Tuesday, December 23, 2014

ரஷ்ஸிய மன்னன் ஜார் இன் வீழ்ச்சி போன்று சிறிலங்கா மன்னனுக்கும் வரப்போகிறதா!!

0 கருத்துக்கள்

உலக வரலாற்றிலேயே நூற்றாண்டு கால மன்னர் ஆட்சியை மக்கள் புரட்சியால்  பிய்த்தெறிந்த பெருமை ரஷ்ஸியர்களையே சாரும்.

ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னன் 1917ம் ஆண்டு மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டு பின்னர் குடும்பத்தோடு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தவிர அரச குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானவர்களை தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பிற நாடுகளில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து பின்னர் மாண்டனர். இது வரலாற்றின் மிகச் சுருக்கம்.

ஜார் மன்னன் மீது மக்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு உண்டாயிற்று? ஜார் மன்னின் சம்பவங்களையும், ஜார் மன்னர் அகற்றப்பட்ட புரட்சி பற்றியும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். இதை இன்றைய இலங்கை மன்னன் மகிந்த ராஜபாக்ஷவுடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறிலங்காவை பொறுத்தவரை  ஆழும் தரப்புகளின் தமிழ் பேசும் மக்கள் மீதான அரசியல் நிலைப்பாடு ஒருபோதும் மாறியது கிடையாது. பாத்திரங்கள் மாறினாலும் உள்ளிருப்பது மாறவில்லை.

ஆனால் 2015 ற்கான சிறிலங்கா அரச அதிபர் தேர்தலானது "மன்னனை மாற்றுவதற்கான தேர்தல்" என்ற தொனிப்பொருளில் சிங்களப் பெரும்பான்மையினரிடையே எழுச்சிகரமாக பிரச்சாரப்படுத்தபட்டுக் கொண்டிருக்கிறது.

ராஜபக்ஷ மன்னரின் அதிகார கரங்களின் நேரடித்தாக்கமானது, இளவரசர் மற்றும் மன்னரின் அமைச்சர்கள் ஊடாக தமிழ் மக்களை பாதித்துக் கொண்டிருந்தாலும், எல்லாப் பாதிப்புகளும் தமிழ் மக்களைப்பொறுத்தவரை வழமையானவை தான் என்ற கருத்தியல் தமிழ் மக்களிடையே இருப்பதால் யார் சிறிலங்கா அரச அதிபரானாலும் ஒரேவிதமான அணுகுமுறைதான் இருக்கும் என்ற எண்ணக் கரு, இந்த தேர்தலில் வாக்களிப்பதா இல்லையா என்ற முடிவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமிப்பின் சமிஞ்சையை எதிர்பார்த்து நிற்க வைத்திருக்கிறது.

இருந்தாலும் சிங்களப்பெரும்பான்மையினரிடையே நடந்து கொண்டிருக்கும் "மன்னனை அகற்றுவதற்கான" எழுச்சிகர பிரச்சாரங்களின் பின்னணியில் இருக்க கூடிய வரலாற்று தொடர்புகளை புரிந்து கொள்ளல் அவசியம்.

ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னனும் ஒரு மூட நம்பிக்கையாளன். சூனியங்களை நம்புபவன் என்ற எண்ணக்கருத்து மக்களிடையே வளர்ந்திருந்தது. அதற்கு மூல காரணம் மன்னனின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியிருந்த "ரஸ்புடின்" என்ற கிறிஸ்தவ பாதிரியார்.

ரஸ்புடினின் மடியில் மன்னனும் அரசியாரும் இருப்பதாக வெளியாகிய கார்டூன்

ரஸ்புடினிடம் அபார சக்திகள் இருந்தாலும் தனது "உல்லாச" வாழ்க்கைக்காக அரச குடும்பத்தையே கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

இன்று சொந்த மக்களையோ அல்லது பிறநாட்டு தலைவர்களையோ சந்திக்க போகும் போது மகிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ கைகளில் ஏதோ ஒரு உலகத் தகட்டை வைத்திருப்பது போல் ஜார் மன்னனின் முடிவுகள் மற்றும் அரசவை கூட்டங்களில் ரஸ்புடினின் செல்வாக்கு மிகையாக காணப்பட்டது .


