Saturday, February 19, 2011

எதிர்பார்த்திராத எதிர்காலம்

13 கருத்துக்கள்
1996/97 காலப்பகுதியில் சத்ஜய நடவடிக்கையால் இடம்பெயர்ந்து கோணாவில், கோட்டகட்டி, அம்பலப்பெருமாள், அக்கராயன், ஸ்கந்தபுரம் இப்படி அலைந்த திரிந்தது எம் வாழ்க்கையின் இறந்த காலத்தின் பல பரமானங்களில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. பல புதிய முகங்கள், புதிய வாழ்க்கை முறை, புதிய சூழல் இப்படி சிறுவயதில் எம்மில் இணைந்து கொண்ட விடையங்கள் இன்று மீட்டிப் பார்க்கும் போதுவித்தியாசமான உணர்வுகளை தருகிறது.

கிளிநொச்சி புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க வித்தியாலையத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த நான் யுத்தத்தால் இடம் பெயரும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் அருகில் உள்ள ஏதாவது ஒர் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். இறுதியாக தரம் 7 இல் உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தில் ஸ்கந்தபுரத்தில் வைத்து சேர்ந்து கொண்டேன். ஸ்கந்தபுரம் மணியங்குளம் பிரதேசத்தின் ஓர் எல்லையில் இலக்கம் 2 பாடசாலை காணப்படுகிறது. இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியில் அந்த பாடசாலை வளாகத்தில் கிளி/ கனகபுரம் மகாவித்தியாலையம், கிளி/ உருத்திரபுரம் மகாவித்தியாலையம், மற்றும் இலக்கம் 2 பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது.  3 பாடசாலைகளின் மாணவர்களால் அந்த பிரதேசமே நிரம்பி வழியும். அது வித்தியாசமான காலப்பகுதி. அந்த நாட்களில் தான் நிறைய நட்புகள் கிடைத்தன. பலதரப்பட்ட பிரதேசத்தில் இருந்து வந்த பல நண்பர்களின் நட்புகள் கிடைத்த காலம் அது.

தவிர அந்த காலப்பகுதியில் நாங்கள் இருந்த நிலையை எண்ணினால் இப்பொழுது பெருவியப்பாகவும் காமடியாகவும் இருக்கிறது. பாடசாலையில் எங்கள் வகுப்பு மிகவும் குழப்படிகார வகுப்பாக பெயர்பெற்றிருந்தது. வகுப்பில் எங்கள் நண்பர் கூட்டம் அடாவடித்தனம், பலவந்தமாக மோதுதல், ஆட்களை வெருட்டுதல், என்று ரவுடீசம் காட்டி அடிக்கடி ஆசிரியர்கள், அதிபரிடம் வாங்கிக் கட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. கமல், மயூரன், உஷாந்தன், மனோரஞ்சித், குண்டன் கமல், சிவசக்தி, பரந்தாமன் இப்படி நிறைய பேர். புறாவளர்த்ல் மற்றும் புறாவை இறக்குதல், முயல் வளர்த்தல், நாய்க்குட்டிகள் ஆட்டைய போடுதல், இப்படி ரவுடீசத்திற்கான அந்தகால தகுதிகள் எங்கள் நண்பர்களில் பலரிடம் இருந்ததால் வகுப்பில் ஆதிக்க சக்திகளாக நாங்களே திகழ்ந்தோம்.
தீபனின் றூமில் நானும் மயூரனும் (எத்தனை பல் என்றெல்லாம் எண்ணப்படாது ஓகே)

ஆனால் சமயம், தேவாரம் பாடமாக்குதல், தமிழ் எழுத்துவடிவு, வரலாறு இப்படி பல சந்தர்ப்பங்களில் உச்சக்கட்ட தண்டனைகளை வகுப்பில் அனுபவிப்பவனாக நான் இருந்ததை இப்போதும் மறக்க முடியவில்லை. எங்கள் வகுப்பில் தமிழில் எழுத்து வடிவு மற்றும் திறன் பிரியதர்சினி, பிரதீபன், மற்றும் யூட்குமாரிடமே அதிகம் காணப்பட்டது. வரலாறு மயூரனும், சமயம் கமலுமாக பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். பல தடவைகள் இவர்களால் நான் தப்பித்துக் கொண்டாலும் தப்பிக்க முடியாமல் அடிவாங்கிய நாட்களே அதிகம்.

