புரிதல் இல்லாத வயதிலிருந்து துயரங்களை கடந்து போதல் இயல்பாகிவிட்டாலும், துயரங்களை அறியாத மனிதர்களுடன் பழகிய பிறகு எல்லாத் துயரங்களும் அச்சமூட்டுகின்றன.
தூசிபடியாத வீதிகள், அழுக்கேறாத ஆடைகள், அட்டவணையிடப்பட்ட இயந்திரவியல் வாழ்வின் மனிதர்களில் ஒருவராக நடிக்கப்பழகியபிறகு கடந்துவந்த துயரங்களும், காணும் அவலங்களும் எம்மை நடிகர்கள் என திரும்ப திரும்ப ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கின்றன.
பல்கலைக்கழகம் செல்ல முன்னர் நான் வாழ்ந்திருந்த தேசத்தில் பிச்சைக்காரர்கள் இருந்திருக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் பிச்சையெடுத்திருக்கவில்லை. அதனாலோ என்னமோ "பிச்சையிடுதல்" பிச்சை கேட்பவனின் இயலாமையை ஊக்குவிக்கும் செயற்பாடாக மனதினில் பதிந்தது.
வவுனியா தாண்டியபிறகு பிச்சையெடுத்தல் ஒரு தொழிலாகவே நடைபெறும் செயற்பாடு என்பது நாளுக்குநாள் புரியத்தொடங்கியது. பிச்சை கேட்பவர்கள் உபயோகிக்கும் அனுதாப உத்திகள், பையில் இருக்கும் சில்லறைகளை எடுத்துக் கொடுக்க தோணும். 2007 இல் நடந்த ஒரு கசப்பான அனுபவத்திற்கு பின்னர் "எவன் காலில் விழுந்து கதறினாலும் பிச்சையிடுவதில்லை" என்ற முடிவெடுத்திருந்தேன். இன்றளவும் பிச்சையிடுதல் "ஒருவனின் இயலாமையை ஊக்குவித்தல்" என்பதை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இருக்கட்டும். பிச்சையெடுப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அது ஆட்சியாளரின் தோல்வி. அந்த அரசியல் எமக்கு தேவையில்லை.
ஆனால் நான் குளிருட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில், எம்மொழி பேசக் கூடிய சக மனிதன் ஒருவன் வயிறுகாய்ந்து தெருக்களில் உறங்கிக் கொண்டிருப்பான். இந்தத் துயரம் இன்று நான் வாழும் சமூத்திற்கு புரிந்துவிடப்போவதில்லை. நாங்கள் காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை.
புறக்கோட்டையிலோ அல்லது பிறிதொரு நகரிலோ பிச்சையெடுப்பவர்களும் நாங்களும் ஒரே கடையில்தானே உண்போம். (2009 ற்கு பிறகுதான் வடகிழக்கில் பிச்சைக்காரர்கள் உருவாகினார்கள்). ஒரே பேருந்தில் தானே பயணம் செய்வோம். அதனால் அப்பொழுது சக மனிதனின் துயரம் உறுத்தியது கிடையாது.
இப்பொழுதெல்லாம் நிறையவே நடிக்கப் பழகிவிட்டோம்.
------------------------------------------------------------------------------------------------------
கீழே இருக்கும் புகைப்படங்கள் தமிழ்நாட்டின் தெருக்கள் மற்றும் கோயில்களில் நான் எடுத்தவை. நிட்சயமாக அந்த மனிதர்களுக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் இவை.
எங்கே தவறு நடக்கிறது!!!! வாழ்தலுக்கு போதுமாக இல்லையா இவ் உலகின் வளங்கள்!!!
வடபழனி, தமிழ்நாடு |
சிறீரங்கம், தமிழ்நாடு |
ஜந்துரதக் கோயில், தமிழ்நாடு |
ஜந்துரதக் கோயில், தமிழ்நாடு |
எல்லோரும் எம் மொழி பேசுபவர்கள்!!
நாங்கள் போக விரும்பாத தெருக்களில், நாங்கள் பார்க்க விரும்பாத சூழலில் எங்கள் சக மனிதர்கள் வாழுகிறார்கள். அவர்களை நாங்கள் செய்திகளாய் வாசிக்கிறோம்.
எங்கே தவறு நடக்கிறது!!!!
கொஞ்சக் காசாயினும் தங்கள் உழைப்பிற்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் இன்னும் சில மனிதர்கள் மேலே சொன்ன தெருக்களிலும் கோயில் சூழலிலும் இருக்கிறார்கள்!! அவர்களையும் வாசித்துவிட்டுப் போங்கள்...
மா.குருபரன்
11-06-2014
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க