Saturday, January 31, 2015

வியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை

0 கருத்துக்கள்
இரணைமடு    - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசித்துவிட்டு இதைப்படிப்பது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.

இணைந்த இணைப்பில் சென்று வாசிக்கவும்: இரணைமடு நீர்வழங்கல் திட்டம்


இனி விடையத்திற்கு வருவோம்.

சுண்ணாக பிரதேச நிலத்தடி நீர் ஏறத்தாள முழுவது எண்ணை கலக்கபட்டுவிட்டது என்பது உலகறிந்த விடையம். இந்த எண்ணைக் கலப்பானது சுண்ணாகத்தை மட்டுமின்றி அண்டிய ஏனைய நிலங்களுக்கும் பரவும் என்பது புரிந்து கொள்ள முடியாத விடையமல்ல.

சுண்ணாக மின்நிலையத்தினூடாக நிலத்தடி நீர் மாசுபடுத்தபட்டதற்கு பின்னணியில் பெரும் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள் அதை புரிந்து கொள்வதற்கு இன்னமும் மூன்று தொடக்கம் ஜந்து வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும். இதை வெறும் வாசிப்பாக மட்டுமல்லாது உங்கள் அறிவிற்கு ஏற்றவாறு சிந்தித்து ஒரு முடிவையும் எடுத்து உங்கள் நாட்குறிப்பேட்டில் குறித்து வையுங்கள்.

விடையத்தை ஆராய்வதற்கு முன்னர் எழுப்பப்பட வேண்டிய அடிப்படைக் கேள்விகள்:

1) சுண்ணாக மின்நிலைய எண்ணைக் களஞ்சியம் நெருக்கமான மக்கள் குடியிருப்பில் மட்டுமல்லாது ஒரு விவசாய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. சுற்றுச் சூழல் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அனுமதியின்றி எப்படி இது அனுமதிக்கப்பட்டது?

2) அனுமதிக்கு முன்னர் உண்மையில் சுற்றுச் சூழலியல் ஆய்வு செய்யபட்டிருந்தால் அந்த அறிக்கையை ஏன் அந்த நிறுவனம் வெளியிடவில்லை? அனுமதிக்கு முன் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடையங்கள் என்ன? (அப்படியொரு ஆய்வு செய்யபட்டதா என்பதே சந்தகம் தான்)

3) மின்நிலைய எரிபொருள் களஞ்சியம் அமைக்கப்பட்ட முன்னர் எரிபொருள் களிவகற்றலுக்கு செய்யபட்ட பொறிமுறை என்ன? அனுமதியளித்தது யார்? எந்த அலுவலகத்தினூடாக அந்த அனுமதி வழங்கபட்டிருந்தது?

4) இந்த மின்நிலைய எரிபொருள் களஞ்சிய செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கவில்லையா? அல்லது மக்கள் தெரிவித்த எதிர்ப்புக் கடிதங்கள் மறைக்கபட்டதா?

5) 2009 தொடக்கம் 2015ம் வரை இந்த எரிபொருள் களஞ்சிய களிவு நிலத்தடியில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மக்கள் போராட்ட ஒழுங்கு செய்யப்படாமைக்கான காரணம் என்ன? அல்லது மக்கள் போராட்டங்களை தமிழ் அரசியல்வாதிகள் தடுத்தார்களா? அப்படியாயின் அவர்கள் யார்??

மேற்குறிப்பிட்ட கேள்விகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு நிதானமாக வாருங்கள்.

தமது நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காய் இராணுவத்துடன் மோதும் வெலிவேரியா மக்கள்

குடிதண்ணீருக்காய் வெலிவெரியா மக்களால் இராணுவத்திற்கு எதிராக போராட முடியுமென்றால் யாழ் மக்களால் ஒரு நிறுவனத்திற்கு எதிராக ஏன் போராட முடியாமல் போனது??

ஏன் போராட முடியாமல் போனது என்பதற்கான காரணம் மிக சுலபமானது.

