Wednesday, August 17, 2011

மதங்களையும் மன்னர்களையும் கடவுள் ஏன் படைத்தான்/ள்??

2 கருத்துக்கள்

அலாரம் அடித்து காலையில் எழுந்த நாட்களைவிட சேவலின் கூவலில் கண்விழித்த நாட்கள் தான் அதிகம். முருக்கம் பூக்களை தின்றபடி குறுகுறுத்துக் கொண்டிருக்கும் பச்சைப் புறாக்களுக்கு கல்லெறிந்து சண்டை பிடித்து நாளின் முதலாவது செயற்பாட்டை தொடங்கிய நாட்கள் தான் அதிகம். அணிலும் புலுனியும் அங்குமிங்கும் திரிய இரண்டு காலில் பாய்ந்து தாவும் "பப்பி"யுடன் மல்லுக்கட்டிவிட்டு பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் தான் அதிகம். எத்தனை மரங்கள்,எத்தனை மலர்கள்,எத்தனை பட்சிகள்,எத்தனை இசைகள்... நாளை குறித்த அச்சமற்ற விடியல்களுடன்தான் என் வாழ்வில் அதிக நாட்கள் விழித்திருக்கிறேன்.  

என்னுடைய பதின்ம வயதுகளின் உலகம் வித்தியாசமானது. உலகின் அத்தனை சுகங்களும் என் தேசத்தில் இருப்பதை உணர்ந்த காலம் அது. வயல்களும்,வாய்க்காலும்,குளங்களும்,காடுகளும் என இயந்திரமற்ற சொர்க்கத்தை உணர்த்திய காலம் அது. அப்பாழுதெல்லாம் கடவுள் கோயில்களுக்குள் மட்டும் தான் இருந்தார். தேவாலையங்களுக்குள் மட்டும் தான் இருந்தார். தேவாரமும் திருப்பலிப்பாடல்களும் பாடித்திரிந்த காலம் அது. எல்லாமே என்னுடைய மதமாக இருந்தது..

இன்று என் பதின்மங்களை தொலைத்திருக்கிறேன். இயந்திர உலகின் சில்லுகளுக்கிடையில் என் தேசத்தின் அத்தனை சுகங்களும் இல்லாது போய்க்கிடக்கிறது. சேவல் எப்படியிருக்கும் என்று இணையங்களில் தேடி பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நாயுண்ணிப் பழம்,சூரைப் பழம் இப்படி வீதியாரங்களில் கிடக்கும் அத்தனை பழங்களையும் பிடுங்கி தின்று பழகிக்கிடந்த நான், இந்தப்பழங்களில் இது இருக்கிறது.. இது கூடாது..இது நல்லது என்ற அட்டவணைக்குள் தள்ளப்ட்டுக்கிறக்கிறேன்…

எதையும் என் இஸ்டப்படி செய்யும் என் பதின்ம வயது தேசத்தில் என்னை மன்னர்களும் அடக்கவில்லை மதங்களும் அடக்கவில்லை. அல்லது என்னை மன்னர்களும் அச்சுறுத்தவில்லை மதங்களும் அச்சுறுத்தவில்லை. என் கிராமத்து வீதிகளை பிரிந்து நகரத்து வீதிக்குள் நுழைந்த பின் தான் கடவுள்கள்மேல் அத்தனை வெறுப்பும் மன்னர்கள் மேல் அத்தனை அச்சமும் பற்றிக் கொண்டுள்ளது.