ஜார் மன்னன் காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்கள்


ஜார் மன்னன் காலத்தில் மக்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் கல்வியோ, மருத்துவமோ, உணவோ தரமான முறையில் கிடைக்கவில்லை. கிராம மக்களுக்கு கல்வி கிடைக்கவே இல்லை என்ற அளவில் இருந்தது. உறைபனிக் காலங்களில் மக்கள் தகுந்த இருப்பிட வசதியின்றி மாண்டார்கள். ஒரு துண்டு ரொட்டிக்கு வழியின்றி தவித்தார்கள். மக்கள் பெருமளவில் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்திருந்தாலும் எல்லாம் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. உழைப்பிற்கேற்ற ஊதியம் மக்களுக்கு கிடைக்கவில்லை.


ஜார் மன்னனின் மகனுக்கு இருந்த "இரத்தம் உறையா நோயை" குணப்படுத்தக் கூடிய சக்தி ரஸ்புடினிடம் மட்டுமே இருந்ததால் ரஸ்புடினின் ஆலோசனைகளின் படியே மன்னர் குடும்பம் செயற்பட்டது. மக்களின் துயரங்களை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ளாமல் மக்களின் உழைப்பை தங்களின் சொத்தாக்கினார்கள்.

பண்ணைகளிலும் தொழிற்சாலைகளிலும் மிகவும் கஸ்டப்பட்டு உழைக்கும் மக்கள் ரொட்டிக்கு வழியின்றி இருக்க மன்னர் குடும்பம் மதுவிருந்துகளிலும் பெண்களுடனான சிற்றின்ப உல்லாசத்திலும் வசதியாக இருந்தனர்.

ரஸ்புடின் ஒருபுறத்தாலும் அரச வம்சம் மறுபுறத்தாலும் ரஸ்ய மக்களின் உழைப்பை உல்லாசமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் ஒரு நேரச் சாப்பாடின்றி தவிக்க மன்னர் குடும்பம் கேளிக்கை விழாக்களை கொண்டாடிக் கொண்டிருந்தது. ரஸ்புடின் தனது இஸ்ரத்திற்கு தானே ஒரு மதக் கொள்கையை உருவாக்கி பாவங்களப் போக்கி இறைவனிடம் சேர்ப்பதாக கூறி தனது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் முதலாம் உலகப் போரில் அயல் நாடுகளுடன் மோதவேண்டிய நிலமை ரஸ்யாவிற்கு ஏற்பட்டது. ரஸ்ஸியப் படைகள் மோசமான தோல்விலை சந்தித்திருந்தன. தோல்விக்கு காரணம் மன்னர் மட்டத்தில் எடுக்கப்பட்ட சில மோசமான முடிவுகள் என்றும் அதற்கு மன்னரின் மூட நம்பிக்கையான ரஸ்புடின் தான் காரணம் என்றும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.


சம காலத்தில் மக்களின் உழைப்பை கொள்ளையிட்டு சுகபோக வாழ்க்கை வாழும் மன்னனின் குடும்பம் மற்றும் ஆழும் தரப்பு பற்றி மக்களுக்கு புரியவைக்கும் வேலையில் சில குழுக்கள் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கின (லெனின் போன்றவர்கள்).

ரஸ்ஸியப் படைகள் மோசமாக தோற்ற பிறகு படையினர் இருப்பிடம் திரும்புகின்றனர். அப்போது மன்னருக்கு எதிரான சுவரொட்டிகள் காணப்படுகின்றன. ஆனால் அதை வாசித்து புரிந்து கொள்வதறகு அந்த படைவீரனுக்கு கல்வியறிவு கிடையாது. காரணம் ரஸ்ஸிய மக்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் திட்டம் மன்னனின் ஆட்சியில் இருக்கவில்லை. அதனால் அந்தப் படைவீரன் "என் கண்ணை அவித்துவிட்டாய் ஜார் மன்னா" என்று வீராவேசம் கொண்டு கத்தியபடி மன்னருக்கு எதிரான கோசங்களை வீதியில் எழுப்பியதாக சிலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்படி மக்கள் மத்தியில் இருந்த மன்னன் மீதான அதிருப்தி அரச அதிகாரிகள் மற்றும் படைத் தரப்பினரிடையேயும் பரவுகிறது.

