Friday, September 24, 2010

சிவானந்தாவின் 1ம் ஆண்டு நினைவாக எழுதியது

0 கருத்துக்கள்
2006 ஜனவரி 2ம் திகதி மாலை 6.45 மணியளவில் திருகோணமலை கடற்கரைக்கருகில் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 அப்பாவி  பல்கலைகழக மாணவர்களில் ஒருவன் தான் எமது சிவானந்தா.......

ஒரு வருட நினைவிற்காக வீடியோ ஆவணப்படுத்தலுக்கு 2006 டிசம்பர் 21 ம் திகதி எழுதிய கவிதை இது. (வீடியோவை பிறகு பதிவிடுகிறேன்)


 
மலரோடு மோதிய தென்றலும்
கனமாய்தான் வீசியது அன்று
நெருப்புக்குள்ளும் நீரிருப்பது
அறிந்தவர் நாம் - ஆனால்
நீரே நெருப்பாய் மாறி
சுட்டது அன்று...
சிவா உனை இழந்தோம் - நாம்
இழந்தது எமது ஒரு அங்கமடா

மா.குருபரன்.

************************************************

மொறட்டுவை பல்கலைகழக
சுமணதாச கட்டிட
நான்காம் மாடி
இங்குதான் எமக்கென ஒதுக்கப்பட்ட
பூங்காவனம் உள்ளது...
சஞ்சீவி காற்றை
தினமும் சுவாசிக்கும்
ஒரு கொடியில் பூத்த
மலர்கள் நாம்.....
"கணிய அளவியலாளன்" கனவாக கொண்டு
வாடாத மலர்களாய்
அடியெடுத்து வைத்தோம் இங்கு....
எம்மில் மோதிய காற்றும்
சந்தோசமாய்தான் பிரிந்து செல்லும்
அவ்வளவிற்கு
கவலைகளற்ற பூங்காவனம் நாம்......

வாடாத மலர் எம்மில்
இதழ் ஒன்றை
எவனோ பிடுங்க கண்டோம்...
முட்களால் குத்த
நாமென்ன கள்ளிச்செடியா!!!
மென்மையான மல்லிகையல்லவா....
பிடுங்கப்பட்ட இதழ் இடம்
இன்னமும் வெறுமையாய்...
அழகு குலைந்து நாம்!!!!!
இன்னமும் கனமாய்த்தான் விடிகிறது
ஒவ்வொரு விடியலும்.
பூக்கள் நாம் சாபமிடுகிறோம்
எம் இதழ் ஒன்றை
தம் இரையாக்கியவர் வாழ்வில்
விடியலற்றுப் போக!!!!!

மா.குருபரன்

****************************************************

சிவா...
கனவுகளும் பொய்யாய் போய்
காணும் காட்சிகளும்
வெறுமையாக்கப்பட்டு
மாயைகளின் பின்னால்
பூச்சியமாகிவிட்ட
இன்னும் பல
கடந்த நினைவுகளோடு
எமை சுற்றியுள்ள - உன்
நாதச்சுவடுகளோடு...
இன்று நாம் தனிமையிலடா....

மா.குருபரன்.

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க