Tuesday, October 16, 2012

அழிந்து கொண்டிருக்கும் இனத்தின் பிரதி நான்

0 கருத்துக்கள்


எம்மைச் சுற்றி எங்கிலும்
மனிதம்
உலர்ந்து
உதிர்ந்து கொண்டிருக்கிறது...

உரிமைகளைத் தின்னும்
அரசியலுக்கும்
வாழ்வினைத் தின்னும்
அரசியல்வாதிகளுக்குமிடையில்
நாராய் கிழிந்து தொங்குகிறது
தமிழினம்..

அதோ!!
அந்த சட்டத்திற்குள்தான் - என்
மொழி
பூட்டப்பட்டிருக்கிறது..
அதோ!!
அந்த சட்டத்திற்குள்தான் - என்
உரிமைகள்
அடைக்கப்பட்டிருக்கிறது..
அதோ!!
அந்த சட்டத்திற்குள்தான் - என்
நிலம்
பறிக்கப்பட்டிருக்கிறது..
வாழ்வின்
அத்தனை நாதங்களையும் தொலைத்து
சிதிலேறிய சுருதிப் பெட்டியாய்
வீசப்பட்டுக் கிடக்கும்
தமிழினத்தின் பிரதி நான்...

சர்வசாதாரணமாக
என் மொழி கொலை செய்யப்பட்டு
என் கழுத்தில்
தொங்கவிடப்படுகிறது..

நான் வாழ்ந்த சுவடுகள்
அழிக்கப்பட்டு
யார் யாரினதோ சுவடுகள்
வரையப்படுகின்றன..

நான்
எமது பெயர்களை
கிறுக்கித் திரிந்த
எம் தெருக்களின் சுவர்களெல்லாம்
எனக்கு தெரியாத
மொழியால் நிரப்பப்படுகிறது...
ஆம்!!!
நான் என்னை மறக்க
வற்புறுத்தபட்டுக் கொண்டிருக்கிறேன்..

நான் எனக்காயும்
நாம் நமக்காயும் பேசுவதற்கு
நிறையவே
அஞ்சப்பழகி விட்டோம்...

எம் முப்பாட்டன்களின் முகங்கள்
எங்களிடமிருந்து மறைக்கபட்டு
எமக்கான முகமூடிகள்
தயாரிக்கப்பட்டு
பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன..
முகமூடிகளின் வர்ணத்தை வைத்து
எம் வாழ்வின் தரம்
தீர்மானிக்கபட்டுகிறது..
ஆம்
அத்தனை நாதங்களையும் தொலைத்து
சிதிலேறிய சுருதிப் பெட்டியாய்
வீசப்பட்டுக் கிடக்கும்
தமிழினத்தின் பிரதி நான்...


மா.குருபரன்
11-9-12


தமிழன் தமிழனாய் வாழ்தல் இந்த நூற்றாண்டின் இந்த வருடங்களோடு முடியப்போகிறதா!!!
முள்ளிவாய்க்கால் முதல் கூடம்குளம் வரை அவலம் எமக்கானதாக மட்டுமே தொடர்கிறது... 

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க