இதே நேரத்தில் மன்னனுக்கு எதிரான மக்கள் தொகுதியினருக்கு குழுக் குழுவாக லெனின் இன் ஆட்களும் வேறு சில குழுக்கழும் ஆயுத பயிற்சியும் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மன்னரின் படையுடன் ஆயுதமேந்தி போராடக் கூடிய வகையில் மக்கள் அமைப்புகள் கட்டமைக்கபட்டடு விட்டன.

இப்படி நிலமை மோசமான மாறிக்கொண்டுவர,மன்னனின் மோசமான முடிவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் ரஸ்புடின் என்ற பாதிரியாரே காரணம் என நம்பிய அரச குடுத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்  ரஸ்புடினை கொலை செய்யும் திட்டத்தை போட்டு இளவரசர் பிலிக்ஸ் தலமையில் ரஸ்புடின் கொலை செய்யபட்டு ஆற்றில் வீசப்படுகிறார்.

மக்கள் புரட்சியின் உச்சம்


ரஸ்புட்டினின் மறைவு பற்றிய வதந்திகள் ஒருபுறம் மக்கள் புரட்சி மோசமாக வெடிக்க கூடிய நிலை என எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது.


மக்கள் உழைப்பை தின்று ஏப்பமிட்டுக் கொண்டிருந்த மன்னனின் குடும்பத்திற்கு எதிராக மக்கள் திரண்டெழுந்தார்கள். புரட்சியாளர்களை கட்டுப்படுத்த அவர்களை சுட்டுக் கொல்லும்படி மன்னன் கட்டடையிடுகிறான். ஆனால் அலை அலையாக திரண்ட மக்களை ஒட்டுமொத்தமாக சுட்டுக் கொல்ல முடியவில்லை. மன்னனின் குடும்பம் அரண்மனைக்குள் ஒழிந்து கொள்ள மன்னனின் வம்சத்தினர் ஒவ்வொரு இடமாக பதுங்குகின்றனர்.

இறுதியில் மக்கள் புரட்சி வெல்லப்படுகிறது. மக்களிடம் கல்லவியறிவு இல்லாததால் தாம் செய்யும் தொழில் ரீதியாக பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்டு மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. அந்த பிரநிதிகளை கல்லவியறிவு கூடியவர்கள் வழிநடத்தினார்கள். இது தான் மக்கள் புரட்சி வென்றதன் வரலாற்று சாராம்சம்.

தொடர்ச்சியாக, கைது செய்யபட்ட மன்னர் குடும்பத்திரை விடுவிக்க போவதாகவும் தயாராக இருக்குமாறும் தகவல் சொல்லப்பட்டது. மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு அறையில் விடுதலைக்கு தயாராக இருக்க திடீரென்று அவர்கள் மீது சரமாரியான துப்பாக்கி பிரயோகம் செய்யபட்டு படுகொலை செய்யபட்டார்கள்.

பின்னர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களை தேடித்தேடி பிடித்து தூக்கிலிட்டு கொன்றார்கள். பிலிக்ஸ் உள்ளிட்ட சிலர் தப்பி ஓடி பின்னர் வெளிநாடுகளில் மண்டார்கள்.* மக்கள் தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்கிறார்கள். காலப்போக்கில் ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராக திரும்புகிறார்கள். அதை அகற்ற மக்கள் மோசமாக போராட வேண்டி வருகிறது.

*போராடத் தொடங்கிய இனம் தனது இலக்கை அடையாமல் அடங்கிய வரலாறுகள் மிகச் சொற்பமே. அந்த இனம் முற்று முழுதாக அழிந்தோ அல்லது கலப்பினமாக மாற்றபட்டோதான் போராட்டங்கள் நசுங்கியிருக்கின்றன. (உ+ம் பர்மாவில் நடைபெற்ற "கரேன்" மற்றும் "ஆரக்கான்" இனங்களின் போராட்டத்தை இந்தியா அழித்தது. அதே வழி முறையை  தமிழ் மக்களின் போராட்டத்திலும் பாவித்து மூக்குடைபட்டது வரலாறு)


மா.குருபரன்
23-12-2014
0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க