அண்மையில் வன்னி தடுப்பு முகாம்களில் இருந்து 6 மாணவர்கள் மொறட்டுவை பல்கலைகழகம் சென்றிருந்தனர். அவர்களக்கு தங்குமிட வசதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கால தாமதமாக வந்ததனால் அந்ததந்த துறைகளில் இந்த ஆண்டிற்கான கற்கைநெறிகளில் இணைக்கப்படுவது கஸ்டம் என்றும் செனற் கூட்டத்தின் பிற்பாடுதான் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுவதாக செய்திகள் பேசப்படுகின்றன.
இந்த செனற் கூட்டத்தில் நல்ல முடிவாக எடுக்கப்பட்டு அந்த மாணவர்களின் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே ஆரம்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்.
முதலில் இந்த மாணவர்கள் எப்படிப்பட்ட சூழலில் இருந்து எவ்வாறு பல்கலைகழகம் வந்தார்கள் என்பதை கட்டாயம் இந்த படித்த மனிதவர்க்கம் புரிந்து கொள்ளவேண்டும். உக்கிர போர் நடந்த காலப்பகுதியில் பெருமளவு வீடுகளில் இரவுகளில் விளக்கு எரியவே இல்லை. காரணம் எரிபொருள் தடை. சிறிதளவு மண்ணெய் கிடைத்தாலும் நீண்ட நாளைக்கு தேவை என்பதற்காய் நேரத்திற்கே அணைத்து விடுவார்கள்.ஆசிரியர்கள் இல்லை.. பாடப்புத்தகங்கள் இல்லை.. ஏன் படிப்பதற்கு நேரம் கூட ஒதுக்கமுடியாமல் தான் வன்னி மாணவர்களின் கல்விநிலை கடந்த இரண்டு வருடங்கள் சின்னாபின்னமாகியது.இப்படிப்பட்ட கல்விக்கேற்ற அடிப்படை சூழல் இல்லாமல் கூட பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை முகாம்களில் 6 மாதங்களுக்கு மேலாக பல்கலைகழகம் செல்லவிடாமல் தடை போட்டது யார்??? சரி முகாம்களில் தான் இந்த மாணவர்கள் இருந்தார்கள் என்று இராணுவ தளபதி உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கபட்ட பின்னர் இந்த மாணவர்களை எந்த கோணத்தில் இந்த பல்கலைகழக நிர்வாகம் கையாழும்!!!
சாதாரணமாக புதிய பிரிவுகள் ஆரம்பிக்கும் போது முதல் இரண்டு மாதங்கள் கிட்டத்தட்ட ஆங்கில கற்கை நெறியே கற்பிக்கப்படுகிறது. இந்த கற்கை நெறி முடிந்த பின் பிரிவுகளுக்கான கற்கை நெறிகள் அதுவும் ஆரம்ப ஒரு சில மாதங்களில் கடினமான எதுவுமே கற்பிக்க படுவதில்லை.
இந்த மொரட்டுவை பல்கலை கழகத்தில் 4,5 மாதங்கள் வகுப்புகளிற்கு பங்கு பற்றாமல் மருத்துவ சான்றிதழை சமர்பித்துவிட்டு அதே கல்வியாண்டில் மாணவர்கள் கற்க முடியுமென்றால்....... 2,3 மாதங்கள் கழித்து பிந்திய சேர்க்கையில் (waiting List) மாணவர்கள் அதே கல்வியாண்டில் இணைய முடியுமென்றால்.....தொடர்ந்து 2 தடவைக்கு மேல் பெறுபேறுகள் 2.0 ஜிபிஏ ற்கு குறைவாக எடுத்த மாணவர் தன்னால் கற்று அடுத்த பரீட்சையில் கூடுதல் புள்ளிகளை எடுக்க முடியும் என்று கூறிய ஒரே காரணத்திற்காய் அந்த கல்வியாண்டிலையே கற்க அனுமதிக்க முடியுமென்றால்.........
எல்லாவற்றிற்கும் காரணம் மனிதாபிமானமாகவோ அல்லது அரசியலாவோ ஆகத்தான் இருக்க முடியும்.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான சலுகைகள் எம் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லையென்றால் கட்டாயம் அது அரசியலாகத்தான் இருக்க முடியும். இங்கே நான் அரசியல் எனக்குறிப்பிடுவது இனபேதம்.
பல்கலைகழக விடுதிகளில் பதிவு செய்யாமலே பல மாணவர்கள் தங்க முடியுமென்றால் வெறும் 6 மாணவர்களுக்கு அனுமதியளிப்பது என்பது எந்தவொரு நடைமுறை சிக்கலையும் கொண்டுவராது.
ஆக இந்த செனற் கூட்டத்தின் முடிவுகள் சிங்கள படித்தவர்கள் மத்தியிலாவது மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்பதையே வெளிச்சம் போட்டு காட்டும்.
இங்கே சில நினைவுகளை ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
2008 ம் ஆண்டு... பல்கலைகழகத்தில் சிங்கள ஜேவிபி மற்று ஜக்கிய தேசிய கட்சி மாணவர்களுக்கிடையே முறுகல் நிலை வந்து கைகலப்பாக மாறியதால் நான்காம் வருட மாணவர்களின் விடுதியை கால வரையறையற்று மூடுமாறு பல்கலைக்கழகம் அறிவித்தது. அதுவும் பகல் 12 மணக்கு அறிக்கப்படுகிறது மாலை 3 மணிக்குள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அன்றை காலகட்டம் தென்பகுதியில் தமிழர்களுக்கு மிகவும் இறுக்கமான சூழ்நிலையின் உச்சக்கட்டம் ஆரம்பமான பகுதி. பொலிஸ் பதிவில்லாமல் தமிழர்கள் யாருமே வீதிக்கு இறங்க முடியாத நிலை. விடுதிகளில் தங்குவதென்றால் விடுதிப்பதிவிருந்தால் சரி.. மற்றப்படி வெளியில் வீடுகளில் தங்குவதற்கு அந்த வீட்டில் தான் நாங்கள் தங்குகிறவர்கள் என்ற பொலிஸ் பதிவு தேவை. மற்றப்படி யாருமே அப்படி தங்க அனுமதிக்கபட மாட்டார்கள்.
