இந்த பதிவின் தலைப்பு சம்மந்தமான கருத்துக்களை இறுதியில் நீங்கள் தான் வாசிக்க முடியும்.
வாழ்வியல் அரசியல் எதுவும் எழுதக்கூடாது என என்னளவில் முடிவெடுத்து நிறைய மாதங்கள் ஆகிவிட்டன.
நடைப்பிணமும்.. போலிகளுக்குள் வாழ்வவனுமாய் மாறப் பழக ஆரம்பித்து நிறைய காலம் கடந்துவிட்டது. அதோ அந்தச் சட்டத்திற்குள் தான் என் மொழி சிறைவைக்கபட்டிருக்கிறது என்று சொல்லி தூரவிலகிக் கொள்ளும் சாமர்த்தியத்தை பழகிக் கொண்டிருக்கிறேன். தளவாடிகளில் என்னை நானே நித்தம் காறி உமிழ பழகிவிட்டேன்.
எழுத்துக்களை கட்டிப்போட்டு இனத்தின் எளிய சனங்களில் ஒருவனாய் மாறிய எனக்கு புத்தகங்கள்தான் தாகத்தை தீர்க்கின்றன.தமிழ்நாட்டு அறிஞ்ஞர்களுக்கு மிக்க நன்றிகள். உங்கள் தயவால் ஏராளமான மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசித்தாகிவிட்டது.
இனம், இனஅழிப்பு,வாழ்வு, போராட்டம், விடுதலை, தலைவன் எல்லா இனங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒரே வகையை சார்ந்தவனாகவே இருக்கிறான். அதே போல் எதிரி, துரோகி, கோழை இவர்களும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்.
இந்த நூற்றாண்டின் நீட்சியில் கடந்த நூற்றாண்டு போரும், போராட்டங்களும், அரசியலும் தான் செல்வாக்கு செலுத்துகின்றன.
கடந்த நூற்றாண்டை பொறுத்தவரை 2ம் உலக யுத்தத்திற்கு முன்பு, பின்பு மற்றும் அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்பு என கட்டங்கள் பிரிக்கப்பட்ட காலப்பகுதியில் அரசியலின் சமனிலைப் போக்கு நிறைய ஆட்டங்களை ஆடியிருக்கிறது.
ஏராளமான விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்கள் வலுப்பெற்றது 2ம் உலக யுத்தத்திற்கு முந்தைய அல்லது இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் தான்.
ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆட்சி அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு நிலங்கள் சூறையாடப்பட்டதும்.. பிரித்தானிய அத்துமீறல்கள் கண்டங்கள் கடந்து அதிகாரம் செலுத்தியதும் இந்த காலக கட்டத்தில் உச்சத்தை எட்டியிருந்தன.
அதே போல் அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின் உரிமைக்கான விடுதலைப்போராட்டங்களுக்கு பயங்கரவாத சுலோகங்கள் மாட்டப்பட்டன.
2ம் உலக யுத்த காலப்புகுதியில் அல்லது அதற்குபிந்திய குறுகிய காலப்பகுதியில் ஏராளமான இனங்கள் விடுதலை பெற்றுவிட்டன. விடுதலைபெற்ற ஏராளமான இனங்கள் தமது விடுதலையை வீடுகளில் இருந்து பெறவில்லை. அவர்கள் சிந்திய ரத்தமும் கொடுத்த விலையும் விலைமதிக்க முடியாதவை.
2ம் உலக யுத்தத்திற்கு பின்னரான விடுதலைகளில், பூரணவிடுதலைக்காக சிந்திய ரத்தத்தின் வலிமையை மறைத்து ஆழும் அரசியலின் செல்வாக்கிற்காக சொந்த இன விடுதலையை தாரைவார்த்த இனங்களில் தமிழினமும் ஒன்று.
இந்திய விடுதலைப்போராட்டத்தின் மூலமாக இருக்ககூடிய நேதாஜின் படையில் அதிகளவில் இருந்தவர்கள் தமிழர்களே அதே போல் இலங்கை விடுதலையடையும் பொழுதும் அதிகாரம் மிக்க தலைவர்களாக இருந்தவர்களும் தமிழர்களே... ஆனால் இந்த இரண்டு நாட்டிலும் இன்று தமிழன் என்பவன் அருவருக;கத்தக்க இனமாக மாறியிருக்கிறான் அல்லது மாற்றப்பட்டிருக்கிறான்.
இந்திய விடுதலைக்காக படைகட்டிய இனம் தன்னினம் தான் என்பதை தமிழகம் மறந்துவிட்டது. இலங்கையில் தமிழன் அடுத்த சில பத்தாண்டுகள் கடந்து தன்னினத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து மீண்டும் போராட ஆரம்பித்தான்.
விடுதலைபெற்றுவிட்டாதாக அறிவக்கப்பட்ட பின்னர் மீண்டும் விடுதலைக்காக போராடியது தமிழனத்தின் இன்னொரு பகுதி. மற்றொரு பகுதி தான் கடைசிக்கு முதல் அடிமை என்று தக்கவைத்துக் கொள்வதற்காக போராடிவருகிறது. அது தான் தமிழகம்.
தன் வரலாறு... தன் தொன்மை எல்லாவற்றையும் தொலைத்து சாதி பேதங்களில் தன்னை சீரழித்து ஆண்ட இனத்தின் முதல்அடிமைகளாக தங்களை பிரகடனப்படுத்தி கொண்டனர் தமிழக மக்கள்.