பூங்கன்றுகள் வளர்த்தல், தோட்டம் செய்தல் இப்படி குழுக்கள் பிரிக்கப்பட்டு செய்த வேலைகள் இன்னமும் பசுமையாய் மனதை வருடிக் கொண்டிருக்கிறது. தோட்டத்தை சுற்றி வரிச்சு கட்டுவதற்காய் தடிகள் வெட்ட மணியம் குள காட்டுக்குள் இறங்கி ஆனைவிழுந்தான் வீதிவரை சென்று பீதியடைந்ததை நினக்கும் போது இன்னமும் அந்த சுவடுகள் தெரிகிறது. களவாய் 1 ரூபாய்க்கு கச்சான் சுருளை வாங்கி புத்தக பைக்குள் வைத்து வகுப்பறையில் சாப்பிட்டதும், மழை ஓய்ந்த நாட்களில் போளை அடிப்பதும், நாவல் பழம் பிடுங்கி காற்சட்டை பாக்கட்டுக்குள் வைத்து வீட்டில் அடிவாங்கியதும், ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைத்து பாடசாலையை சுற்றி சுற்றி ஓடித்திரிந்ததும் இன்னமும் நினைவுகளாய் கனத்துக் கொண்டிருக்கிறது.

அது ஒரு புரிதல் இன்றிய இளமைக்காலம். இன்று நாமிருக்கும் நிலை பற்றி சற்றும் கூட சிந்தித்திராத ஒரு வித்தியாசமான சூழல் நிரம்பிய காலம் அது. எங்களுடன் படித்த பலரும் இன்று எங்கெங்கோ தெரியவில்லை. சிலருடன் மட்டும் இன்னமும் தொடர்பிருக்கிறது.
பிரதீபன்

பிரதீபன்.... இவன் எங்கள் வகுப்பில் பாடசாலை மாறி வந்து சேர்ந்த புத்திரன். தாயார் கனகபுரத்தில் சேர்த்துவிட உருத்திரபுரம் மகாவித்தியாலைய கொட்கைக்குள் புகுந்த மகாவீரன் இவன்(அந்த நேரம் பாடசாலைகளுக்கு எல்லைகள் கிடையாது. எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்தது). பின் எம்மோடுதான் கல்வி கற்றான். இவன் பாடசாலைக்கு வருவதும் தெரியாது போவதும் தெரியாது. எழுத்துவடிவு மற்றும் கற்பளை வளம் அதிகம் என்பதால் தமிழில் இவன் பெயர் அடிக்கடி அடிபடும். நோட்ஸ் பார்த்தெழுதுவதற்கு இவனது கொப்பியையே நான் அடிக்கடி வாங்கிய ஞாபகம் இருக்கிறது.  இன்று தீபச்செல்வனாய், யாழ்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளனாய், 4 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கும் கலைஞனாய் இருக்கும் இந்த பிரதீபன் பாடசாலைக்கு நேரம் செல்ல வந்து பின்னுக்கு சத்தம் போடாமல் இருந்து விட்டு நழுவிவிடும் ஒரு மர்ம சிறுவன். 

