ஊரில ஒரே ஒரு செக்கு அதுவும் கந்தையரிட்ட இருந்ததால அவர செக்கு கந்தையர் எண்டு சனம் செல்லமா கூப்பிடும். ஆள் நல்ல ஜாலியான மனுசன். சின்ன பெடியள் எண்டாலும் பம்பலா கதைக்கும்.
கந்தையர் காலமாகிட்டார். மறக்க முடியாத மனுசன்.
2003 சித்திரா பறுவம் அண்டைக்கு முருகன் கோயில்ல கஞ்சி காச்சினது. பெடியள் எல்லாம் விளையாடிப் போட்டு கஞ்சி குடிக்க கோயிலுக்கு போனம்.
சித்திரா பறுவ கஞ்சி தெரியும்தானே உறைப்பும் இருக்காது இனிப்பும் இருக்காது. ஏன் உப்புக் கூட இருக்காது. ஆளுக்காள் கஞ்சி வாங்கி குடிக்கேக்க தான் விசயமே தெரிஞ்சுது. இதை எப்பிடிடா குடிக்கிறது?? கோயில்ல கஞ்சி வாங்கியாச்சு எறியவும் ஏலாது. என்ன செய்யிறது!!!
வடை ஏதும் இருந்தாலும் மிக்ஸ்பண்ணி குடிக்கலாம். பெடியளுக்கு வடையும் தரேல்ல. சரி என்ன செய்யிறதெண்டு யோசிக்கே தான் வைரவருக்கு வடைமாலை போட்டிருந்தும் அது கழட்டடேல்ல என்றதும் தெரிஞ்சுது. சரி வடை மாலைய ஆட்டைய போடுவம் எண்டு பிளான் பண்ணியாச்சு.
வைரவற்ற பீடம் உயரமானது. பாஞ்சு ஏறி எண்ணையில வழுக்கி விழுந்தாலும் எண்டிற்ரு ஒரு தீராந்திய வச்சு ஏறி வடை மாலைய நான் கழட்ட அதை தர்சன் வாங்கி குமராட்ட குடுக்க எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சுது.
ஜயர் வைரவருக்கு போட்ட வடைமாலையை கழட்ட போயிருக்கிறார். வடைமாலை இல்லை. பிரச்சினை வெடிச்சிட்டு. வடைமாலை எங்க?? பெடியள்தான் ஆட்டைய போட்டிற்றாங்கள் என்றது ஜயருக்கு விளங்கிட்டு. ஜயர் ஊருக்கு புதுசு. பெடியளிட்ட வந்து நேர கேக்கேலாது. ஆள் கோயில் நிர்வாகத்திட்ட சொல்லி உடனே விசாரிக்க சொல்லிட்டார்.
அந்த வடையும் உருப்படியான வடையில்ல. ஒரே எண்ணை. சிலது கருகின வடை வேற. ஆனா ஜயர் விடுறமாதிரி இல்ல.
சரி எண்டு நிர்வாகம் விசாரிச்ச இடத்தில எல்லாரும் தெரியாது எண்டு சொல்லிட்டாங்கள். ஒரு கறுத்த ஆடு மட்டும் வச்சிருந்த பாதி வடையோட போய் போட்டுக் குடுத்திட்டு. குருதான் கழட்டினவன் தர்சன்தான் வாங்கினவன் குமராதான் குடுத்தவன் எண்டு அப்பிடியே போட்டுக் குடுத்திருக்கு.
வாங்கினவனுக்கும் குடுத்தவனுக்கும் பிரச்சினையில்லையாம். கழட்டினவருக்குதான் பிரச்சினையாம்.
வைரவரின்ர வடமாலையை கழட்டினபடியா இனி ஜயர் பூசை செய்யமாட்டாராம். கோயில் அசுத்தமாகிட்டாம். பிரதிஸ்டை செய்தாத்தான் தான் இனி பூசை செய்வார் எண்டு அய்யர் கறாறா சொல்லிப்போட்டாராம்.
பிரதிஸ்டை எண்டா என்ன? நான் கோயில சுத்தி உருளோணுமே எண்டு கேட்டன். ச்சி ச்சீ.. வைரவற்ற வடையில கை வைச்ச படியா ஒரு பூசை செய்யோணுமாம். சரி செய்திட்டுப் போங்க.. அதுக்கென்ன எண்டு கேட்டா.. அந்த பூசை செய்ய பத்தாயிரம் செலவாகுமாம்.
கொய்யால உந்த வடைக்கு பத்தாயிரமா!!
சரி பாத்துக்கலாம் எண்டு முடிவெடுத்தாச்சு.
நாளைக்கு பூசை. பூசைக்கு போனா தெற்பை போடணும். மாட்டினான்டா சேகர் எண்டு ஆயிரும் என்ன செய்யலாம்!! எண்டு யோசிச்சு கொண்டு நிக்க தான் செக்கு கந்தையர் வந்தார்.
