Saturday, July 18, 2015

தனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்

0 கருத்துக்கள்

நீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிருக்கிறேன்.

குர்தீஸ் இனம் தனிநாடு கேட்டு பின்னர் சுயாட்சி கேட்டு பின்னர் சமஸ்டி கேட்டு பின்னர் மிகப்பெரிய இன அழிவிற்கு உள்ளாகி மீண்டெழுந்து பின்னர் சுயாட்சி கேட்டு பின்னர் இந்த தலைமுறை தனிநாடு கேட்டு நிற்கிறது. 


அந்த கதைதான் இது. எப்படி என்று வாசித்துப் பாருங்கள். 


குர்திஸ்தான் என்பது எல்லைகளாக துருக்கி சிரியா ஈராக் ஈரான் போன்ற நாடுகளை கொண்ட ஒரு நிலப்பரப்பு.

பெரும்பான்மை அரேபியர்களுக்கு மத்தியில் வாழும் சிறுபான்மையினர்தான் இந்த குர்திஸ்கள். ஈராக், ஈரான், துருக்கி எல்லைக்குட்பட்ட பிரதேங்களில்தான் இவர்கள் செறிந்து வாழுகிறார்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களின் பூர்வீக நிலமும் அதுதான்.

பண்டைய பல நாகரீகங்கள் தோன்றிய நிலமான இதில் குர்தீஸ்களும் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள்.

ஈராக்கை பொறுத்தவரை அங்கு அரேபியர்கள் (குடியேற்றப்பட்டவர்களும்) தவிர அசிரியன்கள், துர்க்மேனியர்கள், பெர்சியர்கள், ஆர்மினியர்கள், மார்ஷ் அரபுகள் (மிக பழமையான ஆதிவாசிகள்) என ஏராளமான இனக் குழுமங்கள் இருக்கின்றன. இவர்கள் தனித் தனி அடையாளம் கொண்டவர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே குர்திஸ்கள் தமது இன அழிவு குறித்து சிந்திக்க தொடங்கியது மட்டுமல்லாமல் தமக்கான அரசியல் அதிகாரம் குறித்தும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

பேரரசுகளின் மாற்றங்களின் போது அவர்கள் தமது நிலை குறித்து அக்கறைப்பட்டிருந்தாலும் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமது அரசியல் விடுதலை குறித்து மிக ஆழமாக வேலை செய்ய இறங்கினார்கள். தமக்கான நாட்டினை குர்திஸ்தான் என பெயர் சூட்டிக் கொண்டார்கள்.


மேற்குலகின் நயவஞ்சகம்


முதலாம் உலகப்போர் முடிவில் தமது அரசியல்  குறித்து மிக  ஆழமாக இறங்கிய குர்திஸ் மக்கள், பிரித்தானிய அரசிடம் "குர்திஸ்தான்" குறித்தான கோரிக்கையை வைத்தார்கள். முதலாம் உலகப் போர் முடிவில் மத்திய கிழக்கு முழுவதையுமே பிரித்தானியாவும் பிரான்ஸ்சும் தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.


இந்த நிலையில் 1920 களில் பிரித்தானிய கூட்டணி நாடுகள் மற்றும் துருக்கிய ஓட்டாமா பேரரசுக்கும் இடையில் பிரான்ஸ்சில் வைத்து Treaty of Servres என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ( Servres என்பது பிரான்ஸில் ஓர் இடம். "திம்பு" பேச்சுவார்த்தை என்பது போல்) அந்த ஒப்பந்தத்தில் குர்திஸ் இனத்தின் தனித்தன்மை குறித்து சொல்லபட்டடிருந்தாலும் குர்திஸ்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் துருக்கிய பேரரசு அறிவித்துவிட்டது.