சிறிங்கா அரசால் தமிழர்கள் கதறக்கதற கொலை செய்யப்படுவதை பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட மனம் இன்று ஒரு தடவை அதிர்ந்து தான் போனது. “யூடியுப்” இல் எதேட்சையாக ஒரு வீடியாவை பார்க்க நேநரிட்டது. மதத்தின் பெயரால் கொலை செய்யப்படுகிறார்கள். இஸ்லாத்திற்கெதிராக அவர்கள் செயற்பட்டதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டு. “அல்லாகு அக்பர்” “அல்லாகு அக்பர்” என்று ஒருவன் தொண்டை கிழிய கத்துகிறான். இன்னாருவன் கழுத்தை "சர சர" வென அறுக்கிறான். இந்த தொடர்ச்சியில் நிறை வீடியாக்கள். பெண்களுக்கு வீதிகளில் வைத்து அடிக்கும் தலிபான்கள்,. வீதிகளில் வைத்து தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றப்படும் கொலைகள், தசை வெடித்து ரத்தம் பீறிட வழங்கப்படும் கசையடிகள் இப்படி நிறைய. எல்லா வன்முறைகளுக்கும் முன் ஒருவன் ஆவேசம் கெகாண்டு “அல்லாகு அக்பர்” “அல்லாகு அக்பர்” என்று கத்துவது இன்னமும் எனது காதுகளில் இரைந்து கெகாண்டே இருக்கிறது.


இது றம்ளான் மாதம். இஸ்லாமியர்களின் புனித மாதம். இஸ்லாமிய நாடுகளில் இந்த நாட்களில் பொது இடங்களில் பகல் வேளைகளில் நீர் அருந்தவேவா உணவு உண்ணவேவா கூடாது. அப்படி ஏதாவது அருந்தினால் ஒரு மாத சிறையும் தண்டமும் அறவிடப்படுமாம். நீர்ருந்திய பலர் சிறைகளுக்குள் தள்ளப்ட்டுள்ளதாக செய்திகள் கூட வந்திருக்கின்றன.
நீ உணவுண்ணாமல், நீர் அருந்தாமல் இருக்கிறாய் என்பதற்காக அடுத்தவனும் செய்யக்கூடாது என்று சொல்வது மதமா?? "அல்லா" என்பவன் யார்?? மனிதங்களை வதைக்க சொல்லவும், தடைகள் விதிக்கவும் அவன் யார்?? ரத்தம் பீறிட ஒருவன் கதறக்கதற சிரசை அறுத்தெறிவதென்றால் என்பெயரை சொல்லி செய்.. உன் பாவங்கள் போய்விடும் என்று சொல்லி வைத்துள்ள “அல்லா” தான் கடவுளா??.  றம்ளான் காலத்தில் நீர்ருந்துபவனை சிறையில் தள்ளவிடு என்று சொல்லி வைத்துள்ளவன் தான் கடவுளா?? இவன் தான் எங்களை படைத்தானா?? ஒரு அரக்கனின் படைப்பா நாங்கள்?? என்ற எண்ணங்கள் என் மனதை துளைத்தபடி இருக்கிறது. 

மதம் இவ்வளவு வன்முறையாது என்று இந்த இயந்திர உலகம் தான் எனக்கு காட்டிக் கொடுத்துள்ளது. திருநீற்றையும் குங்குமத்தையும் முகம் முழுக்க தடவியபடி அரிவாள் கோடாலிகளுடன் முஸ்லிம்களை வெட்டி வீசியெறிந்தபடி ஒருவன் போகிறதன் பாரதத்தில். திருநீற்றுக்குள்ளும் ஆயிரம் வித்தியாசங்கள். அதற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள். இது தான் இந்து மத்த்தின் போதனையா?? அசுரர்களை வதம் செய்ய கடவுள் பிறப்பெடுத்து வருகிறாராம். அப்படியானால் அந்த அசுர்ர்களை படைத்த்து யார்?? அசுரர்களை இயற்கை மரணம் அடைய செய்ய முடியாதவன் தான் கடவுளா??

சிலுவைப் போர்களாகவும், ஜிகாத்துகளாகவும், இந்துத்துவ வெறியாகவும், பெளத்த பேரினவாதமாகவும் இருக்கும் மதங்கள் மனிதனுக்கு தேவை தானா??? ஏன் இவற்றை படைத்தவன் தந்தான்?? மனிதன் மனிதனாக இருப்பதற்கு மதங்கள் எதற்கு?? மதங்கள் வெறிகொண்டலையாத என் வன்னியின் தெருக்கள் எனக்கு வேணும் என்று கனத்துக் கொண்டிருக்கிறது மனம்.

