Tuesday, March 29, 2011

அவன் - அவள் --------> ஒரு பள்ளிக் காதல்

14 கருத்துக்கள்

இங்குள்ள அவன் அல்லது அவள் நானாகவும்... மற்றயது அவள் அல்லது அவனாகவும் இருக்கட்டும்... இப்போது "நான்" அவனாகி பேசுகிறேன்....

 எல்லோருக்கும் போல் எனக்கும் நிறைய ஆசைகள், நிறைய கனவுகளுடன் பதின்ம வயதுகள் கடந்து வந்தேன்... பதின்ம வயதுகளில் காதலின் ஈர்ப்புகள் இருக்காதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும், சின்ன சின்ன சண்டைகள்,சிரிப்புகள்,நக்கல்கள், பட்டம் தெளித்தல் இப்படி எதாவது ஒரு காரணத்திற்காய் அவளை எனக்கு பிடித்து போகிறது. அவள் பற்றிய நினைவுகளால் என் பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து விடுகின்றன. ஒவ்வொருநாளும் அவளை பார்ப்பதற்காய் மனம் ஏங்கிக் கிடக்கிறது.துரு துரு என்று பேசிக் கொண்டே இருக்கும் அவள் விழிகள்...எந்த பாலைவனத்திலும் குளிர்ச்சியாய் புன்னகை பூக்களை தூவி விடும் அவள் உதடு.... ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அழகு.... இது தான் என்னை அவளிடம் கட்டிப் போட்டது.. அவள் எனக்கான உறவுதான் என்று எப்போதும் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது....

கொப்பியின் பின்பக்க பேப்பரின் மூலைகளில் அவள் பெயரையும் என் பெயரையும் சேர்த்து எழுதி பல தடவை கிறுக்கி அழித்திருக்கிறேன். எனது விருப்பு அவளிடம் வெளிப்பட்டால் என்னை தப்பாக நினைத்துவிடுவாள் என்பதற்காகவே பல தடவை அவளுடன் சண்டை போட்டிருக்கிறேன்... அப்போது அவள் அமைதியாய் விட்டுக்கொடுப்பது அவள் மேல் உள்ள காதலை பன்மடங்காக்கியது. இருந்தும்  பள்ளி புத்தக பைக்குள்தான் அந்த காதல் பதுங்கி கிடந்தது. அச்சம் அந்தக் காதலை வெளியே வரவே விடவில்லை. ஒவ்வொரு வருடமும் பெரியவர்களாகிக் கொண்டே போகிறோம் ஆனால் காதலுக்கு மட்டும் சிறுபிள்ளைத்தனம் கூடி அவளின் தடங்களை பற்றிக் கொண்டு துள்ளித் திரிகிறது... அரைக் காற்சட்டையில் இருந்து முழு காற்சட்டைக்கு மாறுகிறோம்... முதல் நாள் ஜீன்ஸ் போட்டு பாடசாலை சென்று அவளைத்தான் தேடுகிறது கண்கள்... ஓரமாய் ஒதுங்கி நின்று கள்ளமாய் பார்க்கிறாள்.. புதைத்து வைத்திருந்த அத்தனை காதலும் அவளின் விழியில் காலை மலர்ந்த ரோஜாவாய் பசுமையாய் இருக்கிறது.... அவளது ஓரத்து பார்வையால் எனக்கு கூட வெட்கமாய் இருக்கிறது.... முதன் முறையாக ஜீன் போட்டதை பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... நாங்கள் மட்டும் ஆளையாள் கள்ளமாய் பார்ப்பதும்... தெரியாத மாதிரி இருப்பதும்.. ஒருத்தரை ஒருத்தர் முகத்துக்கு முகம் பார்த்து விட்டால் சிரிப்பதுமாக எங்களுக்குள் தொலைந்து கொண்டிருக்கிறோம்.... ஏன் இப்படி..காதலா??? நிட்சயமாக காதலாக தான் இருக்கும் என்று முடிவெடுக்கிறேன்...

ஒவ்வொரு நாளும் அவளுடன் பேசுவதற்கு காரணங்களை நானே உருவாக்கி கொள்கிறேன்... அவளுக்கும் அது பிடித்துதான் இருக்க வேண்டும்... காதல்.... பிரியம்... எங்களுக்கிடையில் இருக்கும் அன்பை விபரிக்க முடியாது... அவள் உதிர்க்கும் புன்னகைகளை ரசிப்பதற்காகவே அவள் கூடி நிற்கும் இடங்களை சுற்றி வருகிறேன்.. கனவுகளில், காதல் வளர்ந்து அவளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது... குருவிகள்..குழந்தைகள்.. பூக்கள்.. இப்படி எல்லாவற்றையும் மனம் துள்ளிக் குதித்து ரசித்துக் கொண்டிருக்கிறது.... சொல்லப்படாத காதலில் எப்படி இத்தனை மாற்றங்கள்??? நிட்சயமாக அவளின் கண்களும் புன்னகையும் தான் இத்தனை மாற்றங்களை என்னில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.. காரணத்தை நான் தேடிக் கொண்டிருக்கவில்லை... அவள் பற்றிய கனவுகளை நிறையவே ரசித்துக் கொண்டிருக்கிறேன்....