கோடிக்கணக்கில் மக்களை வைத்துக் கொண்டு இத்தனை அடிமைகளாக இந்த உலகத்தில் எந்த இனமும் வாழ்ந்ததில்லை என்பது தான் வரலாறு.
இனி தலைப்பு சம்மந்தமான விடையத்திற்கு வருகிறேன்.
ஏரானமான விடுதலைப்போராட்டங்கள் நாசகார ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் முசோலிலினியின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தான் ஆக்குரோசமாக நடந்திருக்கின்றன.
குறிப்பாக லிபிய " உமர் முத்தர்" இன் போராட்டம் முற்றிலும் வேறுபட்டது. பாலைவனத்தில் அவர் படைகளை எதிர்கொண்ட விதமும் விடுதலைப் போராட்டத்தை ஒழுங்கமைத்தவிதமும் இன்றும் மெய்சிலிர்க்க வைப்பன.
லிபிய விடுதலைப்போராட்ட தலைவன் "உமர் முக்தர்" இந்த பாலைவனக் கிழச்சிங்கம் யார் என்பதை இணைங்களில் தேடிப்படியுங்கள். |
இன்றைய ஈரான், அசைபர்ஜான் என எல்லா தேசங்களும் போராடின. அவர்கள் போராடிய விதம்.. செலுத்திய விலை கற்பனை பண்ணிப்பார்க்க முடியாதவை.
இந்த சேங்களை கட்டியெழுப்பியவர்கள் செலுத்திய தியாகத்தின் விலை எங்கள் கற்பனைகளுக்கு உட்பட்டவையல்ல.
இன்று தமக்கென தனிப்பெரும் தேசங்களை கட்டியமைத்து வைத்திருக்கும் லிபியா..ஈரான் போன்ற நாடுகளை விடுவித்தவர்கள் எதிர்கொண்ட சமூகவியல் பிரச்சினைகள் ஏராளமானவை.
அந்தந்த தேச விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்களினதும்... அந்தந்த தேச விடுதலைக்கு எதிராக செயற்பட்டு ஆழும் ஆக்கிரமிப்பு அரசியலுக்கு ஆதரவாக கொடி தூக்கி திரந்தவர்களினதும் பரம்பரை இன்று தம்மை விடுதலைபெற்ற நாட்டின் பிரஜைகளாக பிரகடனப்படுத்தி வாழ்கின்றனர் என்பதுதான் காலக்கொடுமை.
இன்று தலைமுறை தாண்டி தம்மை சுதந்திர பிரஜைகளாக பிரகடப்படுத்தியிருக்கும் இவர்களின் முப்பாட்டன்கள் அன்று சுதந்த விடுதலைப்போராட்டம் தவறென்றும்... வாழ்வியலுக்கு ஒத்துவராதென்றும்... வாழும் நாட்களின் தங்களின் சுகபோகங்களை அழிக்கிறது என்றும் கோசமிட்டார்கள். காட்டிக்கொடுத்தார்கள். அவர்களுக்காக வேலை செய்தார்கள். ஆனால் இன்று அவர்களின் பரம்பரையினர் தங்களை சுதந்திர பிரஜைகளாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.
இதே வரலாறுகள் தான் இன்று போராடிக் கொண்டிருக்கும் இனங்களுக்கும் நடக்கிறது. போராட்டங்கள் பிழையென்றும்... தாம் அனுபவிக்கும் சுகபோகங்களுக்கு தடையாக இருக்கிறதென்றும்... இவை வேண்டத்தகாத வேலையென்றும் பேசுகிறார்கள்.. கட்டாயம் பேசுவார்கள். இவர்களின் அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கடுத்த தலைமுறையோ தம்மை அந்த சுதந்திர போராட்ட பிரஜைகளாக அடையாளப்படுத்திக் கொள்ளதான் போகிறது.
இன்று அடக்குமுறை அரசியலின் மலவாசல் நக்கும் நடுநிலையாளர்களின் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ தங்களை சுதந்திர தேசத்தின் பிள்ளைகளாக அறிமுகப்படுத்திக் கொள்ளதான் போகிறார்கள்.
வரலாறுகளின் உண்மைகள் கசப்பாக இருக்கிறது மடடுமல்லாமல் அருவருப்பாளர்களுடன் வாழுகிறோமே என்ற குற்ற உணர்வையும் சுமத்துகிறது.
போராடு இல்லையேல் உன்பாட்டில் தூர விலகி இரு. இன்று ரத்தம் சிந்துபவனின் விடுதலையில் தான் உன்பிள்ளையோ அல்லது பிள்ளையின் பிள்ளையோ வாழப்போகிறது.
ஆக்கரமிப்பாளனின் மலவாசலை எந்த அளவு நக்குகிறாய் என்பதில் உன் தலைமுறையின் விதி தீர்மானிக்கப்படுவதில்லை.. இதுதான் வரலாறு.
வாழும் நாட்களில் நான் அடிமை என்பதை விட தோற்றவன் என்பது மேல். எனது தோல்லையை என் பிள்ளை வென்றான் என்பதுதான் சரித்திரமும் வரலாறும். என் இனத்தின் அடுத்த தலைமுறை நிட்சயம் ஆழும்.
மா.குருபரன்
23-06-2013
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க