ஈராக் மற்றும் குர்திஸ்தான் நிலப்பரப்பானது பிரித்தானிய ஆழுகைக்கு உட்பட்டிருந்ததால் பிரித்தானிய அரசுதான் தமக்கான உரிமையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நம்பியிருந்த குர்தீஸ் மக்களுக்கு துருக்கிய அரசின் நிலைப்பாட்டை பிரித்தானிய அரசு ஏற்றுக் கொண்டமை வெறுப்பை ஏற்படுத்தியது.

இனி சரிவராது போராடியே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஷேக் மகுமுட் ஹஃபீத் (Shaikh Mahumod Hafid) என்ற தலைவனின் கீழ் அணி திரண்டு குர்திஸ்தான் என்ற நாட்டை பிரகடனப்படுத்தி ஒரு அரசாங்கத்தை அமைத்தது மட்டுமல்லாது பிரித்தானிய படைகளுக்கெதிராக விடுதலைப்போராட்டத்தை தொடக்கினார்கள்.
மகுமுட்


இரண்டு வருடங்களின் பின்னர் குர்திஸ்களின் போராட்டத்தை பிரித்தானியா அடக்கியது.

இரண்டுவருட போரால் மிகப் பெரும் உயிர்ச் சேதம் மற்றும் சொத்தழிவுகளை சந்தித்த இனம் மீண்டும் பிரித்தானிய அரசை நச்சரிக்க தொடங்கியது. பிரித்தானிய ஆழுகைக்கு உட்பட்ட தனியாட்சியையாவது கோரி அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். அந்தக் காலப்பகுதியில் எல்லை தொடர்பில் துருக்கியும் பிரித்தானியாவிற்கு தலையிடியாக இருக்க குர்திஸ்தானை அங்கிகரித்து அரசு அமைக்க விட்டார்கள்.

மீண்டும் பிரச்சினை


இந்த நிலையில் ஈராக்கை பிரித்தானியாவிடம் இருந்து விடுவிப்பதற்கு சவுதி மன்னர் பலதரப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு 1932 இல் ஈராக் சுதந்திரம் பெற மீண்டும் குர்திஸ் இனத்திற்கு தலையிடி தொடங்கியது.


ஈராக்கின் வரைபடம் குர்திஸ்தானையும் உள்ளடக்கியபடி வெளியானது. குர்திஸ்தான் ஈராக்கின் ஒரு பகுதியாகவும் குர்திஸ் மக்கள் ஈராக்கின் சிறுபான்மையினராவும் ஆக்கப்பட்டனர்.

மீண்டும் குர்திஸ்கள் மீது இன அழிப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டது. பேசிப் பேசிப் பார்த்த குர்தீஸ்கள் கடைசியாக மீண்டும் ஆயுத ரீதியான போராட்டங்களை தொடங்கினார்கள். தாடர்ச்சியாக உயிர் இழப்பு பொருள் சேதம். இப்படியொரு நீண்ட பயணத்தில் ஈராக் அரசியலில் மாற்றம் நிகழ்ந்தது. சதாம் ஈராக்கின் தலமைப் பதவிக்கு வந்தார்.

சதாமின் சர்வாதிகாரமும் குர்தீஸ்களும்
அடிப்படையில் சதாம் மதச்சார்பற்ற கொள்கையை கொண்டிருந்தாலும் ஈராக்கை அரபிகளின் தேசமாக மாற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

தொழிற்சாலைகளை திறந்தல் கட்டுமானப்பணிகள் என்ற பெயரில் அயல் அரபு நாடுகளில் இருந்து அரபிகளை குர்திஸ்களின் தாயகம் உட்பட சிறுபான்மையினங்களின் இடங்களில் குடியேற்றினார். குர்த்திஸ்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஈராக்கின் தொலைதூர மலைத் டர்களில் குடியேற்றினார்.