இப்படியான சூழ் நிலையில் தமிழ் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டால் மிகவும் இக்கட்டான சூழ் நிலை ஏற்படும் அதனால் ஏதாவது செய்தாகவேண்டிய நிலை... நண்பர்கள் கூடி கதைத்து விட்டு நான் எம் பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்தேன். அப்போது பிரதி துணைவேந்தரும் கூட இருந்தனர். அப்போது என்னிடம் பிரச்சினை பற்றி கேட்கப்பட்டது. நான் "சேர் உடனடியாக வெளியேறி வெளியில் தங்குவதற்கு பொலிஸ் பதிவு இல்லாமல் யாரும் தங்குவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்... யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு மாணவர்களுக்கு வேறு வழியேதுமில்லை... தயவு செய்து இன்னமும் ஒரு நாள் நாம் விடுதியில் தங்க அனுமதி தாருங்கள்.. அதற்குள் நாம் ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்றேன்"
அப்போது பிரதி துணைவேந்தர் துணைவேந்தரிடம் எனக்கு முன்னால் சொன்னார்..."சேர் அப்படி அனுமதிக்க முடியாது... இவர்களை அனுமதித்தால் பிறகு அம்பாந்தோட்டை காரனும் வந்து கேட்பான்.... அம்பாந்தோட்டை காரனுக்கு பஸ்ஸில இப்ப போகேலுமெண்டா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பஸ்ஸ பிடிச்சு கொண்டு போக வேண்டியது தானே" என்றார்....
உடனே துணைவேந்தரும் ஆமாம் என்று என்னை பார்த்து தலையசைத்தார்.....
இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழ் மாணவர்களின் நிலமை கையாளப்படுகிறது......
இப்படித்தான் 2009ம் ஆண்டு தைப் பொங்கலுக்கும் பல்கலைகழகத்தில் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின் பல கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டது.
அப்போது கூறப்பட்ட காரணம்..... தைப்பொங்கலென்றால் எப்படியும் மாணவர்கள் 75 பேராவது ஆக குறைந்தது வருவார்கள்....இந்த நேரத்தில் கொழும்பில் தமிழர்கள் ஒரே நேரத்தில் 75 கூடுவதால் சிங்கள மாணவர்களுக்கு சங்கடம் ஏற்படுமாம்.
தமிழ் மாணவர்களுடைய பிரச்சினைகளில் இப்படிப்பட்ட முகாமைத்துவமும் இளகிய மனிதாபிமான உள்ளமும் கொண்ட மனித இன நண்பர்கள் வாழும் ஒர் அற்புத கூடம் தான் மொறட்டுவை பல்கலை கழகம்.
எதுவாயினும் எல்லாமே முடிந்த பின்னமும். ரத்தச்சகதியில் ஊறிக்கிடந்து பிணங்களின் வாடைகளை மட்டுமே சுவாசித்து.... இடிகளையும் வெடிகளையும் மட்டுமே கேட்டு..... மனம் தளர்ந்து போய் இன்னமும் உளைச்சல்களில் சிறைப்பட்டு கிடக்கும் சகோதரர்களை அதிலிருந்து விடுவியுங்கள் மாந்தர்களே....6 மாதத்திற்கானவற்றை அவர்களால் இலகுவாக பற்றி கொள்ள முடியும். தாங்கி படிப்பதற்கு மொறட்டுவை பல்கலைகழகத்திலும் வெளியிலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். எமக்கும் வாய்ப்பழியுங்கள்.
இன்று வியாழக்கிழமை...... இன்று செனற் கூடும்...... இதில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்போமாக....
மா.குருபரன்
15-09-09
Share on Facebook
நானும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம்தான். இப்படி ஒரு பிரச்சினை நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. புதிதாக வந்தவர்கள் விரிவுரைகளுக்குச் சமூகமாற்றுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படித்துவிட்டு கேட்டதில் இப்படியான சம்பவம் நடந்ததாக யாருக்கும் தெரியவில்லை. எதற்கும் உங்கள் தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
வருகைக்கு நன்றி "Subankan".
இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் நண்பரே.
இதுவரையில் முடிவு கிடைக்கப்படவில்லை என்றே நம்புகிறேன். சிலவேளைகளில் மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்களோ தெரியவில்லை. அவ்வாறு அனுமதிக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கு (செனற்) எனது நன்றிகளும். ஆனால் இந்த கட்டுரை எழுதும் போது மேற்குறிப்பட்ட சிக்கல்கள் நிலவியது உறுதிப்படுத்தப்பட்டது.
தவறு என்னுடையதுதான். ஆனால் அவர்கள் தற்போது விடுதியில்தான் தங்கியுள்ளார்கள். அத்துடன் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது எனவும் கேள்விப்பட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
தவறேதும் இல்லை...Subankan
"அவர்கள் தற்போது விடுதியில்தான் தங்கியுள்ளார்கள்....அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது எனவும் கேள்விப்பட்டேன்"
நிட்சயமாக சந்தோசமாக உள்ளது. உங்களுடைய தகவலுக்கு நன்றி.
தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.
ramnirshan@gmail.com