யாழ்ப்பாணத்தில் குடி தண்ணீரை காசுக்கு வாங்கி குடிக்க கூடிய வசதியானவர்கள் அதிகம் வாழுகிறார்கள்.

குடி தண்ணீர் முதல் கை கழுவும் தண்ணீர் வரை பணம் கொடுத்து வாங்க கூடிய யாழ் கலாச்சாரம் உருவாகிவிட்டது. புலம்பெயர் தமிழர்களின் பணம் தாராளமாக புரள்கிறது.

சுண்ணாகத்தில் சாதாரண விவசாய மக்கள் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்றே பல யாழ்வாசிகளுக்கு தெரியும். ஏன் சுண்ணாகத்தில் இருக்கும் பலருக்கும் இப்படியான நிலைதான்.

சுண்ணாக மின்நிலையம் அரசு சார்பு நிறுவனம். அந்த நிறுவனத்தோடு ஏன் மோதி பிரச்சினையை வாங்குவான். பேசாமல் தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்போம் என்ற மோசமான சுயநலப் போக்கால் சுண்ணாகத்தின் இந்த தலைமுறை அடுத்த தலைமுறைக்கு மோசமான ஒரு நிலைத்தை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறது.

எப்போதும் அரசியல்வாதிகள் அல்லது போராளிகள் தான் பிரச்சினையை கையாள வேண்டும். நாங்கள் பணத்தை வேணுமென்றால் கொடுப்போம் ஆனால் களத்திற்கு போக மாட்டோம் என்ற மோசமான தலைமுறையின் மிக சிறப்பான உதாரணம் தான் சுண்ணாக மின் நிலைய எரிபொருள் கழிவு பிரச்சினையை தமிழர் தரப்பு கையாண்ட விதம்.

ஒரு பெரும் நிலத்தையே மாசுபடுத்திவிட்டு திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள். இனி எதை நோக்கி நகரப்போகிறார்கள்?? இங்கு தான் பெரும் வியாபாரமும் அரசியலும் பிணைந்திருக்கிறது.

அமிர்தமாய் இருந்த சுண்ணாக நிலத்தடித் தண்ணீர் அசிங்கமாகிக் கிடக்கும் காட்சி


இரணைமடு மீதான கழுகுப் பார்வை   

இரணைமடு நீரின் மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுபோய் நிலத்தடி நீரை அதிகரித்து யாழ்ப்பாண நீர் வளத்தை அதிகரிப்பதற்கு பதிலாக சிறிலங்கா அரசாங்கம் இரணைமடு நீரை சுத்திகரித்து அந்த நீரை குழாய் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று அடம் பிடிப்பதற்கான பிரதான காரணங்கள் சில:

1. நீண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தை வரண்ட தேசமாக்கி தண்ணீருக்காக பிறிதொரு நிலத்தில் தங்கி இருக்க வேண்டிய சூழலை உருவாக்குதல்.

2. யாழ்ப்பாண விவசாய உற்பத்தியை குறைத்தல். இதன் மூலம் நீண்ட காலத்தில் அத்தியாவசிய பொருள் தேவைக்கு யாழ்ப்பாணம் பிறிதொரு நிலத்தில் தங்கியிருக்க வேண்டிய சூழலை உருவாக்குதல்.

3. நீர்வளம் இல்லாது செய்யப்படும் போது விவசாயிகள் கூலி வேலை அல்லது பிறிதொரு வேலையை நோக்கி தள்ளப்படுவர். அதன் மூலம் வர்க்க பேதங்களை இலகுவாக உருவாக்கி மக்களின் சிந்தனைகளை சிதைத்தல்.

4. நீரை குறைத்து கிளிநொச்சி மாவட்ட விவசாய உற்பத்தியை குறைப்பதன் மூலம் பெரு நிலத்தை வேறு தேவைகளுக்கு கைப்பற்றுதல்.

