Thursday, July 23, 2009

என் தேவதை...

0 கருத்துக்கள்


முகத்திற்கு முகாந்திரம் இழுத்து
மர வேரடியில்
மெளனமாய்
சாய்ந்து கிடக்கிறாள்
என் தேவதை....
விழி நீரின்
உப்பில்
உதடு காய்ந்து
ஏமாற்றப்பட்ட
எதிர்பார்ப்புகளோடு
மரம் உதிர்க்கும்
பட்டைகளோடு
உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்
என் தேவதை.
கலைந்து போன முடியும்
கறைபடிந்த உடையும்
என்ன பாவம் செய்தாள்
என் தேவதை...
கருமுடி நிறைய
வெண்பூச் சூடி
கை நிறைய வளையல் குலுங்க
சிறு சலங்கை ஒலியால்
நாதம் செய்து
காற்றுக்கே கதை சொல்பவள்
என் தேவதை.....

கண்களால் காதல் செய்து
உதடு நிறைய
புன்னகை பூத்து
எப்போதும் எனைத் தேடும்
என் மொழியே - உனை
என் மார்பணைத்து
சிரசாற்ற கூட முடியாமல்
சபிக்கப்பட்ட
பாவியடி நான்.
பட்டாம் பூச்சிக்கே
சிறகடிக்க கற்றுக் கொடுக்கும்
உன் விழிகள்....
கடக்கண் பார்வை வீசி
கள்ளமாய் கண்ணடிக்கும் - உன்
செல்லத்தனம்...


இரத்தம் இறுகி
இதயம் கனக்குதடி......

மா.குருபரன்.
16.07.09



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க