எங்களுக்காய்
நாட்கள் எப்போதும்
காத்துக் கிடந்ததேயில்லை
வழி நெடுக வலிகள்….
தேடிப்பிடித்தேன் உறவை…
அவள் மொழி கேட்டதால்
ரோஜா செடியில்
இருந்து வழியும்
பனித்துளியின் குளிர்ச்சி
என் செவியில்….
காற்றுக்கு நன்றி சொல்லி
பேச்சு தொடர்ந்து….
நினைவுகள் சுழன்று
பாடசாலை நாட்களின்
5ம் ஆண்டு
புலமைப்பரீட்சை வரை சென்றது…..
மங்கிய மாலைப் பொழுதில்
சில்லென்று வீசும்
மெல்லிய தென்றலைப்போல்
மென்மையாய் படர்ந்தது
நினைவுகள்…..
பனிப்பூக்களின் நாட்களில்
பட்டுப்பூச்சிகளை பிடித்து
சட்டையில் விட்ட
பிராவகத்தில்
துள்ளிக் குதித்தது மனம்….
விடைபெறும் நேரமென்று
மனம் அறிந்திருக்கவேயில்லை….
அறியாத ஓர் அமைதி நீண்டது
பேச்சில்…….
பேச்சில் பேசாதா மெளனம்….
ஊகித்தறிய முதல்
“நான் கலியாணம் கட்டிற்றண்டா”
நாரறுந்த வீணையாய்
அடங்கிப் போனது
குரலின் நாதம்.
காலத்தின் விரிசல்...
கட்டாய ஆள் சேர்ப்பு
காதலை பிரித்து
வேறெங்கோ இணைத்து வைத்திருந்தது…….
"உண்மைக் காதல்
எப்படியும் சேருமென்பது
புனை கதைகளாய்
மெருக்கப்பட்டு
புத்தகங்களில் சேர்ப்பதற்கே
பொருத்தம்"
என்று மெளனமாய் கூறி
விடைபெற்றது பேச்சு……
மா.குருபரன்
07-08-09
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க