Tuesday, April 9, 2013

செயற்கை நிலங்களில் வாழ மரங்களுக்கே பிடிக்கவில்லை.. எம்மால் எப்படி முடியும்?

0 கருத்துக்கள்
காலையில் சேவலின் கூவலைக் கேட்டு பல வருடங்கள் கடந்துவிட்டது. உடம்பெல்லாம் சேற்றுத்தண்ணீர் பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. மரங்களை கொண்டாடி.. பூக்களை கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏங்கங்களால் நிரம்பிக்கிடக்கும் ஒரு மாலைப்பொழுதில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் உருத்திரபுரம் என்ற கிராமம். கிளிநொச்சிக்கு மேற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் ஒரு செழுமையான கிராமம்தான் உருத்திரபுரம்.

குளங்களும் காடுகளும் வயல்களும்தான் என் கிராமத்தின் எல்லை. மின்சாரவிளக்குகள் இல்லாத தெருவில் நிலா வெளிச்சத்தில் ஓடித்திரிந்த நாட்கள் அதிகம். என்னமோ தெரியவில்லை எல்லாவற்றையும் இழந்து போலிக்குள் திணிக்கட்டுவிட்டேனோ(டோமா) என்று மனம் கனத்துக்கொண்டே இருக்கிறது.
முறிப்புக்குளம் (கிராமத்து எல்லை ஒன்று)

இயற்கையில் நான் அதிகம் ரசிப்பது மரங்கள், பூக்கள், குருவிகள் தான்.

எங்கள் வீட்டைச்சுற்றி ஏராளமான மரங்கள் இருந்தன. வேம்பு, மாமரம் (அதிலும் கறுத்தக் கொழும்பான், விளாட்டு, புளி, வெள்ளைக்கொழும்பான் என ரகங்கள் வேறு), பிலாமரம், பப்பா மரம், புளியமரம், தென்னைமரம், பனைமரம், முருங்கைமரம், இத்திமரம், பூவரசு, கிளுவை என பெரும் மரங்கள். தவிர தேசி, தோடை, துளசி, பசளி, கற்பூரவள்ளி, முல்லை, மல்லிகை, செம்பரத்தை (சிவப்பு, மஞ்சள், தூக்கணாஞ் செம்பரத்தை, பிள்ளையார் பூ செம்பரத்தை இப்பிடியும்), ரோசா, நித்தியகல்யாணி, எக்சோறா (அதிலும் நிறைய வகை) இதைவிட ஏராளமான குறோட்டன்கள்.
கிராமத்திற்கு குறுக்காக பாயும் வாய்க்கால்

பூக்களில் தேனைக்குடித்து தேசி மரத்தில் கூடுகட்டி குடும்பம் நடாத்திக் கொண்டிருந்தன சிட்டுக் குருவிகள்.

பூக்கண்டுகள் வாடிக்கிடக்கும் பொழுது "இதுக்கு எவ்வளவு தண்ணி ஊத்தினாலும் காணாது...எப்ப பாத்தாலும் பின்னேரத்தில மூஞ்சிய தொங்க போட்டுக் கொண்டுதான் நிக்கும்" என்று ஏசுவதும் மறுநாள் காலை அது சிலிர்த்து நிற்கும் பொழுது அதற்கு ஒரு தட்டு தட்டிவிட்டு பாடசாலை போவதும் மனதை பிழிந்து கொண்டிருக்கிறது இன்று.

காலையில் முருக்கம் பூக்களை தின்றபடி "காட்டுப்புறாக்கள்" குறுகுறுத்துக் கொண்டிருப்பதுவும்.. பிலாமரத்தில் புலுனிகளும் அணிலும் கீச்சுட்டுக் கொண்டிருப்பதையும், கோழிக்குஞ்சுகள் அங்குமிங்கும் ஓடித்திரிவதையும்.. நாயும் பூனையும் செல்லம் கொஞ்சுவதையும் ரசித்து வளர்ந்த என்னால் அவற்றை நினைத்துப்பார்க்கும் பொழுதெல்லாம் அந்த நாளே தொலைந்துவிடுகிறது.

நான்கு சுவர்களுக்கிடையில் இயந்திர வாழ்வில் என்னை நானே முடக்கிக்கொண்டிருக்கிறேன். இயற்கையில் நான் விழித்ததே கிடையாது. சுவாசிப்பதற்கும்.. இதமாக தூங்குவதற்கும் மின்விசிறியும் குளிரூட்டிகளும் தான் எனக்கு காற்றைக் கொடுக்கின்றன.