இதைவிட பிரதான நீண்டகால திட்டம்

5. தண்ணீரானது மிக இன்றியமையாத அத்தியாவசிய தேவை என்பதால் மிக லாபகரமான வணிகத்தை யாழ் மக்களிடத்தில் மேற்கொள்ளுதல்.


மேற் குறிப்பட்ட ஜந்து முக்கியமான காரணிகளை உருவாக்குவதற்கான கிளை வேலைத்திட்டங்கள்தான் சுண்ணாக மின்நிலைய கழிவை திலத்திற்கு கீழ் கொட்டியது.

இது போல் நல்லூர் பிரதேசத்தில் பெரிய Hotel ஒன்றை கட்டுவதற்கு ராஜபக்ச அரசாங்கம் கடும் முயற்சி எடுத்ததும் யாவரும் அறிந்ததே. அந்த Hotel கட்டபடப்டிருந்தால் அதன் கழிவுகளும் யாழ் நகர மத்தியில் நிலத்தடியில் கொட்டபட்டிருக்கும். (நல்லூரில் பிரேரிக்கப்பட்ட Hotel சாதாரண சாப்பாட்டுக் கடையல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்).


வியாபாரிகளின் வெற்றி

மக்கள் எதிர்ப்பு காட்ட அஞ்சுவது.

குடிக்கும் தண்ணீர் முதல் கழுவும் தண்ணீர் வரை பணம் இருந்தால் வாங்கிவிடலாம் என்று திமிர் உள்ள சமூகம் யாழில் அதிகம் காணப்படுவது.

மக்கள் ஒன்று சுடி போராட்டம் செய்வதை தமிழ் அரசியல் வாதிகள் விரும்பாததது அல்லது மக்களை சுயமாக போராடவிடாமல் தடுப்பது.

மக்கள் ஆக்க பூர்வமாக சிந்திப்பதற்கு தூண்டுவதற்கான தமிழ் அச்சு ஊடகங்கள் இல்லாதது.

மக்களால் தெரிவு செய்யபட்ட தமிழ் அரசியல்வாதிகளே இந்த மண்ணுக்கு எதிராக பெரும் வியாபாரிகளாக நிற்பது.

இரணைமடு நீர் வழங்கல் தொடர்பாக வியாபாரிகள் வெளியிட்ட செய்தி : யாழ் உதயன் நாளிதள்


சுண்ணாக நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டது தொடர்பாக வியாபாரிகள் வெளியட்ட செய்தி : யாழ் உதயன் நாளிதள்முடிவு மற்றும் எதிர்வு கூறல் 

சுண்ணாக மின்நிலைய எரிபொருள் கழிவினூடாக சுண்ணாக நீர் மாசுபடுத்தபட்டுள்ளதால் மக்களுக்கு தீர்வு கொடுத்தே ஆக வேண்டும்.

எனவே
1. இரணைமடு தண்ணீரை "குழாய்" மூலம் யாழிற்கு கொண்டு போய் யாழ்ப்பாண மக்களிற்கு விற்கப்படும்.

2. கிளிநொச்சி மற்றும் யாழ் விவசாய உற்பத்தி திறன் வீழ்ச்சியடையும்

3. வடக்கில் தென்னிலங்கை உற்பத்திப் பொருக்கள் அதிகரிக்கும்

4. வடக்கு சிறுகைத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நசுக்கபட்டு ஒட்டுமொத்த மக்களும் தென்னிலங்கையில் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை உருவாக்கப்படும்.

5. நீண்டகாலத்தில் வடக்கில் வர்க்க பேதங்கள் உருவாகி இன நல அக்கறை அழிக்கப்படும்.மண் செழிப்பாய் இருந்தால் தான் இனம் செழிப்பாய் இருக்கும்.

குடி தண்ணீருக்காய் கூட போராட சுயநலமற்று சிந்திக்க மறுக்கும் இனம் தனி நாடு கேட்டு தொடர்ந்தும் போராடும் என்று சிந்திப்பது மிக மோசமானது :( .


மா.குருபரன்

31/01/2015

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க