இதனால் பொறுமையிழந்த குர்தீஸ்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இந்த இடத்தில்தான் சதாம் சாணக்கியமாக சிந்திக்க தொடங்கினார். தன்னை ஈராக்கின் தலைவனாக காட்டிக் கொள்ளவும் தான் சிறுபான்மை சனங்களுக்கு எதிரி இல்லை என்றும் காட்டிக் கொள்வதற்காக அப்போது குர்திஸ்களின் தலைவராக இருந்த "முல்லா முஸ்தபா அல் பர்ஸானி (Mullah Mustafa Al Barzani) " ஜ அழைத்து "குர்த்திஸ்தான் என்ற தனிநாடு சாத்தியமில்லை" என்று சொன்னது மட்டுமல்லாமல் ஈராக்கின் துணை அதிபர் பதிவியை உருவாக்கி தருவதோடு குர்திஸ்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களை இணைத்து "சுயாட்சி" போன்ற தனி அதிகார அலகை உருவாக்கி தருவதாகவும் பேசினார். தவிர சுயாட்சி அதிகாரத்தில் குர்திஸ் மொழியை அரச மொழியாக ஆக்கிவிடவும் முடியுமென பேசி அனுப்பினார்.

சதாமனின் இந்த பேச்சின் பின்னர் குர்தீஸ்கள் சுயாட்சி அலகிற்கான தமது திட்டத்தை வரைந்து சாதாமிடம் கொடுப்பதற்காக தமது ஆயுத போராட்டங்களை நிறுத்தியிருந்தனர். இந்த சூனிய காலப்பகுதியை பயன்படுத்தி குர்தீஸ் நிலத்தில் அரபிகளை மும்மரமாக குடியேற்றினார். சதாமின் நயவஞ்சம் விளங்கி சுதாகரிப்பதற்குள் சதாமின் படி இறுகியது. சுயாட்சி கோரிக்கை வீசி எறியப்பட்டது.
முல்லா முஸ்தபா அல் பர்ஸானி

மீண்டும் குர்தீஸ்கள் போராட முடிவெடுத்தார்கள். ஈரான் ஆயுத மற்றும் பண உதவிகளை செய்தது. மிகப்பெரிய போரிற்கு தயாரானார்கள்.

குர்தீஸ்களை அழிக்க சதாம் செய்த இன்னொரு சதி


இந்த நிலையில் போரை சந்திக்காமல் குர்தீஸ்களை அடக்க முடியுமா என்ற சிந்தித்தார் சதாம்.


ஈராக்கில் ஷியா முஸ்லீம்கள் அதிகமாக இருந்தாலும் சுனி முஸ்லீம் பிரிவை சேர்ந்த (சிறுபான்மை குழு) சதாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது ஷியா முஸ்லீம்களை அதிகளவில் கொண்டுள்ள ஈரானுக்கு பெரும் வருத்தத்தை தந்திருந்தது. ஈரானுக்கான பல வர்த்தக வழி பொதைகளை சதாம் தடை செய்து வைத்திருந்தார். இதன் முக்கிய பாதைகள் குர்தீஸ்களின் நிலப்பகுதியோடு தொடர்பில் இருந்த பாதைகள். தவிர சில கடல்வழிப் பாதைகளையும் ஈராக் அடைத்துவைத்திருந்தது.

இந்த நிலையில் அடைபட்டுக் கிடக்கும் ஈரானுக்கான வர்த்தக பாதைகளை திறந்துவிடுவதாகவும் மாற்றீடாக குர்தீஸ்களுக்கு ஈரான் உதவக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த டீல் ஈரானுக்கு பெரும் சாதகங்களை உருவாக்க குர்தீஸ்கள் நிர்க்கதியாயினர். சதாம் படைகளினூடான போரில் தாம் பாதுகாப்பாக தங்கியிருக்க உதவிய ஈரானின் எல்லைப்புற மலைகளில் இனி குர்தீஸ்களால் நுழையமுடியாது. குர்தீஸ்களை ஈராக்கிய இராணுவ எல்லைக்குள் முடக்கிய சதாம் குர்தீஸ் இனத்தின் மீது கொலைவெறித் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை பெருமெடுப்பில் சிதைத்து சமூக சமநிலையை குலைத்தார்.