 கனவுகள் எல்லாம் கனவாகிப்போகிறது... பாடசாலையின் இறுதி வாரங்கள், பரீட்சை படபடப்பு வேற.. அவளை காணாத அத்தனை நாட்களும் கொப்பி முழுக்க அவள் பெயரை எழுதி வெட்டிக் கொண்டிருக்கிறேன்... பரீட்சை முடிகிறது... பாடசாலை இறுதி நாள்... அவளுடன் அதிகம் பேச வேண்டும் போல் இருக்கிறது.... அவள் மேல் இருக்கும் காதலை அவள் அறிந்து கொள்ளும் படி நடக்க வேண்டும் போல் இருக்கிறது.. ஆனால் அச்சம் காதலை புத்தக பையை விட்டு வெளியே வரவே விடவில்லை...எல்லாம் முடிந்து போகிறது... அவள் அவளது சைக்கிளை எடுத்து கொண்டு போகிறாள்... அவள் கரியலை பிடித்தபடி கிரவல் வீதியில் அரைபட்டுக் கொண்டு போகிறது எனது காதல்... மனசு பூராக வலி..... கோழை மனசு... அச்சம் நிறைந்த மனசு... சொல்லாத காதலும் அந்த நொடியிலிருந்து தோற்றது போல் தோணுகிறது....

அவள் பற்றிய நினைவுகளை அழிக்கவே முடியவில்லை... அவளை நினைக்காமல்,அவளுடன் கனவில் பேசாமல் இருக்க முடியவில்லை.... கோழைக்காதல் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது....

வாழ்வியலில் பல மாற்றங்கள் நடந்து விட்டது..... சிந்தனைகள்... குறிக்கோள்கள்... வாழ்க்கை முறை இப்படி நிறைய.. எல்லாமே மாறிவிட்டது.... ஏன் அவளின் தொடர்புகூட தொலைந்து விட்டது... எத்தனையோ பெண்களுடன் அவளிற்கு பிறகு பழகியாகிவிட்டது... ஆனால் அவள் மேல் இருந்த ஈர்ப்பு போல்... அவள் என்னை புரிந்து வைத்திருந்த அளவு போல் யாரிடமும் இல்லை என்று மனசு சொல்லிக் கொண்டே இருக்கிறது.... அவளின் தொடர்பை தேடி அலைகிறது மனசு... கடைசிவரை கிடைக்கவே இல்லை.... பழகிப்போன வலிதானே!!!!

பள்ளிக் காதல் இத்தனை வலிதருமா என்று பல தடவை யோசித்திருக்கிறேன்.... மறக்க முடியாமல் அவள் என்னிடம் அப்படி எதை விட்டுச் சென்றாள் என்று தேடுகிறேன்... அவள் உதிர்த்த புன்னகைகள்... கூட்டத்திற்குள் நின்றும் ஓரமாய் பார்த்த பார்வைகள்... அவளிடம் பேசுவதெற்கென்றே உருவாக்கிய காரணங்கள்... எல்லாம் கனவின் ஒர் மூலையில் பசுமையாய் இருக்கிறது....

பல வருடங்களிற்கு பிறகு......


இதயங்களை, உறவுகளை இணையம் இணைத்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது... தொலைந்த உறவுகளை பேஸ்புக் அதிகம் பிடித்து தந்திருக்கிறது.... அப்படியொரு சம்பவம் தான் இது... ஆம் அவள் பெயரில் இருந்து நண்பர் ஆக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கை.....இப்போது பக்குவப்பட்ட பருவமென்றாலும் பள்ளித்தோழி அதும் காதல் கள்ளியை கண்டவுடன்... என்ன படபடப்பு.... உற்சாகம்..எத்தனை எதிர்பார்ப்புகள்.... அதிலும் காதலை எப்படியும் சொல்லியாகவேண்டும் என்ற ஆத்ம உத்வேகம் வேற.... ஆம் இணைத்துவிட்டேன்... சட்டில் இருக்கிறாள்... :ஹாய்" மறுமுனையில் இருந்து அவளும் "ஹாய்"... "எப்பிடி இருக்கிறீங்க"... "நல்ல சுகம்.. நீங்கள்"... இப்படி சம்பாசனை நீண்டு கொண்டே போகிறது...இதற்குள் எப்படி ஆரம்பிப்பது காதல் கதையை.... இப்போதும் சின்னத் தயக்கம்.... அவளாய் கேட்டாள் " கலியாணம் கட்டிற்றிங்களா?? எப்பிடி போகுது லைப்வ்...." இதுதான் சான்ஸ் என்று "உங்களதானே லவ் பண்ணினான்.. நீங்களே இப்பிடி கேட்டா... லொள்ஸ்" பதிலனுப்புகிறேன்... மறுமுனையில் இருந்து "யு ஆர் ரூ லேட்...... எனக்கு இப்ப 2 பிள்ளைகளும் இருக்கு" சாதாரணமாய் பதில் வருகிறது......

 இப்போதும் காதலில் தோற்றுப் போன பீலிங்ஸ்.... ஏன் அவளை இவ்வளவு பிடித்துப் போனது!!!!!!

-யாவும் கற்பனை-


மா.குருபரன்
 28-03-2011

14 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க