ஏறத்தாள 12 வருடங்களின் பின் நானும் இவனும் கடந்த வாரம் ஒன்றாக இருந்து சாப்பிட்டுவிட்டு இருள் மண்டி நிசப்தம் நிரம்பிய யாழ் நகரத்திற்குள் துவச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தோம் அப்போது பிரதீபன் கேட்டான் "மச்சான் நாங்க எல்லாம் படிச்சு கம்பஸ்போய் இப்பிடி அரசியல் அது இது எண்டு கதைப்பம் என்டு நீ எப்பயாவது நினைச்சிருக்கிறியா" என்று. அப்போது நாங்கள் 12 வருடங்கள் பின்னுக்கு போய் நினைவுகளை மீட்டிக் கொண்டு வந்தோம் எஞ்சியது காமடிகளும் சில மனசு நிறைந்த நினைவுகளும் தான்(இப்போது இல்லாது போய்விட்ட நினைவுகள்... எந்த அடையாளங்களும் இல்லாது அழிக்கப்பட்டு விட்ட நினைவுகள்....வசதிகள் இல்லாது வலிகளோட அன்று இருந்திருந்தாலும் அச்சம் இன்றி புன்னகைத்து திரிந்த காலம் அது) .இன்றிருப்பது நாங்கள் சற்றும் எதிர்பார்த்திராத எதிர்காலம்.....

மயூரன் விளையாட்டு உத்தியோகத்தராக பணியாற்றுகிறான்... கமல் கம்பஸ்ஸில்..... யூட் மருந்தகம் வைத்திருக்கிறான்... மற்றயவர்கள் அதிகமானோர் யுத்தத்தால் இடம் பெயர்ந்து ஒவ்வொரு திக்கும் சென்று விட்டனர். மீண்டும் ஒரு நாள் ஒன்றாய் சேருவோம் அப்போது தூசிபடிந்து கிடக்கும் பள்ளிக் கதைகளை தட்டியெடுத்து பேசிச் சிரிப்போம்.

மா.குருபரன்
2-19-2011

13 கருத்துக்கள்:

 • February 20, 2011 at 12:43 AM

  "எதிர்பாராத எதிர்காலம்" உங்கள் படைப்பு , பல நினைவுகளை துயில் எழுப்புகிறது
  உங்கள் படைப்பில் இருந்து ஒரே வகுப்பு நட்புக்கள் நாம் என்பதைக் கண்டு கொண்டேன்
  போரின் வடுக்கள் எம்மை சுட்டபோதும் நாம் அழியாமல் அடை காத்தது எம் கல்வி எனும் மூலதனத்தையே.
  நீங்கள் ஸ்கந்தபுரத்தில் ஆண்டு 7 கல்வியைத் தொடர்ந்த போது, நான் என் பாடசாலை உ .பு .ம.வி யும்
  பள்ளித் தோழமைகள் பிரியமான உயிர்த் தோழி நீங்கள் குறிப்பிட்ட பிரியதர்சினி ஆகியோரைப் பிரிந்து
  வன்னேரிக்குளம் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தேன்.
  மீண்டும் ஒரு நாள் எமக்காய் மலரும் அல்லது நாமே அந்த நாளை அமைப்போம்
  அன்று உலகப் பரப்பெங்கும் பிடுங்கி எறியப்பட்ட நாற்ருக்களாய் நன்றே வளரும்
  எங்கள் நட்புக்கள் சொந்தங்கள் எல்லாம் ஒன்றாய் கூடி எங்கள் மண்ணில் மலரும் நினைவுகளை மீட்டுவோம்
  என்ற எதிர்பாப்புடனும், நம்பிக்கையுடனும் புலத்தில் இருந்து , உங்கள் எழுத்துவடிவம் மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
  நட்புடன் ம.க.கோபிகா

 • February 20, 2011 at 12:49 AM

  எதிர்பார்த்திராத நிகழ்காலம்......இனி எப்படி மாறுமோ யாரறிவர்
  நல்லதோர் எதிர்காலத்திற்கு பிரார்த்திப்போம்.

