Monday, April 11, 2016

போராளிகளின் சாவும் தமிழர்கள் மேல் திணிக்கப்படும் பொருத்து வீடுகளும்

0 கருத்துக்கள்
காலத்திற்கு காலம் நிலமைகளை(Trend) திசை திருப்பி அதனூடு சாணக்கியமாக அரசியல் செய்வதில் ரணில் கில்லாடி என்பதற்கு அப்பால் அந்த அரசியலினூடு தமிழர்களை பிரித்தாழ்வதிலும் சாமர்த்தியசாலி.

புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகள் புற்றுநோயால் மடிந்துகொண்டிருப்பது குறித்த பார்வை வலுக்கும் போது அதை "பொருத்து வீடுகள்" மூலம் திசை திருப்பிவிடுவதில் "ரணில்-மைத்திரி நல்லரசு" மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

2009 ற்கு பிறகு வடக்கில் அதிகரித்திருக்கும் புற்று நோய் மரணங்கள் குறித்து தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வாய்திறக்க மறுக்கின்றனர். புற்று நோயால் பாதிக்கபட்டிருக்கும் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகள் மற்றும் மக்களை வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்வதோடு வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய்க்கான மூல காரணத்தை பகிரங்கப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும்.

புற்றுநோய் என்பது அரசியல் கொலைகளுக்கு பாவிக்கப்படும் ஆயுதமாக உலகின் பல இடங்களில் காணப்படும் நிலையில் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகளின் சாவுகள் சந்தேகத்தை உருவாக்குவது தவிர்க்கப்பட முடியாதது


சம்மந்தர் மற்றும் டக்கிளஸ் தேவானந்தா முதல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரை இந்த புற்றுநோய் விடையத்தில் அதீத மௌனம் செலுத்திவருகின்றனர். வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய் குறித்து சர்வதேச ஆய்வு மற்றும் விசாரணை செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான போராட்டங்களை தமிழர் தரப்பு செய்ய முன்வர வேண்டும்.

மக்களுக்கான அரசியல் செய்ய தயங்கின் இந்த தலமைகள் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும்.

பொருத்து வீடுகள்
புற்றுநோய் சாவுகள் குறித்த செய்திகளின் முக்கியத்துவத்தை மறைப்பதற்காகதான் இந்த பொருத்து வீடுகள் குறித்த சர்ச்சை முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பொருத்துவீடுகளின் பின்னால் உள்ள அரசியல் மிக மோசமானது.

டியுரா (Durra board) ரக மூலப்பொருட்களால் தயார்ப்படுத்தப்படும் இவ்வகையான வீடுகள் அதிக அளவில் இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் இந்தோனேஷியா பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

இவ்வகையான வீடுகளின் முழுசெயற்திறனானது ஆகக் கூடியது 15 தொடக்கம் 20 ஆண்டுகளே. இலங்கைபோன்ற நாடுகளில் இந்த வீடுகள் இராணுவ தேவைகளுக்காகவே அறிமுகப்படுத்தபட்டது. சராசரி 600 சதுர அடி அளவு வீடு ஒன்றை முழுமையாக நிர்மானிப்பதற்கு அண்ணளவாக 12 லட்சம் (1.2 மில்லியன்) இலங்கை ரூபாய்கள் தேவைப்படும்.

ஆக ஆகக் குறைந்தது 12 லட்சம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படும் இந்த பொருத்துவீடுகளை தமிழர் தாயகத்தில் நிர்மாணிப்பதற்கு எதற்காக இலங்கை இந்திய அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்துகின்றன? பாரிய இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் மலையக மக்களுக்கு கூட சிபாரிசு செய்யப்படாத இந்த பொருத்து வீடுகளை வடக்கில் எதற்காக திணிக்க வேண்டும்.

பொருத்து வீடுகளிற்கு செலவழிக்கும் பணத்திற்கு அதே அளவிலான கல் வீடுகளை பயனாளர்களின் உதவியுடன் கட்ட முடியும்.


2007 இல் பொருத்து வீடுகள் சம்மந்தமான போட்டி ஒன்றிற்கு செய்யப்பட்ட மாதிரி வீடு. இதன் Estimation team இல் நானும் பங்குபற்றியிருந்தேன். 
பொருத்து வீடுகளை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் (Material) பட்டியல் மற்றும் ஒரு வீட்டிற்கான மொத்த செலவின் பட்டியலை சிறிலங்கா அரசு மக்களுக்கு வெளிப்படுத்துமா? இந்த வீடுகளின் உத்தரவாத காலத்தை (Warranty Period) அரசு வெளிப்படுத்துமா?

"ஒருவனை வீழ்த்த வேண்டும் என்றால் அவனின் ஆசைகளை தூண்ட வேண்டும்" என்ற நடை முறை உலக ஒழுங்கிற்கு இணங்க மக்களின் நலிந்த வாழ்வை சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கு தற்காலிக ஆசைகளை தூண்டி தமது அரசியலை பக்காவாக செய்கிறது ".

இந்த வீடுகளின் உத்தரவாத காலம் முடிந்தவுடன் இந்த வீடகள் திருத்த வேண்டிய நிலமை ஏற்படும் பட்சத்தில் அதற்கான பொருட்கள் உள்ளுர் சந்தைகளில் கிடைக்குமா? அதற்கான செலவுகளை பயனாளிகள் எப்படி பொறுப்பர்?

வெறுமனே தற்காலிக ஆசைகளில் எடுபடாமல் பொருத்து வீடுகளை நிராகத்து அந்த பணத்திற்கு சரியான பொருத்தமான வீடுகளை வடக்கிற்கு கொண்டுவருவதும் வடக்கு மாகாண அரசின் வெற்றிதான். அதை த.தே.கூட்டமைப்பின் வடமாகாண அரசு செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் டக்களஸ் தேவானந்தா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் மக்களுக்கான "சரியான" வீடுகளை வலியுறுத்தி போராட்டஙக்ளையும் கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டும்.

மா.குருபரன்
11-04-2016


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க