Wednesday, October 27, 2010

புதுவீட்டுக்குள் நுழைகிறேன்-------- எழுத்தில் நான் நுழைந்த பின்னணி

0 கருத்துக்கள்

வணக்கம் நண்பர்களே..
இன்று (27-10-10) நான் www.mkuruparan.blogspot.com என்ற முகவரியிலிருந்து    www.mkuruparan.com  என்ற புது முகவரிக்கு போகிறேன்.

என்னை இதுவரை கொண்டுவந்ததன் பின்னணி பற்றி சொல்லிவிடுகிறேன். நான் முதலில் போட்டி ஒன்றிற்காய் எழுதிய கவிதை "ஒளி". 1998 ம் ஆண்டு கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கவிதைப்போட்டி ஒன்றிற்கு என்னை உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்த மீனா ரீச்சர் தெரிவு செய்து அனுப்பியிருந்தார். அது தான் நான் பங்குபற்றிய முதலும் கடைசியுமான கவிதைப்போட்டி. அதன்பிறகு எந்த கவிதைப்போட்டியிலும் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிகம் பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்களில் நாட்டம் இருந்ததால் கவிதைப்போட்டிகள் பற்றி சிந்தி்க்கவேயில்லை.

2002 இன் பிறகு கவிதைகளை எழுதி உள்ளூர் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அப்படி சுடர்ஒளி, ஈழநாதம், உதயன் போன்ற பத்திரிகைகளில் கவிதை வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் உள்ளூர் வானொலி ஒன்றிற்காக கவியரங்கு செய்வதற்கு அகிலன் என்னையும் தெரிவு செய்திருந்தார்.
இங்கு அகிலனை பற்றி சொல்லியாகவேண்டும். அகிலனின் தளம் இது அகிலன். ஒருவரியில் சொல்லப்போனால் பலவிருதுகளுக்கும் பல பாராட்டுதல்களுக்கும் சொந்தக்காரன்.
ம்... கவியரங்கிற்கு அகிலனின் அழைப்பு எனது கவிதைகளுக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது போல் இருந்தது. நாம் "கல்" என்ற தலைப்பில் அந்த கவியரங்கை செய்திருந்தோம். "கல்" இற்காக நான் எழுதிய எந்த வரியும் இப்போது ஞாபகமில்லை. அந்த கவியரங்கிற்கிற்காக அகிலன் எழுதிய கவிதையில் வரும்
"மனித மனங்களிலெல்லாம் மனிதம் வற்றிப்போய் மனசிறுகிக் கிடக்கிறது  கல்லாய்" 
என்ற வசனம் இன்மும் ஞாபகம் நிற்கிறது.

அதன் பிறகு இலங்கை இந்துகலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட பட்டிமன்றம் அகிலன் நான் மற்றும் சுதர்சினி  செய்து மாவட்ட மட்டத்தில் வென்றோம். அந்த போட்டிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் எனக்கு முதல் இடம் கிடைத்து தேசியமட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இந்த தேசிய மட்ட போட்டி நடைபெற்றது. போட்டி நடைபெற்றது 2003 ஆரம்பங்களில் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு உயர்தர பரீட்சை... பின் பல்கலைக்கழகம். அதற்கிடையில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு எதுவுமில்லை. பாடசாலை நண்பர்களின் பிரிவை பற்றி எழுதிய கவிதை ஒன்று சுடர் ஒளியில் வந்தது மட்டுமே.

பல்கலைக்கழகம் சென்றபின்..ஒருதடவை வீட்டிற்கு செல்லும் போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கவிதை செய்யும் படி அகிலன் கேட்டார். புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றி தெரிப்பது போலான ஒரு கவிதை அது. என்னுடைய கவிதைகளுக்கு அங்கிகாரம் கொடுத்து ஊடகங்களில் நுழைத்த நண்பர் த.அகிலனுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

பல்கலைகழகத்தில் எமது பல்கலைகழக தமிழ் மாணவர்களால் வெளியிடும் நுட்பம் புத்தகத்தில் கவிதை எழுதியிருக்கிறேன். அதுபோல இலங்கை சட்டக்கல்லூரி வெளியிடும் புத்தகத்திலும் 2008 ம் ஆண்டு கவிதை எழுதியிருக்கிறேன்.

2007ம் ஆண்டு வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் குழுமம் ஒன்று ஆரம்பித்து அங்கு எழுதுவோம். இங்குதான் கட்டுரைகள் எழுதும் பழக்கம் வந்தது. இனமுறுகல்களை பச்சையாக எழுதுவதாகவும் இனவாதமாக எழுதுவதாகவும் எனது நண்பர்கள் சிலர் பேசியதால் எல்லாவற்றையும் அழித்துவிட்டு அங்கு எழுதுவதையும் நிறுத்தியிருந்தேன்.நினைப்பதை தாள்களில் எழுதி சேமித்து வைத்திருப்பேன். 2009 ம் ஆண்டு புளொக்கின் தொழிநுட்பங்கள் பற்றிய மிகப்பெரிய விழிப்பை ராஜா அண்ணை அவர்கள் தந்திருந்தார். புளொக்கின் வீரியம் பற்றி நண்பர் மாறன் அவர்கள் சொல்லியிருந்தார். இருவருக்கும் எனது நன்றிகள்.அதன்பிறகு புளொக்கில் எழுதுவதை ஆரம்பிதேன்.
2006 ற்கு பிறகு எழுதிய தாள்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் நான் சின்னனில் இருந்து எழுதிய அனைத்து தாள்களும் சேமித்து வைத்திருந்த பெட்டி இறுதிப்போரில் அழிந்து விட்டது. உயிரை தவிர எல்லாமே அழிந்து போய்விட்டது.

இந்த புளொக் எனும் வலைப்பதிவு நிறைய இலக்கிய நண்பர்களை தேடித்தந்துள்ளது. எழுத்து பற்றிய விமர்சனங்களை தந்துள்ளது. தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எழுத்து சமூகத்தில் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை நிட்சயமாக எனக்கு இந்த வலைப்பதிவு தான் புரியவைத்தது. ஊடக மற்றும் வலைப்பதிவு எழுத்துகளிற்கு நான் மிக மிக சிறியவனாக இருந்தும் என் எழுத்துகளுக்கும் அங்கிகாரம் தந்த அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என் எழுத்துகளை பற்றி உங்களின் அத்தனை விமர்சனங்களையும் இன்னமும் செய்யுங்கள். எழுத்துகளினூடாக சொல்லவரும் செய்தியை இன்னமும் தெளிவாக சொல்ல அது வழிசமைக்கும்.

என்றென்றும் அன்புடன்
மா.குருபரன்

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க