 • February 20, 2011 at 1:12 AM

  வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி கோபிகா.
  நீங்கள் உருத்திரபுரத்தில் கற்றிருந்தால் அன்றே உங்கள் நட்பு கிடைத்திருக்கும்.... அதற்கென்ன இப்பொழுது உங்கள் நட்பு கிடைத்து விட்டது தானே :) :)

 • February 20, 2011 at 1:15 AM

  ம்... இப்படித்தான்.... எதிர்ப்பார்த்திராத எதிர்காலம் எம்மை சூழ்ந்துவிடும்... இன்றைய நாட்கள் எமக்கு சாதகமான எதிர்காலத்தோடு நாளை விடியலாம்.
  வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி அனாமினா

 • February 20, 2011 at 3:53 AM
  Anonymous :

  நல்ல நினைவுக்குறிப்பு. உங்களின் நினைவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள். தீபனைப் பற்றி உங்கள் வர்ணனைகளை ரசிக்க முடிகிறது.
  - ஹரி

 • February 20, 2011 at 7:04 AM

  வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி ஹரி.

 • February 20, 2011 at 4:57 PM

  ம்ம் அனைவருக்கும் இவ்வாறு தானே நடக்கிறது வாழ்க்கையில்..எதிர்பார்த்தது நடந்தால் .....

 • February 20, 2011 at 11:40 PM

  ம்.... அதென்றால் உண்மைதான் மைந்தன் சிவா.
  வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பா

 • February 21, 2011 at 1:56 PM

  அன்பான குரு

  உனது பதிவுக்கு மிக்க நன்றி. மணியன்குளம் - ஸ்கந்தபுரம் வாழ்க்கை குறித்து போரும் வாழ்வும் பகுதியிலும் பரிமாறியிருந்தேன்.

  உனது பதிவு அன்றைய நமது பள்ளிக்கூட வாழ்வின் மேலும் பல நினைவுகளை எழுதத் தூண்டியிருக்கிறது.

  அன்றைய நமது வாழ்க்கையும் அதனைச் சுற்றியிருந்த அவலமும் சுவையும் நிறைந்திணைந்த கதைகளை நாம் பதிவு செய்வது அவசியமானது நண்பா.

  தொடர்ந்து எழுதுடா. நீ இன்னும் நிறைய சொல்ல வருகிறாய் என்பதை உன் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

  அன்போடு உனது நண்பன்

 • February 21, 2011 at 2:14 PM

  மிக்க நன்றி மச்சான். ம்... நிறைய பேச வேண்டும். வரும் பதிவுகளில் பேசுகிறேன். அந்த நாட்கள் குறித்து நீயும் நினைவுப் பகிர்வொன்று எழுதன்.

 • February 21, 2011 at 2:29 PM

  நிச்சயமாய் எழுதுகிறேன் நண்பா...

 • February 25, 2011 at 12:53 AM
  Anonymous :

  md;gpd; FU, eP; nra;fpd;w ,e;j gzp njhlul;Lk; njhlu;e;J..! vd; gs;spf;fhy epidTfis xU fzk; jl;b tpl;lha; vd; jk;gp. eP njhlu;e;J nry; cd; ,yl;rpa ghijapy;...

 • February 25, 2011 at 9:20 PM

  Anonymous:
  //md;gpd; FU, eP; nra;fpd;w ,e;j gzp njhlul;Lk; njhlu;e;J..! vd; gs;spf;fhy epidTfis xU fzk; jl;b tpl;lha; vd; jk;gp. eP njhlu;e;J nry; cd; ,yl;rpa ghijapy;...//

  அன்பின் குருஇ நீ; செய்கின்ற இந்த பணி தொடரட்டும் தொடர்ந்து..! என் பள்ளிக்கால நினைவுகளை ஒரு கணம் தட்டி விட்டாய் என் தம்பி. நீ தொடர்ந்து செல் உன் இலட்சிய பாதையில்...

  தமிழில் தட்டச்சு செய்வதற்கு http://suratha.com/unicode.htm இந்த இணைப்பை பயன்படுத்தலாம்.

  Anonymous உங்கள் பெயரை குறிப்பிட்டால் நன்றாகக இருக்கும். எப்படியாயினும் உங்கள் வருகைக்கும் கருத்தாட்டலுக்கும் நன்றி சகோதரன்/சகோதரி :) :)

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க