குர்தீஸ்கள் மீதான இன அழிப்பின் உச்சம்


சதாமைப் பொறுத்தவரை அவர் ரஸ்ஸிய கம்யூனிஸ்டான சர்வாதிகாரி ஸ்டாலினை பின்பற்றுவபவர் (கம்யூனிஸத்தை அல்ல). எதிரிகள் அல்லது எதிர்காலத்தில் இடைஞ்சலாக இருப்பவர்கள் என நினைப்பவர்கள் எல்லோரையும் அழித்துவிட வேண்டும் என்ற கொள்கை.


சதாமின் கைகள் பலம் பெற சதாமிற்கு ஈரான் மீதான பார்வை வலுத்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தி எண்ணைவள நிலங்கள் சிலவற்றை அபகரிக்க வேண்டும் என்ற ஆசை (அமெரிக்கா கொம்பு சீவியது என்பது பெரும்கதை) இந்த நேரத்தில் தனது பெரும் தாக்குதலில் உச்ச அளவு தொழினுட்பத்தை பாவிக்க வேண்டும் என்று நினைத்த சதாம் உலக கறுப்புச் சந்தைகளில் இருந்து இரசாயண ஆயுத மூலங்களை இறக்குமதி செய்து இராசண ஆயுத தயாரிப்பில் இறங்கினார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடங்கியது. எட்டு வருடங்கள் தொடர்ந்த போரின் இறுதி காலப்பகுதியில் தான் தயாரித்த இரசாண ஆயுதங்களை உச்சக்கட்டமாக பாவிக்க தொடங்கினார்.

சதாம் இரண்டுவிதமான இரசாண ஆயுதங்களை தயாரித்திருந்தார்
1. சல்ஃபர் மஸ்ரட் (Sulfur Mustad)
2. சரின் (Sarin)


சல்பர் மஸ்ரட் எனப்படும் ஆயுத்தின் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு சில மணித்தியாலங்களுக்குள் கண்ணெரிவு மற்றும் இருமல் வரும். பின்னர் கண்பார்வை போய்விடும்.



சரின் எனப்படும் ஆயுதத்தின் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் நரம்பு மட்டலம் தாக்கப்பட்டு உடனடியாகவே இறந்துவிடுவார்கள்.


ஈரான் மீது இராசாயண தாக்குதல் நடத்தும் அதேவேளை தனது "அரபு தேச" கனவிற்கு இடையூறாக இருக்கும் குர்தீஸ் இனத்தையும் அடியோடு அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஈரான் மீது தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குர்தீஸ்கள் ஈராக்கை காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற பெயரில் குர்தீஸ்கள் மீதும் இரசாயணத் தாக்குதல் நடைபெற்றது.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான குர்தீஸ்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோல் நிரந்தர ஊனமாகினர். வித்தியாசம் வித்தியாசமான நோய்களுக்கு உள்ளாகினர்.

இந்த தடவை குர்தீஸ் இனம் முற்றுமுழுதாக தனது சமூக கட்டமைப்பை இழந்தது. வாழ்வியல் சமநிலை குலைந்து போய் முடற்கினர்.

குர்தீஸ்களால் இனி மீண்டெழ முடியாது என்ற நிலை உருவாக்கபட்டு சதாம் தனது சர்வாதிகாரத்தை தொடரந்தார்.
விஷ வாயு தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள்

விஷ வாயு தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள்

விஷ வாயு தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள்

மீண்டும் சுயாட்சிக் கோரிக்கை


மாண்டு போன குர்தீஸ்களின் அடுத்த தலைமுறை மீண்டும் துளிர்த்தது. அமெரிக்க படைகளால் சதாம் கொல்லப்பட ஈராக்கிய நிர்வாகத்திற்குட்பட்ட சுயாட்சி கோரிக்கையை குர்தீஸ்கள் கேட்டு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஒருவாறு அதையும் பெற்றுக் கொண்டு தமது நிர்வாகம் மற்றும் இராணுவத்தை கட்டமைத்து சமூக திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.


