Sunday, October 26, 2014

அரசியல் எமது உரிமை அபிவிருத்தி அரசின் கடமை - வரவு செலவு திட்டத்தை புரிந்து கொள்ளல்

0 கருத்துக்கள்
ஈழத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரே அரசியல் நிலைப்பாடுதான் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில் தமிழ் மக்கள் மீது அபிவிருத்தி அரசியல் மற்றும் சலுகை அரசியலை திணிப்பதற்கு பல தரப்புகள் தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன. இருந்தாலும் தமிழ் மக்களின் (வடக்கு கிழக்கு) அரசியல் நிலைப்பாடானது மூன்றாம் உலக நாடுகளில் இருக்க கூடிய சாதார மக்களின் சலுகை அரசியலில் இருந்து வேறுபட்டது. தமிழ் மக்களின் இந்த அரசியல் தெளிவுதான் சிறிலங்கா அரசை ஆழும் எந்த தரப்புகளுக்கும், சிங்கள மதவாத கட்சிகளுக்கும் பெரும் தலையிடியாக இருக்கிறது.

வடக்கில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு பலதரப்பட்ட அபிவிருத்தி முன்னேற்பாடுகள் நடக்கின்றன. பல திட்டங்கள் ஆழும் அரசியல் தலைவர்களால் திறக்கப்படுகின்றன.

ஆம் எல்லாம் நடக்கின்றன. இவை ஆழும் சிறிலங்கா அரசின் திட்டங்களா? இந்த திட்டங்களில் சிறிலங்கா அரசின் பங்களிப்பு எவ்வகையாது? இந்த அபிவிருத்தி திட்டங்களை உண்மையில் உரிமை கொண்டாடக்கூடியவர்கள் சிறிலங்கா ஜனாதிபதியும் அமைச்சருமா என்ற விளக்கத்தை பொருளியல் ரீதியாக புரிந்து கொள்ளவேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

யாழ்தேவி, யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம், கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டம், வீதிகள், வீடுகள் என எல்லா திட்டங்களிலும் ஆழும் அரச தரப்பு முழுமையாக மூக்கை நுழைத்து உரிமை கொண்டாடுவதன் பின்னணியில் இருக்க கூடிய அரசியல் எல்லோருக்கும் புரியும் என்பதால்; இந்த திட்டங்களில் அரசின் பங்களிப்பு என்ன என்பதையும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்பதையும் வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஓரளவேனும் ஏன் புரிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதையும் கிராம மட்ட சனங்களின் கண்ணோட்டத்தில் கட்டாயம் பார்த்தாக வேண்டும்.

வடக்கில் அபிவிருத்தியும் அரசின் பங்கும்

வடமாகாணத்தைப் பொறுத்தவரை மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு நிதியே அரசு ஒதுக்கிவருகிறது. ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களானது முற்று முழுதாக வெளிநாடுகளால் "நன்கொடை"யாக வழங்கப்படும் நிதியே. அதாவது சிறிலங்கா அரசு கடனாக பெறும் நிதியில் இருந்தோ நேரடி திறைசேரி நிதியிலிருந்தோ வடமாகாண அபிவிருத்திக்கு அரசு பெருமளவில் நிதி ஒதுக்குவதில்லை என்பதே இங்குள்ள உண்மையாகும்.


வெளி நாடொன்று குறிபிபட்ட அளவு நிதியை ஒரு குறிபிட்ட பிரதேச குறிப்பிட்ட அபிவிருத்தி பணிக்கு நன்கொடையாக வழங்குகிறதென்றால் அந்த நிதியை கையாளுவதற்கு தேவையான சட்ட வேலைகளுக்கு மாத்திரமே சிறிலங்கா அரசு தனது திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குகிறது. இருப்பினும் குறித்த நன்கொடை நிதியானது பயன்பாட்டிற்கு வரும்பொழுது அரசாங்கமானது தான் ஒதுக்கிய பணத்தை அதிலிருந்து மறைமுகமாக எழுத்துவிடுகிறது.

இலகுவாக முறையில் விளங்குவதென்றால் 100ரூபாயை வெளிநாடு நன்கொடையாக தருமென்றால் அரசு சட்ட வேலைகளுக்கு 10ரூபாவை தனது நிதியில் இருந்து ஒதுக்கும் பின்னர் அந்த 10 ரூபாவை நன்கொடை 100ரூபாயிலிருந்து எடுத்துவிடும். ஆக வெளிநாட்டின் நன்கொடை நிதி 90ரூபாய்க்குரிய பயன்பாட்டையே கொடுக்கும். (அந்த 90 ரூபாயில் ஆட்டையப் போடும் கணக்கு !!!!)

