இன்று யாழ்மாவட்டத்தை போதைவஸ்துகளும், தடை செய்யபட்ட சிகரட்டுக்களும் தாராளமாக ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில் தெல்லிப்பளை சுகாதாரப் பணிமனை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் புகையிலை பயிர்ச் செய்கையை விவசாயிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இங்கு கவனிக்க வேண்டியது!!
- சிகரட் விற்பனை முகவர்களிடம் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழில் பார்க்குமாறு வைத்திய அதிகாரி நந்தகுமார் கோரவில்லை
- சிகரட் விற்பனையாளர்களிடம் சிகரட் விற்பனையை நிறுத்துமாறு நந்தகுமார் கோரவில்லை.
- ஏன் சிகரட் விற்பனைக்கு விதிக்கபட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கூட மிக இறுக்கமாக பின்பற்றுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நந்தகுமார் கோரிக்கைவிடுக்கவில்லை.
புகையிலைப் போர்
வட தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு மோசமான காழ்ப்புணர்வு ஏற்படக் காரணம் புகையிலை வர்த்தகம். சிங்களவர்களைப் பொறுத்தவரை புகையிலை வர்த்தகம் என்பது அந்தஸ்திற்கான அடையாளமாக கருதினர்.
ஒல்லாந்தர்களால் பெரும் வர்த்தக பொருளாக
அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைக்கு கொண்டுவரபப்பட்ட புகையிலை வர்த்தகத்தில் யாழ்ப்பாண தமிழர்கள்தான் அதில் ஆதிக்கம் செலுத்துவதாக பெரும்பான்மை சிங்களவர்கள் கோபம் கொண்டிருந்தனர்.
புகையிலை பயிரிடுதல் மற்றும் அதை பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவருதல் என்பனவற்றில் யாழ்ப்பாண விவசாயிகளின் பொறிமுறையை சிங்களவர்களால் வீழ்த்த முடியவில்லை.
புகையிலை வர்த்தகத்தால் நாட்டின் பொருளாதார கட்டுமானத்தில் தமிழர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்திய காரணத்தால்தான் ஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருந்ததாகவும், அதன் மூலம்தான் தமது நிலத்தைப் பாதுகாக்க "தேசவழமைச் சட்டத்தை" தமிழர்கள் கொண்டு வந்ததாகவும் சிங்களவர்கள் கருதினர்.
இலங்கையின் புகையிலை ஏற்றுமதியில் "யாழ்ப்பாண புகையிலை" முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. அந்த முதலாளிகள் "செல்வாக்கு மிகுந்த தமிழர்களாக" உருவெடுத்திருந்தனர்.
இந்த பின்னணியில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் பொருளாதார அடித்தளங்களை சிதைக்க வேண்டும் என்பதில் சிங்களவர்கள் குறியாக இருந்தனர்.
1. யாழ்ப்பாண புகையிலையின் ஏற்றுமதி குறைக்கபட்டது.
2. உள்நாட்டு சந்தையைக் கூட பிடிக்க முடியாத பயிர்களை விவசாயம் செய்ய வட தமிழர்கள் ஊக்குவிக்கபட்டனர் அல்லது கட்டாயப்படுத்தபட்டனர்.
3. வட இலங்கை மரக்கறிகளுக்கான சந்தை சிறிது சிறிதாக முடக்கப்பட்டு "யாழ்ப்பாண மரக்கறிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் விற்கமுடியும் அதுவும் கஸ்டம்" என்ற நிலை உருவாக்கபட்டது.
4. வட இலங்கைச் சந்தைக்குள் பெருமளவு தென்னிலங்கை மரக்கறிகள் இறக்குமதி செய்யபட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டன.
இப்படி வட இலங்கை தமிழர்களின் பொருளாதாரம் சிறுகச் சிறுக சிங்களவர்களின் பிடிக்குள் சென்றது.
தமிழினம்த பெரும் பின்னடைவை சந்தித்தது. தமிழர்கள் மத்தியில் புதிய செல்வாக்கானவர்கள் உருவாகவில்லை, புதிய முதலாளிகள் உருவாகவில்லை.
புகையிலை விவசாயம் செய்து செல்வாக்காக இருந்தவர்களின் குடும்பங்கள், விவசாயக் குடும்பங்கள் காலப் போக்கில் அரச வேலைகளின் அடிமைகளாக மாற்றபட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களின் கூலியாட்களாக மாற்றபட்டனர்.
ஆனாலும் தம்மை தாழ்த்திய புகையிலையை யாழ்ப்பாணத்தைத்தை விட்டு அடியோடு அகற்றியே ஆக வேண்டும் என்பது சிங்கள கோவிய சாதியினரின் வெறி. (சிங்களவர்களின் கோவிய சாதியினர்தான் செல்வாக்கு மிக்கவர்கள். தமது செல்வாக்கைக் கூட யாழ்ப்பாண புகையிலை தகர்த்தது என்பதுதான் அவர்களின் கோபம்)
புகையிலை விவசாயமா உண்மையில் தடை செய்யப்பட வேண்டியது??
நூற்றாண்டுகாலமாக புகையிலை பயிரிட்டுவரும் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் புள்ளிவிபரத்தை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் வெளியிட வேண்டும்.
1996 களின் பின்னர் சிகரட் விற்பனையில் சூடுபிடித்த யாழ்ப்பாணம் 2009 ற்கு பிறகு உச்சகட்ட விற்பனையை பார்த்துவருகிறது.
எனவே புற்றுநோயால் பாதிக்கபட்டவர்கிளின் புள்ளிவிபரத்தை ஆண்டுரீதியாக வரிசைப்படுத்தி அந்த புள்ளிவிபரத்திற்கும் புகையிலை விவசாயத்திற்குமான தொரர்பு அறிவியல் ரீதியாக பேசப்பட வேண்டும்.
குறிப்பு: 2009ற்கு பிறகு வடபகுதியில் புற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில் அதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி பக்கச்சார்பற்ற வைத்திய அறிக்கையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் வெளியட இதுவரை யாரும் முன்வரவில்லை.
- 2010 காலப்பகுதியில் இலங்கையில் தடைசெய்யபட்ட சிகரட்டுக்களுடன் யாழ்ப்பாணத்தில் 2 முஸ்லீம் இளைஞர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டனர். ஆனால் அந்த இரண்டு இளைஞர்களுக்காகவும் சட்டத்தரணி சர்மினி வாதாடி விடுவித்தார். தடை செய்யபட்ட சிகரட்டுகள் எப்படி வந்தன? எங்கு விற்கபட்டன? ஏன் யாழ்ப்பாணத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்பது குறித்து எந்த தகவலுமே வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சனத்தொகை கூடிய வட மாவட்டமான யாழ்ப்பாணத்தில் சிகரட் சந்தையை சுகாதார அமைச்சு எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்பது குறித்து இதுவரை பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை. (விவாதிக்கமாட்டார்கள். பெரும் வியாபாரிகளுடன் மோதிக்கொள்ளும் திராணி படித்தவர்களுக்கு இல்லை)
உண்மையில் புகையிலை உற்பத்திதான் புற்றுநோய்க்கு காரணமா என்பதை அறிவியல் ரீதியாகவும் புள்ளிவிபர ரீதியாகவும் அணுக வேண்டும்.
புகையிலை விவசாயத்தை கைவிடச் சொல்லும் படித்தவர்கள் மாற்று விவசாயத்தின் சந்தையை விசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். விவசாயச் சந்தை என்பது பாயை விரித்து மரக்கறியை அடுக்கி விற்பதல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
மா.குருபரன்
21-10-2016
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க