கந்தையாண்ண நாளைக்கு கோயில்ல ஒரு பூசை. "ஆற்ற பூசை" எண்டு கந்தையாண்ண கேக்க "குருவின்ர பூசை தான் ஆனா தெற்ப போடேலாது அவனால நீங்க போடுங்கவன்" எண்டு குமரா சொல்ல, கந்தையாண்ண "டேய் உனக்கு என்ன பிரச்சினையடா?? கோயில்ல பூசை செய்யிற அளவுக்கு பெரிய கேஸோ" எண்டு கேக்க.. "ஒண்டுமில்ல கந்தையாண்ண.. சின்ன சிக்கல் ஒண்டுதான்" என்டு மழுப்பியாச்சு.
தெற்பைக்கு ஆள் ரெடி. ஆனா பத்தாயிரத்துக்கெல்லாம் பூசை செய்யேலாது. இரவு ஜயரிட்ட போய் சொல்லியாச்சு. "இஞ்ச பாருங்கோ.. பத்தாயிரத்துக்கெல்லாம் பூசை செய்யேலாது. வேணுமெண்டா தேங்காய் பால் அப்பிடியான சாமான்கள் தரலாம். நீங்க நாளைக்கு பசாம பூசைய முடிக்கிறீங்கள்". எண்டு சொல்லிட்டு போயாச்சு.
நாங்க ஒரு இடத்தில இருந்து படிக்கிறனாங்க. அங்க இதுதான் கதை. "காட்டிக்குக் குடுத்தவனுக்கு அடி போடுவமா இல்ல பத்தாயிரத்துக்கு பூசை செய்ய சொன்னவருக்கு அடி போடுவமா?. பேசாம வடைய காணல எண்டு சொன்ன ஜயருக்கே சொட்ட போடுவமா?" (ஹா ஹா ஹா ஹா)
கந்தையாண்ண இரவிரவா யோசிச்சிருக்குமாக்கும். அடுத்த நாள் தெற்பை போட போகேக்க பக்கத்தில நிண்ட பெடியளிட்ட ஆள் கேட்டிருக்கு "உண்மையிலையே என்னடா பிரச்சினை" பெடியள் சொல்லியிருக்கிறாங்கள் சும்மா ஒரு சின்ன சிக்கல் அவ்வளவுதான் எண்டு. (நாங்க கனபேர் அங்கால பக்கமே போகல)
கந்தையாண்ண சொல்லியிருக்கு "இந்த இளசுகளுக்கு என்ன பிரச்சினை!! ஏதாவது லவ் கேஸா தான் இருக்கும்" எண்டிற்ரு ஆள் தெற்பைய போட்டு பூசையும் முடிஞ்சுது.
பின்னேரம்தான் ஆழுக்கு விசயம் தெரியும். நான் கிரவுண்டடியால போகேக்க கந்தையாண்ண கண்டிற்ரு. " டேய் வடுவா.. வடைமாலைய ஆட்டைய போட்டிற்ரு என்னை தெற்பை போட வச்சிட்டீங்களேடா. " எண்டார்.
"கந்தையாண்ண.. இப்ப இருக்கிற வைரவர் நீங்க தெற்பை போட்ட ஆள் தான். இனிதான் ஆள் நல்லா காவல் இருப்பார் யோசிக்காதீங்க" எண்டு சொல்லி போன பிறகு. காண சந்தர்ப்பம் கிடைக்கல.
ஏல் எக்ஸாம். யாழ்ப்பாணம் பிறகு கம்பஸ் அதுக்குப்பிறகு பாதை பூட்டீற்ரு. காணவே கிடைக்கல. போனவருசம்தான் ஒருக்கா கண்டன்.
கந்தையாண்ண காலமாகிட்டார். கந்தையண்ணையின்ட செக்கு இனி சுத்துமா தெரியல.
கந்தையாண்ணையின்ட ஆத்மா சாந்தியடையட்டும்.
குமராவும் தொடர்பில்ல. போர் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டது. நிறையப் பேர் ஊரவிட்டு போய்ட்டாங்கள்.
ஊர்ல முந்தி இருந்த மாதிரி நெருக்கங்கள் இருக்குமா தெரியல.
இப்ப பிள்ளையார் கோயில் நாவல் மரமும் இல்லை. முருகன்கோயில் வேப்பமரத்தடில நிண்டு பெடியள் கதைக்கிறதுமில்ல.
மா.குருபரன்
13/6/15
பழைய கால நினைவுகளில் தானே எங்கள் பாதி வாழ்க்கை ஓடு கிறது .நல்லதொரு பதிவு குருபரன் .நிறைய எழுதுங்கள்
உண்மைதான் கரிகாலன்.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் கரிகாலன்.