Wednesday, August 19, 2015

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்த சரிவராத கட்சி

0 கருத்துக்கள்
விமர்சனங்கள் அல்லது தகவல் பிழை இருந்தால் தெரியப்படுத்துங்கள் (webkuru@gmail.com)

1944ம் ஆண்டு ஜி.ஜி.பொன்னம் அவர்களால் உருவாக்கபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் இலக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சி அல்ல. ஏன் என்பதையும் தமிழ் மக்களின் ஆத்ம உணர்வு ஏன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இல் இருந்து விலகுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த பதிவு ஒரு கட்சி பற்றிய பதிவே. தனிப்பட்ட கட்சி ரீதியில் வாசிக்காமல் தமிழர் நலன் என்ற பொதுப்பார்வையில் இருந்து வாசியுங்கள்.

தமிழர்கள் கட்சி ரீதியாக பிளவு படுவதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

அதனால்தான் அனைத்துக் கட்சிகளும் அடங்கிய கூட்டமைப்பை விமர்சனங்களுக்கும் அப்பால் ஆதரிக்க வேண்டி இருக்கிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் த.தே.கூட்டமைப்பில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்றவராக இருந்திருப்பார் என்பது மாத்திரமல்ல இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் சுமந்திரன் போன்றோரும் உள்ளே வந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு தொர்ந்து வாசியுங்கள்.

விடையத்திற்கு வருகிறேன்.

தென்னிலங்கைச் சிங்களவர்கள் சமஸ்டி பற்றிய கருத்தியலை கொண்டிருந்தார்கள். 1925 இல் கண்டியில் தேசிய மாநாட்டை கூடிய S.W.R.D பண்டாரநாயக்க சமஷ்டி கருத்தை முன்வைத்தார். வடகிழக்கு பிரதேசம் கண்டிப் பிரதேசம் கரையோர பரதேசம் என்ற கோரிக்கையை முன்வைத்தது மட்டுமல்லாது "யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்" இன் உதவியையும் நாடியிருந்தார். ஆனால் "யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்" அதை நிராகரித்து "ஒற்றை ஆட்சியில் இனங்களின் உரிமை பாதுகாக்க வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்தனர். (உசாத்துணை: இலங்கை சுருக்க வரலாறு, கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா)

"யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்" இன் தன்னிச்சையான முடிவின் பின்னர் சமஷ்டி எண்ணக் கரு இல்லாமல் செய்யப்பட்டு ஒற்றையாட்சி என்ற நிலைப்பாடு வலுவாக்கபட்டது.

இந்த நிலையில் 1944 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களால் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் உருவாக்கப்பட்டு (1925 யாழ்ப்பாண காங்கிரஸ் காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வயது 24கள்) தமிழர்களுக்கான பிரதிநித்துவத்தை கேட்டது மட்டுமல்லாது மலைய தமிழர்களின் உரிமைப் பறிப்பிற்கும் காரணகர்த்தாவாக விளங்கியது. "யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்" இன் கொள்கைகள் "அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்" இல் காணப்படுவதாக சொல்கிறார்கள்.

அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் இன் தலைமையானது செல்வந்தர்கள் மட்டத்தில் செல்வாக்குள்ள வெளிநாடுகளில் கல்விகற்ற யாழ்ப்பாணத்தவர்களை மாத்திரமே கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்று. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன் தலைமைக்குள் (அல்லது முடிவெடுக்கும் அதிகாரத்திற்குள்) சாதாரண யாழ்ப்பாண கிராமத்தை சேர்ந்தவர்கள் கூட நுழைய முடியாதவாறு கட்டியமைக்கப்பட்ட ஒன்று.


இந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன் அடிப்படை சித்தாந்தத்தை புரிந்து கொண்ட செல்வநாயகம் (தந்தை செல்வா) உள்ளிட்டவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து விலகி 1949 இல் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள். அதன் பின்னர் தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து விலக ஆரம்பித்தார்கள். 

ஜ.ஜி.பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின்னர் குடும்ப வாரிசான குமார்பொன்னம்பலம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைமைப் பதவியை எடுத்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தாலும் தனித்து நின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸை மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

குமார் பொன்னம்பலம் அவர்கள் எல்லா தேர்தல்களிலும் தோல்வியுற்றார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தமிழ்த் தேசியத்தில் பற்றிருந்தாலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸானது எப்போதும் தமிழ் மக்களை வர்க்க ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரிக்க கூடிய ஆபத்தை தன்னகத்தே உருமறைப்பு செய்து வளர்த்து வரும் கட்சி என்பது எல்லா தமிழ் மக்கள் மத்தியிலும் ஆளமாக பதிந்துவிட்ட ஒன்று.

இன்று கூட குடும்ப வாரிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கட்சியின் தலைமைப்பதவியை வைத்திருந்தாலும் அதன் ஆலோசகர்கள் சாதார மக்கள், பிற மாவட்ட மக்களிடம் இருந்து அந்நியப்பட்டவர்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியம் பேச வேண்டுமென்றால் வடகிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தலைமைப்பீடம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடக்காது. காரணம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உருவாக்கபட்டகாலத்தில் இருந்து அதன் தன்மை மாறவில்லை.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 

ஏராளமான விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடகிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையிலும் தலைமைப் பீடத்தில் (அல்லது முடிவெடுக்கும் அதிகாரத்தில்) வடக்கு கிழக்கு இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்த கூடியவர்களை உள்ளடக்கியிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலதரப்பட்ட பின்னணியை உள்ளவர்களை உள்ளடக்கிய அமைப்பு என்பதால் தன்னிச்சையாக யாராலும் முடிவெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் காணப்பட்டாலும் குறைந்தபட்ட எதிர்பை தெரிவிக்கவாவது அதற்குள் வேறு கட்சியினர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.



தமிழர்களின் எதிர்காலம்

வடகிழக்கைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் எந்தவொரு தனிக் கட்சியின் பின்னாலும் போவதற்கு தயாராக இல்லை என்பது கடந்தகால வரலாறு.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது வரட்டு கௌரவத்தை தூக்கி எறிந்துவிட்டு அனைத்து தரப்போடும் ஒன்றிணைந்து செயற்பட தயாராக வேண்டும்.

மா.குருபரன்
19-08-2015


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க