இரணைமடு நீர்வழங்கல் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி "கடனாக" 1 673 மில்லியன் அளவில் ஒதுக்கியிருந்தாலும் 2015 ற்கான வரவு செலவுத் திட்டத்தில் பிறிதொரு நாடு "நன்கொடை"யாகவும் கிளிநொச்சி-யாழ்ப்பாண நீர்வழங்கல் திட்டத்திற்கு  நிதி வழங்குகிறது.

வடமாகாணத்தில் போரால் பாதிக்கபட்ட மக்களுக்கான வீடுகள், விளையாட்டுத்திடல்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், சுகாதார மேம்பாடுகள் என பாரிய அடிப்படை தேவைகளுக்கான துறைகள் பலவும் "நன்கொடை" நிதியில் தான் அபிவிருத்திகள் செய்யப்படுகின்றன. இந்த அபிவிருத்தியை அரசு செய்யும் அபிவிருத்தியாக காட்டு மோசமான அரசியல் முட்டாள்த்தனத்தை பல அதிகாரிகள் செய்வது பரிதாபத்திற்குரியதாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

தவிர நாங்கள் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் 15 வீதம் அரசிற்கு வரியாக கொடுக்கிறோம். ஆனால் அந்த அளவிற்கு சேவைகளை பெறுகிறோமா என்பதே கேள்வி. நாங்கள் அனுபவிக்கும் அரச துறைச் சேவைகள் குறித்து விமர்சனங்களை வைக்க முடியுமா அதற்கு தீர்வுகள் கிடைக்குமா என்பது பாரிய பிரச்சினை.

வரிகள் அதிகரிப்பு அல்லது குறைப்பினூடாக மக்களுக்கான சேவைகளில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன என்து குறித்து சுயகற்றை செய்யாத அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கண்மூடித்தனமாக கொண்டாடுவது சமூகத்திற்கே கேவலமான ஒன்று.

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாளப்போவது யார்? ஆளுனரா அல்லது முதலமைச்சரா? வடமாகாணத்திற்கும் கிடைக்கும் வருவாயை கையாளப்போவது யார்? ஆளுனர் உள்ளூராட்சி மன்றம் மாகாணசபை என மூன்று வெவ்வேறு அரசியல் தரப்புகளால் கையாளப்படும் ஒரு குழப்பகரமான நிலையை உருவாக்கி தமிழ்ச் சனங்களின் அரசியல் இருப்பை  திசைமாற்றும் கேவல உத்தியும் இந்த அரசியல் சமூகம் செய்கிறது.

எது எப்படி இருப்பினும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்து நடப்பு அரசியலில் இருந்து வெளியேறியிருக்கும் இந்த நேரத்தில் தேர்தல் அரசியலில் இருக்கும் சூட்சமங்களை தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் வீதிகளை,வீடுகளை,பாடசாலையை,எல்லாவற்றையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காகதான் மக்கள் வரி கட்டுகிறார்கள். நான் வீடுகட்டினேன் எனக்கு ஓட்டுப் போடு என்று அரசியல் செய்வது இந்திய அரசியலே தவிர படிப்பறிவு உள்ள சமூகத்தின் முன் செய்யக் கூடிய அரசியல் அல்ல.

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு.

அரசியல் எமது உரிமை அபிவிருத்தி அரசின் கடமை. இதை தமிழினம் இன்றுபோல் என்றும் ஞாகபம் வைத்திருத்தல் அவசியம்.


2015 வரவு செலவு திட்ட நகலில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை கீழே இணைத்துள்ளேன் பாருங்கள்.







தவிர மாவட்ட ரீதியிலான நிதி ஒதுக்கீடுகளும் உள்ளன. புரிந்து கொள்ளக் கூடியவர்கள் சமூகத்தில் மக்களுடனான தொடர்பில் இருப்பவர்கள் இந்த அரசியல்கள் குறித்து தெளிவான நிலையில் இருப்பது சமூகத்திற்கு ஆரோக்கியமானது.

அமைச்சர்கள் எப்படி இருந்தாப்போல பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் வரவு செலவுதிட்ட நகலை படியுங்கள் புரியும். :)

மா.குருபரன்
26-10-2014

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க