Sunday, June 29, 2014

சாபமிட்டு ஒதுங்கிய உலகு!!!

0 கருத்துக்கள்


தானமிட்டு வளர்ந்த நிலம்
ஓலமிட்டு கதறிய போது
சாபமிட்டு ஒதுங்கிய உலகா - எம்
வாழ்வின் மீது காதல் கொள்ளும்!!

கரைகளிலெல்லாம் அழுகிய உடல்களும்
கரங்களிலெல்லாம் சிதறிய ரத்தமுமாய்
கண்ணீர் வற்றி
வயிறு வரண்டு
பேய்களின் கால்களில் விழுந்த போது
சாபமிட்டு ஒதுங்கிய உலகா - எம்
வாழ்வின் மீது காதல் கொள்ளும்!!

ஆடையிழந்து
அரை உயிர் இழந்து
கோபமிழந்து
அனாதையாய் மண்ணைவிட்டு
நீதி வெல்லுமென்று சாய்ந்த போது
சாபமிட்டு ஒதுங்கிய உலகா - எம்
வாழ்வின் மீது காதல் கொள்ளும்!!

பொட்டிழந்து
பூவிழந்து
கட்டிய தாலியிழந்து செத்தபின்னும்
புணர்ந்து போன பேய்களோடு
ஒட்டி வாழ் என்று
சாபமிட்டு ஒதுங்கிய உலகா - எம்
வாழ்வின் மீது காதல் கொள்ளும்!!

ஒட்டி வாழ்வதா
ஒதுங்கி வாழ்வதா
விட்டுக் கொடுத்து விரக்தியோடு சாவதா!!!
மாண்டு.. மீண்டும் மாண்டு
உக்கிப் போகுது சனங்களின் எலும்பு..


29-06-2014



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க