இன்னாரு வீடியோ… அது வித்தியாசமானது… ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியர்கள் பற்றியது. மன்னர்களின் அடியாட்கள் அவனை துன்புறுத்துகிறார்கள். அடிக்கிறார்கள்,சுட்டு தள்ளப்படுகிறார்கள். முரண் கொண்ட எத்தனை தண்டனைகளை வழங்குகிறார்கள். 

இந்த மன்னர்கள் எல்லாம் எப்படி உருவானார்கள்?? எங்கிருந்து உருவானார்கள்?? இரு கைகளையும் பின்புறமாக கட்டி,கண்களை இறுக கட்டி, சுட்டுத்தள்ளுமாறு மன்னன் உத்தரவிடுகிறான்.. அதே போல் செய்கிறான் அடியாள்.அந்த அடியாள் மனிதத்தை தொலைத்த்து எப்படி?? அல்லது அவனது மனிதத்தை தின்றது எது?? மனிதத்தை தின்னும் மதங்களும் மன்னர்களும் எதற்கு??

வாழ்வியலில் இருந்துவிடப்பாகும் இந்த மணித்துளிகளை மட்டும் தானே நாங்கள் யாசிக்கிறேறாம். இதற்கு மதங்களும் மன்னர்களும் எதற்கு?? 

எனது தெருக்களில் நான் அறிந்திராத கடவுள் வந்து குடியிருக்கிறார். கடவுளுக்கு ஆயுதம் தாங்கிய படை பாதுகாப்பு. பாடசாலை முடிந்தவுடன் பட்டாம் பூச்சி பிடிப்பதற்கு ஓடித்தரிந்த பற்றைகளுக்குள் நான் இப்பாழுது செல்ல முடியாது. மன்னரின் அடியாட்கள் மிரட்டுகிறார்கள். "பொன்வண்டுகள்" பிடிக்க ஏறித்திரிந்த "கொண்டல்" மரங்கள் பல தறிக்கப்ட்டுவிட்டன  மன்னரின் அடியாட்களிற்கு பாதுகாப்பில்லையாம். 

இப்பொழுதெல்லாம் என் தேசத்தில் இயற்கையை ரசிக்க அஞ்சுகிறது மனம், மதங்களை நினைக்க பதைபதைக்கிறது மனம், வயல்கள் வாய்க்கால்கள் காடுகள் குளங்கள் என எல்லாமே அச்சத்தை தருகின்றன.. ஊஞ்சல் ஆடிய ஆல மர விழுதுகள் விரக்த்தியாகிக்கிடக்கின்றன... தன் குழந்தைகள் இல்லாத தெருக்களால் எந்த நாவல் மரமும் பழுத்துக் கொட்டுவதில்லை... மாம்பழங்களை திருடுவதற்கு இப்பொழுதெல்லாம் வெளவால்கள் வருவது கிடையாது. கிணற்றடி கிடுகு தட்டியில் இருந்து கத்துவதற்கு புலுனிகள் கிடையாது!!!

என் வன்னியின் சுதந்திரத்தையெல்லாம் பறித்தெடுத்து... நான் அறிந்திராத கடவுளைத் திணிக்கும் மன்னன் ராஜபக்ஷவின் தேவைதான் என்ன!! இவர்களையெல்லாம் கடவுள் ஏன் படைத்தான்!!!

இப்படித்தானே ஒவ்வாரு தேசத்திலும் மன்னர்கள் மனிதங்களின் சுதந்திரங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். மதங்களையும் மன்னர்களையும் கடவுள் ஏன் படைத்தான்/ள்??

மனிதத்தை நேசிப்போம். எங்களெங்கள் தேசத்தில் எமது சுதந்திரம் தேவையென்று உரக்க சொல்லுவோம்.

 மா.குருபரன்.
17-08-20112 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க