்க மாட்டாா்கள். ஊடகதர்மம் ஊடக நெறிமுறை பற்றி அறிவுரை சொன்ன உங்களுக்கு அது தெரியாதா?

Murukaiya Thamilselvan கானொளி என்பது சம்பவத்தை உறுதிப்படுத்த எங்களுக்காக எடுக்கப்பட்டது. அது ஏனையவா்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

Kuruparan M Kuru ஓ.. ஆசிரியரை காட்டிக் கொடுக்க முடியாது, முதிர்ச்சியற்ற சிறுவனை காட்டிக் கொடுப்பதுதான் ஊடக தர்மமா??

நன்றி தமிழ்ச்செல்வண்ண. இதை தான் எதிர்பார்த்திருந்தேன். இனி இதில் விவாதிக்கக்த் தேவையில்லை. நன்றி :)

Murukaiya Thamilselvan சிறுவன் அல்ல இளைஞன் அந்த இளைஞன் செய்தி மூலம் அல்ல செய்திக்குரியவன் பாதிக்கப்பட்டவன். இந்த விளக்கம் கூட இல்லையா? செய்தி மூலம்தான் ஆசிரியா்களும் சில மக்களும்


முகுந்தன் நவம் வடமாகாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகியிருந்தால், அவற்றை யாராவது இணைக்க முடியுமா?

Murukaiya Thamilselvan முகுந்தன் நவம் நீங்கள் வட மாகாணத்தில் இருந்திரு்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள் கடந்த ஞாயிறு உதயன் முன்பக்கச் செய்தி, மற்றும் யாழ் தினக்குரல் செய்தி எடுத்து பாருங்கள்

முகுந்தன் நவம் அதனால் தான் கேட்டேன். நான் பார்க்கிறேன்

Kuruparan M Kuru முகுந்தன் நவம் Copy Paste பண்றத பற்றி என்னண்ண பாக்க இருக்கு. Facebook status கள கூட ஒருபக்கத்தில பிரசுரிக்கிற வறட்சி நிலையிலதான் இன்றைய ஊடக trend இருக்கு.

இக்பால் அத்தாஸ், விக்டர் ஜீவன், தராக்கி இப்பிடி நிறையப் பேரின்ர பெயர் ஞாபகம் இருக்கிற அளவுக்கு ஊடகங்களுக்கு என்றொரு தர்மம் இருந்தது. தேடித் தேடி வாசிச்சம்.

"கிடைக்கும் தகவலை வைத்துக் கொண்டு எப்படி செய்தி சொல்வது" என்பது இங்க இருந்த ஒரு கலை அண்ண. கிடைக்கும் தகவலுக்கு அடைமொழி போட்டு அவதிப்பட்டு செய்தி போடுறது இப்பத்தைய fashion. :) :)


முகுந்தன் நவம் Kuruparan M Kuru உண்மைதான் ! அந்த மாணவனின் ஆதங்கம் உண்மையாக இருக்கலாம் . ஆனால் இந்த ஊடக செய்திகள் அவனை தன் வெற்றியை கொண்டாட முடியாதவனாக்கி விமர்சனத்துக்கு உள்ளாக்கிவிட்டன!




2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க