செயற்கை நிலம் மரங்களுக்கு பிடிக்கவில்லை


கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கடையில் சிவப்பு ரோசா மரத்தையும், கற்பூரவள்ளி கண்டேன். உடனேயே வாங்கி நானிருக்கும் கொங்ரீட் கூட்டிற்கு (அடுக்கு மாடி குடியிருப்பு) கொண்டு வந்தேன்.

செயற்கை மண்ணும்.. பூப்பதை தூண்டும் மருந்தும்

ரோஜா அடுத்தடுத்த கிழமைகளில் நிறைய பூத்தது. பாவம் சூரிய வெளிச்சம் படவில்லை என்று 12வது மாடியில் எமது வீட்டு நடைபாதைக்கருகில் தொங்கவிட்டேன். கொஞ்ச நாளில் தண்ணீர் ஊற்றினாலும் வாடியது. மண் சரியில்லையாக்கும் என நினைத்து ஒரு பை மண்ணை காசுக்கு வாங்கி போட்டேன். இலை கரும் பச்சையாகி நன்றாக இருந்தது. இப்படியே ரோசாவுடன் சண்டை தொடங்கியது.

திரும்பவும் அதே கடைக்கு போனேன். கடையில் ரோசாவை பூக்க வைப்பதற்கான மருந்தும் விற்கிறார்கள். அதை வாங்கி வந்து கொஞ்சம் போட்டேன்.. அடுத்தடுத்த கிழமைகள் மொட்டுடைத்து பூத்தது.

அன்றுதான் இந்த இயந்திர மனிதர்களில் வெறுப்பு உருவாயிற்கு. ரோசா எப்பொழுது பூக்க வேண்டும் என்பதையே இந்த பாழ்பட்ட மனிதன் தீர்மானிக்கிறான். அதன் பிறகு ரோசாவிற்கு பூக்கும் மருந்தை போடுவதே கிடையாது. எனக்காக நீ பூக்க வேண்டாம் என்று விட்டவிட்டேன். செடி படர்வதற்கு ஒரு துணை கூட கிடையாது. கண்முன்னால் இந்த ரோசா அல்லாடுவதை தாங்கமுடியாமல் இருந்தது. கிளைகளை வெட்டிவிட்டேன். அது குருத்துகளை தளைத்து மொட்டுகள் உடைத்திருக்கிறது.

அதன் கிளைகளை சின்ன சின்னதாய் வெட்டி அதே சாடியில் இட்டேன். அது உக்கி எருவாகி அதனுடன் கலந்துகிடக்கிறது. செயற்கை மண்ணை போடும் போதெல்லாம் இந்த சாடி மரங்கள் ஒப்பாரிவைத்து அழுவது போல் இருக்கிறது.

ஒரு மரத்தாலேயே செயற்கை மண்ணில் வாழ முடியவில்லை!!!! நாங்கள் எப்படி வாழ்வது.
செயற்கையாக்கப்பட்ட நிலத்தில் வாழ்வுப் போராட்டம் நடாத்தும் மரங்கள்

எமது வாழ்வின் அரசியலும் அது தான். நாங்கள் மண்ணோடு பிறந்து மண்ணோடு வாழ்ந்து பழகியவர்கள். என்னதான் புது உடுப்பு போட்டாலும் மண் தரையில் குந்தி எழும்புவதற்கு சங்கடமடையாதவர்கள்.

நாவல் மரத்தில் ஏறி நாவல்பழம் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு அதே கையில் அன்னதானம் வாங்கி மரங்களுக்கு கீழ் இருந்து உண்பதில் எமது ஆத்மா சந்தோசமடைகிறது. இப்படிப்பட்ட எங்கள் வாழ்வுரிமையை கொங்கிறீட் கூடுகளுக்குள் இருந்து யாரோ நிர்ணயிக்கிறார்கள்.

எமக்கு வாய்க்காலில் குளித்தாலும் வருத்தம் வராது அந்த அளவு மண்ணும் தேகத்துக்குமான நேசம் எமக்கு. நாங்கள் மண்ணீது அளவுகடந்த காதலும் எமது ஆன்மாவையும் அலையவிட்டிருப்பவர்கள்.

மண்வாசம் தெரியாதவர்கள் தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள். எமது மண் எமக்கு ஆத்மா, எமது மொழி எமது வாழ்வு.

மா.குருபரன்
09-04-2013



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க