Saturday, April 25, 2020

அதிகளவு பணத்தை அச்சிடுதல் - யாருக்காக அரசு இந்த வேலையை செய்கிறது!!

1 கருத்துக்கள்


இந்த வாரம் 7.87 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிடப் போகும் சிறிலங்கா அரசானது இந்த வருடத்தில் இதுவரைக்கும் 217.1 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தையில் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்ட மார்ச் மாதத்திலிருந்து இதுவரைக்கும் அண்ணளவாக 213 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தைக்குள் விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு. 

ஏற்கனவே கொரோனாவின் தாக்கத்தால் உற்பத்தித்துறை படு மோசமாக பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பொருட்கள்  தேங்கிக்கிடப்பது மட்டுமல்லாது ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல பொருட்கள் விற்பனையின்றி காலாவதியாகி வீசப்படும் நிலையை எட்டிருக்கிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரை, அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய துறைகள் பெரும்பாலானவை இழுத்து மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறை, ஆடை உற்பத்தித் துறை, சிறு விவசாய உற்பத்திகள் என ஏற்றுமதிப் பொருளாதாரம் முழுமையாக அடிவாங்கியுள்ளது. ஏற்கனவே சிறிலங்காவின் தேயிலைப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு நிகராக தன்னை மாற்றியமைத்து முன்னேற முடியாமல் சிக்கி விழி பிதிங்கி நிற்கும் இந்த நேரத்தில் அதிகளவிலான பணம் அச்சிடப்பட்டு சந்தையில் விட வேண்டிய தேவை எதற்கு?

உள்நாட்டு தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் அத்தனை பொருட்களும் வழமையான நுகர்வின்றி தேங்கிக் கிடக்கிறது. ஏற்றுமதிப் பொருளாதாரமும் பெருமளவில் அடிவாங்கிக் கிடக்கிறது. அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு வழியின்றி, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களை வெளிநாட்டு நாணயத்திலேயே சிறிலங்காவில் சேமிப்பை வைக்கும் படியும் அதனை ஊக்குவிக்கும் முகமாக பல சலுகைகளையும் சிறிலங்கா அரசு அறிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகளவிலான பணத்தை அச்சிடுவதன் நோக்கம் என்னவாகவிருக்கும் என்பதை ஆழமாக பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. 

ஊரடங்கு, ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையின் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முழுமையான தடை, சமைத்த உணவு பண்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முழுடையான தடை, போக்குவரத்துத் தடை என அன்றாட பணச் சுழற்சிக்கான வழிகள் அனைத்து தடைப்பட்டு பணம் தேங்கிக் கிடக்கின்றமையானது ஆரோக்கியமான பொருளாதாரத்தை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மேலும் பணத்தை அச்சிட்டு தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? 

எதிர்காலத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டு அல்லது கொரோனாவின் பின்னரான காலத்தில், அச்சிடப்பட்ட அத்தனை பில்லியன் ரூபாய்களும் மக்களின் கையில் சென்று, உள்ளுர் பொருட்களின் உற்பத்திக்கு நிகரான நுகர்வு இல்லாமல் குறித்த பொருட்களுக்கு அதிகளவு கேள்வி எழும் போது அந்த பொருளின் கேள்வி விலை அதிகமாகும் அதனால் ரூபாயின் பெறுமதி இழக்கச் செய்யப்படும். 

உதாரணத்திற்கு பிறீமா கோதுமை மா உற்பத்தி நிலையம், வழமையாக மாதத்திற்கு 1000 கிலோ மாவை உற்பத்தி செய்து (இது தான் பிறீமாவின் ஆகக் கூடிய உற்பத்தி என்று வைத்துக் கொள்வோம்) 1000 கிலோ மாவும் நுகரப்படுகிறது என்றால் சாதாரணம்.  ஆனால் மக்களிடத்தில் வழமைக்கு மேலதிகமாக பணப்புழக்கத்தினால் 2000 கிலோ கோதுமை மாவிற்கான கேள்வி  எழுகிறது என்று வைத்துக் கொள்வோம், பிறீமாவால் 1000 கிலோதான் உற்பத்தி செய்ய முடியும் ஆனால் 2000 கிலோ கோமைக்கான கேள்வி, இதனால் கோதுமை மாவின் விலைதான் அதிகரிக்கும். 1 கிலோ கோதுமை மா 100 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தால் இப்போது 200  ரூபாயாக விற்பனை விலை நிர்ணயிக்கப்படும். அதாவது 100ரூபாயின் பெறுமதி குறைக்கப்படுகிறது. (அதாவது 100% மேலான பணவீக்கம் ஏற்படும்.) இதன் மூலம் கோதுமையை மூலப் பொருளாக கொண்ட அத்தனை வணிகத்திலும் இதன் தாக்கம் ஏற்படும். இது போன்று அனைத்து துறைகளிலும் ஏற்படும். 

மாதம் 20,000 ரூபாயோடு குடும்பம் நடத்தியவர் பணவீக்கத்தால் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுவார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள அதிகரிப்பு நிகழாது. சேமிப்பில் இருந்த பணத்தின் பெறுமதி குறைக்கப்படும். 

ஏற்கனவே வெளிநாட்டு கடனை மறைத்து நாட்டை ஆளும் அரசு,  நாட்டின் உற்பத்திப் பொருளாதாரம், ஏற்றுமதிப் பொருளாதாரம் இன்னபிற அந்நியச் செலாவணி ஈட்டும் வழிகள் மோசமாக பாதிக்கபட்டிருக்கும் நிலையில் பணவீக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன என்பது  அரசுக்குத்தான் வெளிச்சம். 2007 களில் உருவான பொருளாதார சரிவு நிலையில் பணத்தை அச்சிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளே அந்த தாக்கத்தில் இருந்து மீண்டுவர மிகவும் போராடியமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர் தாயகம் இனியாவது திருந்த வேண்டும். அந்திய பொருட்களை நுகரும் பிண்டங்களாக இராமல் இனியாவது உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். 

மா.குருபரன்
25-04-2020


1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க