இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் (ஆதரவாளர்கள் மற்றும் சில உறுப்பினர்களுக்கிடையில்) நடந்து வரும் பனிப் போரானது தேர்தல் புறக்கணிப்பு சம்மந்தமானது.
இரண்டு கட்சிகளின் கோட்பாடுகளை ஞாபகப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.
த.தே.கூட்டமைப்பு (வீடு) : சுயாட்சி,சமஷ்டி (சுய நிர்ணய உரிமை)
த.தே.ம.முன்னணி (சைக்கிள்) : ஒரு நாடு இருதேசம் (சமஷ்டி கொள்கை, சுயநிர்ணய உரிமை)
1. ஜனாதிபதி தேர்தலுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குமான வித்தியாசம் என்ன?
2. இரண்டிலுமான தமிழர்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?
3. ஏன் இரண்டு தேர்தலுக்கும் இப்படி வித்தியாசமான போக்கு?
இளைஞர்கள் நுனிப்புல்லை மேயாமல் ஆகக் குறைந்தது பொது அறிவையாவது பயன்படுத்தணும்.
இரண்டு கட்சிகளின் கொள்கையுமே சமஷ்டி அரசியல் கொள்கையை அடிப்படையாக கொண்டது. அதாவது அதிகார பரவலாக்கத்தின் கூறு. அப்படியென்றால் அதிகார பரவலாக்கம் அல்லது சமஷ்டி என்றால் என்ன?
சமஸ்டி என்பது சுயநிர்ணத்தின் அடிப்படையில் உருவாகின்ற அம்சமாக கருதப்படுகின்றது. அதாவது இந்த அதிகார பரவலாக்கம் சுயநிர்ணயம் கொண்ட பிரதேசத்தின் இனத்தின் இருப்புகளை சாத்தியப்படுத்துகிற அதிகாரத்தை மட்டுமே கொண்டிராது சுயமுடிவுகளையும் சுய தீர்வுகளையும் ஏற்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வலுவை கொண்ட பிராந்திய அமைப்பாக விளங்குவதைக் குறிக்கும்.
தமிழருக்கான அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த அரசோடு சலுகைகளுக்கு விலைபோகமல் பேசப்பட வேண்டி ஒன்று. தவிர இன்று இலங்கையில் தனிப்பெரும்பான்மை வாக்குகளை பெற்று தனி நபர் ஜனாதிபதி ஆக முடியாது. கூட்டணிகள் அமைத்து, கூட்டணியால் பிரேரிக்கப்படும் நபரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவே முடியும். அதாவது இலங்கை ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் அரசியல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது.
மகிந்தவை மாற்றி மைத்திரியை கொண்டுவருவதால் த.தே.கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பாவித்து நடைமுறைப்படுத்துவார் என்று சொல்வதும் மகிந்த இருந்தபடியால்தான் த.தே.கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கை சாத்தியப்படவில்லை என்று சொல்வதும் அறிவு கெட்ட முட்டாள்தனம்.
இலங்கை ஜனாதிபதியை மாற்றுவதால் தமிழர்களுக்கான தீர்வு பற்றிய நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சுமந்திரன் சொல்வது போல் "மக்களே!! மைத்திரியை ஜனாதிபதியாக்கி உங்களை அடையாள அட்டை இல்லாமல் வீதியில் பயணிக்க வைத்தோம்" என்று சொல்வது த.தே.கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையின் கூறு அன்று.
ஜனாதிபதி தேர்தல் என்பது நாட்டின் மன்னன் என்ற தனி நபரை தேர்வு செய்வதற்கானது. அதனால் தமிழர்களுக்கு எந்த அரசியல் விடுதலையும் கிடைக்கப் போவதில்லை. காரணம் அவர் தமிழர்களின் பிரதிநிதி மாத்திரம் இல்லை. அதனால் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பால் தமிழர்கள் சில சலுகைகளை இழப்பார்களே (அல்லது மாற்றம் இல்லை) தவிர உரிமையை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் வராது.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் அப்படியல்ல. இது எமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல். பிரிக்கப்படாத இலங்கைக்குள் சமஷ்டியை அரசுடன் பேசச் சொல்லி நாங்கள் அனுப்பும் பிரதி நிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் இரண்டு கட்சிகளும் கோரும் சமஷ்டி ஆட்சிக்குரிய நிலமானது, சர்வதேசத்திற்கும் அரசிற்கும் மிகப் பெரிய செய்தியை சொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். சமஷ்டி என்பதே எமக்கான சுய அடையாளத்தை காட்டுவது தானே. இதைவிட எந்த சந்தர்பத்தில் எமது அடையாளத்தை காட்டுவது?? மொத்த இலங்கையும் இரண்டு பேரில் ஒருவரை தெரிவு செய்வதற்கு வாக்களிக்கும் போது, எமக்கு யார்வந்தாலும் பரவாயில்லை எமக்கு சமஷ்டிதான் தேவை என்று சொல்ல ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை விட வேறு எப்படி காட்ட முடியும்??
