Wednesday, January 12, 2011

புதையும் பூமி

8 கருத்துக்கள்
பிள்ளையாரடி : ஆற்றுநீர் அதிகரித்து வீதிகளை மூடிபடி

ஆதவன் நிசப்தமாய்
தூங்க
நிலவும் நட்சத்திரங்களும்
தொலைந்து போன வானம்
பிழந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது...
அங்குலம் அங்குலமாய்
அடிக்கணக்கில் வளர்ந்து
உருவேறி அலைகிறது வெள்ளம்...
பிஞ்சுகளின் பசிக்கதறல்
வீடு பூந்திருக்கும்
வெள்ளத்தின் இரைச்சலுக்கு
யாருக்கும் கேட்பதாயில்லை...
கடல் கலந்துவிட்ட
வெள்ளத்தில்
கண்ணீர் வற்றி
கரித்துக்கிடக்கும் உப்பு நீர்
யாருக்கும் தெரியப்போவதில்லை.....
வீடுகளின் அடுப்புகளில்
வெள்ளம் சமைத்து
ஏப்பமிட்டுக் கொண்டிருக்கிறது...
கனவுகள் பூத்திருந்த
நெற்கதிர்கள்
வேலிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது...
கருமேகம் கூடி
ராட்சத வாய் பிளந்து
கொட்டிக் கொண்டிருப்பதை
எப்படி நாம் தடுப்பது??
ஆற்றில் இப்போது
பாடு மீன்கள்
இருக்க வாய்ப்பே இல்லை...
ஆறெங்கும் சேற்று நீர் மட்டுமே...
வீடுகளையும் வீதிகளையும்
இடம்பெயர்த்த வெள்ளத்தின் அத்தாட்சி
வேலிகளிலும்
வெள்ள நுரை ஒதுங்கும் ஓரங்களிலும்
படர்ந்து போய் கிடக்கிறது.....
மீன்பாடும் தேன்நாடு
வெள்ளத்தில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது....

மா.குருபரன்
12-01-2011


பி.கு : ஈழத்தின் மீன்பாடும் தேன்நாடு என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அசாதாரண மழைகாரணாமக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலகிராமங்கள் மற்றய கிராமங்களோடு தொடர்புகளை இழந்துள்ளன. ஆற்றின் நீர் பல வீதிகளை மூடி ஊர்மனைகளுக்குள் புகுந்து கிடப்பதால் வீதி எது ஆறு எது என்று தெரியாத ஆபத்தான நிலை காணப்படுகிறது. பல லட்டசம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள்தான் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். எந்த நிறுவனங்களும் மக்களுக்கான உதவியில் ஈடுபட்டிருப்பதாக தெரியவில்லை. நிலமை விரைவில் சீராக இறைவனை பிரார்த்திப்போமாக.

8 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க