வலுத்துவிட்ட தனிநாட்டு கோரிக்கை


இந்த நிலையில் சதாம் ஆதரவு சுனி முஸ்லீம் பிரிவு "இஸ்லாமிய அரபு தேச" கோரிக்கையோடு ISIS என்ற பெயருடன் தீவிரவாத அமைப்பு நிலங்களை கைப்பற்றும் படையெடுப்புகளை செய்ய ஆரம்பித்தனர்.


இந்த தீவிரவாத அமைப்பு ஷியா பிரிவினரை கொடுமைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஈராக்கில் இருந்த மற்றைய சிறுபான்மை இனங்களையும் அழிக்க வேண்டும் என்ன முனைப்புடன் வேலைகளை தொடங்கினர்.

சுனி தவிர்ந்த வேறு இனப் பெண்கள் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டனர். ISIS  பார்வை குர்தீஸ்கள் மீதும் விழுந்தது.

சுயாட்சி அதிகாரத்தில் இருந்த குர்திஸ்களின் நிலத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் போரை தீவிரப்படுத்தினர்.

நூற்றாண்டுகாலமாக இன விடுதலைக்காக போராடிவரும் குர்தீஸ் இனத்தின் இந்த தலைமுறை ஒரு இஞ்சி நிலத்தையும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு தள்ளப்பட்டனர்.

குர்தீஸ் இனத்தின் இந்த தலைமுறை பெண் போராளிகள் (இராணுவம்) மத்தியகிழக்கில் மாத்திரமல்ல உலகளவில் வியந்துபார்க்கும் வகையில் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தனர்.

தமது நிலத்தை பாதுகாப்பதற்கா ISIS அமைப்புக்கு எதிரான தமது போராட்டத்தற்கு ஆயுத உதவி மாத்திரம் செய்யும்படியும் ISIS அமைப்பு தம் நிலத்தை நெருங்கவிடாது தம்மால் பாதுகாக்க முடியும் எனவும் அறிவித்தனர். அதில் வெற்றியும் கண்டனர்.

இந்த நிலையில் ISIS இன் "அரபு தேச" (சதாமின் கனவு) தீவிரவாதம் உச்சமடைந்திருக்கும் நிலையில் தாம் ஈராக்கில் இருந்து பிரிந்து குர்திஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
குர்தீஸின் இந்த தலைமுறை பெண் போராளிகள் (அல்லது இராணுவம்)

குர்தீஸின் இந்த தலைமுறை பெண் போராளிகள் (அல்லது இராணுவம்)

நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு சுயாட்சி சமஸ்டி போன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு பின்னர் ஏமாற்றப்பட்டு இன அழிவுகளுக்கு உள்ளானாலும் மீண்டு எழ முடியாது என கணிக்கப்பட்டிருந்த குர்திஸ் இனத்தின் இந்த தலைமுறை தனிநாட்டு கோரிக்கையை கைவிடும் எண்ணத்தில் இல்லாத ஒரு வீரியமிக்க தலைமுறையாக பிறப்பெடுத்திருக்கிறது.

குர்திஸ் போராளிகள் (அல்லது இராணுவம்)

குர்திஸ் போராளிகள் (அல்லது இராணுவம்)

முன்நாள் போராளிகளும் களத்தில்
குர்திஸ் போராளிகள் 
(அல்லது இராணுவம்)

குர்தீஸ் இனத்திற்கு குர்திஸ்தான் இந்த நூற்றாண்டுக்குள் கிடைத்துவிடும். ஏன் இன்னும் சில வருடங்களுக்குள் கூட சாத்தியமாகாலம்.

குர்திஸ் மக்களுக்கு தனிநாடு சாத்தியமாகட்டும்.

மா.குருபரன்
18-07-2015

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க