Tuesday, October 6, 2015

எங்களை மன்னித்துவிடு தங்கச்சி!!

0 கருத்துக்கள்
புகைப்படம்: முள்ளிவாய்க்கால் வரை சென்ற கமரா - அமரதாஸ் 
எங்களை மன்னித்துவிடு தங்கச்சி!
நாங்கள் தோற்றுப் போனவர்கள்!
ஈழத் தமிழர் நாங்கள்
தோற்றுப் போனவர்கள்!

ஜ.நா என்ற
அமெரிக்க அந்தப்புரத்திற்கும் - அதன்
புலம்பெயர் எடுபிடிகளுக்கும்
உன் குருதி
ஒரு பொருட்டேயல்ல!!

உன் தலையால்
வழிந்தோடும் குருதி
சரியா பிழையா என
விவாதம் நடக்கும்!
மெய்யா பொய்யா என
விசாரணை நடக்கும்!!

செங்குருதி சிறுதுணிக்கையும்
வெண்குருதி சிறுதுணிக்கையும்
உறுதிப்படுத்தாதவரை - உன்
தலையால் வழிவது
குருதியாகாது என
சட்டம் பேச
சுமந்திரன்கள் வருவர்!!
எங்களை மன்னித்துவிடு தங்கச்சி
நாங்கள் தோற்றுப் போனவர்கள்!!

உன் விழியில் தெரியும்
மரண விம்பம் - உன்
உறவு யாருடையதாகவோ இருக்கலாம்!!
அல்லது
உன் நண்பியின் சாவாக கூட இருக்கலாம்

ஏக்கங்களை தின்று
மெல்ல முடியாமல் தவிக்கும் - உன்
கண்களும் உதடும்
இந்த பாழ்பட்ட உலகத்தை
தட்டியெழுப்ப போதுமானவையல்ல!!
நீ ஈழத் தமிழ்க் குழந்தை - உன்
வலி
யாரையும் உலுக்கப் போவதில்லை!!
உன் குருதியும் ஏக்கமும்
உலக நீதியில் ஒரு பொருட்டே இல்லை!!

எங்களை மன்னித்துவிடு தங்கச்சி!!
நாங்கள் தோற்றுப் போனவர்கள்!!
வலுவிழந்தும்
விண்ணாணம் பேசும் போலிகள் நாங்கள்!!
எங்களை மன்னித்துவிடு தங்கச்சி.

மா.குருபரன்
06-10-2015

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க