பாராளுமன்ற தேர்தல் என்பது மக்கள் தமது பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கானது. பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனம் செல்வாக்குச் செலுத்துகிறது என்று யாராவது மடையனுகள் தான் கதையளக்க முடியும்.
மக்கள் தங்களுக்கு தெரிந்த அல்லது நம்பிக்கையான ஒருவரை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வார்கள் அல்லது கட்சி அடிப்படையில் தெரிவு செய்வார்களே தவிர தேர்தல் விங்ஞாபனத்தின் அடிப்படையில் அல்ல. தேர்தல் விஞ்ஞாபனம் எல்லாம் பேக்காட்டல் விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பானது காலப்பொருத்தமற்றதாக இருந்திருக்கலாம் (அவர்கள் சார்பில் பாராளுமன்றத்தில் யாருமில்லை) ஆனால் அது வரலாற்றுத் தவறாக பதியப்படப் போவதில்லை.
மேலும் சின்ன விளக்கம்
சிறிலங்கா அரச பாராளுமன்ற தேர்தலுக்காக வடகிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் ஆளையாள் அடிபடுவதை பார்க்க அமர்தலிங்கத்தின் கால தேர்தல் குறிப்புகள் ஞாபகம் வருகிறது.
துரோகி என்ற சொற்பதத்தை தமிழர் அரசியல் மட்டத்தில் முதலில் பாவிக்க தொடங்கியது தமிழரசுக் கட்சியின் அமிர்தலிங்கம் அவர்கள்தான். (ஏன் அமிர்தலிங்கத்திற்காக தான் துரையப்பாவை துரோகி என அறிவித்து த.தே.தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் கொன்றதாகவும் பதிவுகள் இருக்கிறது. பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரை சிறிலங்கா பொலிஸிடம் காட்டிக் கொடுத்துவிட்டு (தன் மகனின் பேரையும் இணைத்து) அதன் சாக்கில் தன் மகனை லண்டனுக்கு அனுப்பியவர் அமர்தலிங்கம் எனவும் பதிவுகள் இருக்கிறது)
இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு உந்தப்பட்டதில் தமிழரசுக் கட்சிக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதைவிட அதிகமாக அவர்களை சுக்குநூறாக உடைத்தது மாத்திரமில்லாமல் மிகச்சிறந்த பிற தமிழ் அரசியல்வாதிகளையும் அழித்ததில் பங்கிருக்கிறது.
அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரை ஆயுதந்தூக்கிய இளைஞர்கள் தமிழரசுக் கட்சியின் குண்டர் படையாக இருக்க வேண்டுமென்று விரும்பினாரே தவிர விடுதலைக்காக போராடுவதை விரும்பவில்லை. இளைஞர்கள் தலைவர்கள் ஆவதை விரும்பவில்லை. தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து இளைஞர்கள் போராடுவதை விரும்பவில்லை.
தான்தான் தமிழர்களின் தலைவன் என்றும் அதற்காக எதையும் செய்யும் மனநிலையில் அமிர்தலிங்கம் இருந்தார். சிவகுமாரண்ணையை சிறிலங்கா காவல்துறையில் காட்டிக் கொடுத்து பலி எடுத்துவிட்டு சிவகுமாரண்ணையின் இறுதிச்சடங்கை நடத்திய பெரும் தலைவன் தான் அமிர்தலிங்கம் அவர்கள். அதாவது தமிழரசுக் கட்சியானது அதிகார மோகம் கொண்ட அரசியல் பிரிவாக அதன் ஆரம்பத்திலேயே வளர்க்கப்பட்டடுவிட்டது. அதை இனி மாற்ற முடியாது. இங்கு அதிகார மோகம் என்று நான் சொல்வது அமைச்சுப் பதவியை அல்ல.
மா.குருபரன்
31-07-2015
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க